PUBLISHED ON : மே 31, 2025 12:00 AM

'குறிப்பிட்ட சமூகத்தின் ஓட்டுகளை மட்டும் வைத்து வெற்றி பெற முடியாது என்பது, சமாஜ்வாதி கட்சி தலைவர் அகிலேஷ் யாதவுக்கு இப்போதாவது புரிந்ததே...' என்கின்றனர், உத்தர பிரதேச மாநில மக்கள்.
இங்கு, முதல்வர் யோகி ஆதித்யநாத் தலைமையிலான, பா.ஜ., ஆட்சி நடக்கிறது. தொடர்ச்சியாக, இரண்டு சட்டசபை தேர்தல்களிலும் தோல்வி அடைந்ததால், அடுத்த தேர்தலில் வெற்றி பெற வேண்டிய கட்டாயத்தில் உள்ளார், அகிலேஷ் யாதவ்.
இதற்காக, தன் அரசியல் வியூகத்தை தற்போது மாற்றி அமைத்துள்ளார். இதற்கு முந்தைய தேர்தல்களில் எல்லாம், முஸ்லிம் மற்றும் யாதவ சமூகத்தினரின் ஓட்டுகளை மட்டும் பெறுவதற்கான வியூகத்தை வகுத்தார், அகிலேஷ் யாதவ்.
அந்த சமூகத்தினரின் ஓட்டுகள் கணிசமாக கிடைத்தாலும், ஆட்சியை பிடிக்க போதுமானதாக இல்லை. இதையடுத்து, உயர் பிரிவு சமூகத்தினர் ஓட்டுகளையும் வளைக்க, அடுத்த தேர்தலுக்காக வியூகம் வகுத்துள்ளார்.
இதற்காக, மாநிலம் முழுதும் சுற்றுப் பயணம் செய்து, உயர் பிரிவு சமூகங்களின் தலைவர்களை சந்தித்து, தங்கள் கட்சியை ஆதரிக்கும்படி வேண்டுகோள் விடுக்க முடிவு செய்துள்ளார், அகிலேஷ் யாதவ்.
தங்கள் கட்சியின் பிரசார போஸ்டர்களிலும், 'இதர பிற்படுத்தப்பட்டோர், சிறுபான்மையினர், தலித், உயர் வகுப்பினருக்கான கட்சி...' என, தவறாமல் அச்சிடவும் நிர்வாகிகளுக்கு உத்தரவிட்டுள்ளார்.
இதைக் கேள்விப்பட்ட உ.பி., மக்கள், 'அகிலேஷ் யாதவிடம் ஆரோக்கியமான மாற்றம் தென்படுகிறது; இந்த மாற்றம் அவருக்கு கை கொடுக்குமா என பார்க்கலாம்...' என்கின்றனர்.