PUBLISHED ON : மே 21, 2025 12:00 AM

'கட்சியில் என்ன நடக்குது என்றே தெரியவில்லை; ஒரே குழப்பமாக இருக்கிறது...' என, புலம்புகின்றனர், மாயாவதியின் பகுஜன் சமாஜ் கட்சி நிர்வாகிகள்.
உத்தர பிரதேச மாநில முன்னாள் முதல்வரான மாயாவதி, சில ஆண்டுகளுக்கு முன் வரை, செல்வாக்கு மிக்க அரசியல்வாதியாக வலம் வந்தார். கடந்த சில தேர்தல்களாக, அவரது கட்சி தொடர் தோல்விகளை சந்தித்து வருகிறது. தன் அரசியல் வாரிசாக, தன் சகோதரர் மகன் ஆகாஷ் ஆனந்த்தை நியமித்துவிட்டு, தீவிர அரசியலில் இருந்து ஒதுங்க திட்டமிட்டு இருந்தார், மாயாவதி.
ஆனால், தன் மாமனாரின் கைப்பாவையாக ஆகாஷ் ஆனந்த் செயல்படுவதாக, மாயாவதிக்கு கட்சி நிர்வாகிகளிடம் இருந்து தொடர்ந்து புகார்கள் வந்தன.
இதையடுத்து, சில மாதங்களுக்கு முன், ஆனந்தை கட்சியில் இருந்து அதிரடியாக நீக்கிய மாயாவதி, 'அவருடன் கட்சியினர் எந்த தொடர்பும் வைத்துக்கொள்ளக் கூடாது' என, அறிவிப்பு வெளியிட்டார்.
இந்நிலையில், சமீபத்தில் ஆனந்தை மீண்டும் கட்சியில் சேர்த்த மாயாவதி, அவருக்கு, பகுஜன் சமாஜ் கட்சியின் தேசிய ஒருங்கிணைப்பாளர் என்ற முக்கியத்துவம் வாய்ந்த பதவியையும் கொடுத்துள்ளார்.
மாயாவதியின் இந்த அறிவிப்பு, கட்சி நிர்வாகிகளிடையே குழப்பத்தை ஏற்படுத்தி உள்ளது. 'இந்த உத்தரவு எத்தனை நாளைக்கு செல்லும் என தெரியவில்லையே... பதவியை கொடுக்கும்போதே, அதன் காலாவதி தேதியையும் அறிவித்தால் நன்றாக இருக்கும்...' என, கிண்டல் அடிக்கின்றனர்.