PUBLISHED ON : ஜூன் 04, 2025 12:00 AM

'ஏற்கனவே இவரது அட்டூழியம் தெரிந்துதான், கட்சியில் இருந்து ஓரங்கட்டி வைக்கப்பட்டிருந்தார். இப்போது, மறுபடியும் ஆட்டத்தை ஆரம்பித்து விட்டாரே...' என, உ.பி., முன்னாள் முதல்வரும், பகுஜன் சமாஜ் கட்சி தலைவருமான மாயாவதியின் மருமகன் ஆகாஷ் ஆனந்த் பற்றி கவலையுடன் பேசுகின்றனர், அந்த கட்சியின் மூத்த நிர்வாகிகள்.
மாயாவதி, தனக்குப் பின் அரசியல் வாரிசாக தன் மருமகன் ஆகாஷ் ஆனந்தை நியமிக்க திட்டமிட்டு, கட்சியில் அவருக்கு முக்கியமான பொறுப்பும் கொடுத்திருந்தார்.
ஆனால், ஆகாஷ் ஆனந்த், தன் மாமனாரின் சொல்படி நடப்பதாக மாயாவதிக்கு புகார்கள் வந்தன.
பொறுத்து பொறுத்து பார்த்த மாயாவதி, ஆகாஷ் ஆனந்தை கட்சியில் இருந்து ஓரங்கட்டினார். சமீபத்தில், தன் முடிவை மாற்றிய மாயாவதி, மீண்டும் ஆகாஷ் ஆனந்தை கட்சியில் சேர்த்ததுடன், கட்சியின் தேசிய ஒருங்கிணைப்பாளர் என்ற முக்கியமான பதவியையும் அவருக்கு கொடுத்தார்.
'சில நாட்கள் அமைதியாக இருந்த ஆகாஷ் ஆனந்த், இப்போது வழக்கம்போல் ஆட்டத்தை ஆரம்பித்து விட்டார். கட்சி நிர்வாகிகளை மதிப்பது இல்லை. மூத்த நிர்வாகிகளை கூண்டோடு மாற்றுவதற்கு திட்டமிட்டுள்ளார். தனக்கு விசுவாசமானவர்களுக்கு பொறுப்பு கொடுக்கிறார்' என, புலம்பல்கள் அதிகரித்துள்ளன.
இதனால், மீண்டும் மாயாவதின் கோபப்பார்வை, ஆகாஷ் ஆனந்த் மீது திரும்புமா என்ற எதிர்பார்ப்பு, பகுஜன் சமாஜ் கட்சி நிர்வாகிகளிடையே ஏற்பட்டுள்ளது.