PUBLISHED ON : ஜூன் 13, 2024 12:00 AM

அறிவியல் ஆயிரம்
முதல் விண்வெளி ஏவுதளம்
உலகின் முதல் செயற்கைக்கோளான 'ஸ்புட்னிக்-1', விண்வெளிக்கு மனிதனை சுமந்து சென்ற முதல் விண்கலம் 'விஸ்டாக் - 1' ஆகியவை கஜகஸ்தானின் பைக்கனுார் விண்வெளி ஏவுதளத்தில் இருந்து ஏவப் பட்டன. இதுதான் உலகின் முதல் பெரிய ஏவுதளம். இது 1955 ஜூன் 2ல் அப்போதைய சோவியத் யூனியனால் அமைக்கப்பட்டது. இது ஏரல் கடலில் இருந்து 200 கி.மீ., தொலைவில் பாலை புல்வெளிப்பகுதியில் உள்ளது. இதை 2050 வரை ரஷ்யாவுக்கு, கஜகஸ்தான் அரசு குத்தகைக்கு வழங்கியுள்ளது. விண்வெளிக்கு சென்ற முதல் வீரர் யூரி காகரின் நினைவாக, அவரது பெயர் இதற்கு சூட்டப்பட்டது.
தகவல் சுரங்கம்
சர்வதேச அல்பினிசம் தினம்
'அல்பினிசம்' (வெண்தோல் குறைபாடு) என்பது ஒரு நபரின் முடி, தோல், கண்களில் மெலனின் நிறமி குறைவாகவோ அல்லது உற்பத்தி செய்யாமலோ இருக்கும் போது ஏற்படும் ஒரு மரபணு கோளாறு. இதனால் இவர்களால் சூரிய ஒளி, பிரகாசமான ஒளியை எதிர்கொள்ள முடிவதில்லை. தோற்றத்தால் சமூகத்தில் பல இன்னல்களை இவர்கள் சந்திக்கின்றனர். இதுகுறித்து விழிப்புணர்வு ஏற்படுத்தும் விதமாக ஐ.நா., சார்பில் ஜூன் 13ல் சர்வதேச அல்பினிசம் தினம் கடை பிடிக்கப்படுகிறது. வட அமெரிக்கா, ஐரோப்பாவில் 20 ஆயிரம் பேரில் ஒருவருக்கு இப்பாதிப்பு உள்ளது.