PUBLISHED ON : ஜூன் 11, 2025 12:00 AM

'மேற்கு வங்க முதல்வரும், திரிணமுல் காங்., தலைவருமான மம்தாவுக்கு கவிதை எழுத மட்டும்தான் தெரியும் என நினைத்தோம்; பாடவும் தெரியுமா...' என ஆச்சரியப்படுகின்றனர், சக அரசியல்வாதிகள்.
ஒரு சில அரசியல் வாதிகளுக்கு, அரசியலை தவிர வேறு சில தனித்திறமைகளும் உண்டு. முன்னாள் பிரதமரும், பா.ஜ., மூத்த தலைவருமான, மறைந்த வாஜ்பாய், அருமையாக கவிதை எழுதுவார்.
அதுபோல மம்தாவுக்கும் நன்றாக கவிதை எழுத தெரியும்; அருமையாக ஓவியமும் வரைவார். சிறந்த பேச்சாளரும் கூட. சமீபத்தில், கொல்கட்டாவில் நடந்த ஒரு நிகழ்ச்சியில், மேற்கு வங்க அமைச்சரான இந்திராணி சென், ஒரு தேசபக்தி பாடலை பாடினார்.
அவர் பாடிக்கொண்டிருக்கும் போதே இடைமறித்த மம்தா, 'கொஞ்சம் நிறுத்துங்கள், தாளம் தப்புகிறது; இந்த பாடலை இப்படி பாடக்கூடாது...' எனக் கூறியபடியே, தானே சத்தமாக பாடத் துவங்கினார்.
கூட்டத்தில் இருந்தவர்கள் ஆச்சரியப்பட்டனர்.மேடையில் இருந்தவர்களும், 'மம்தாவுக்கு தாளம் தப்பாமல் பாடத் தெரியுமா? இதையெல்லாம் அவர் எங்கே, எப்போது கற்றுக்கொண்டார்...' என, ஆச்சரியப்பட்டனர்.
'அரசியலில் தாளம் தப்பினாலும், இசையில் இவரது தாளம் தப்பாது. எனவே, அரசியல் எதிர்காலம் பற்றி மம்தா இனி கவலைப்படத் தேவையில்லை. இருக்கவே இருக்கிறது இசை...' என கிண்டலடிக்கின்றனர், பா.ஜ., உள்ளிட்ட எதிர்க்கட்சியினர்.