PUBLISHED ON : மே 29, 2025 12:00 AM

'நான் ரொம்ப நாட்களாக சொல்கிறேன்; யாரும் கேட்கவில்லை. இப்போதாவது நம்புகிறீர்களா...' என, பீஹார் முதல்வரும், ஐக்கிய ஜனதா தளம் கட்சி தலைவருமான நிதிஷ் குமார் பற்றி கூறுகிறார், அம்மாநில எதிர்க்கட்சி தலைவர் தேஜஸ்வி யாதவ்.
பீஹாரில், முதல்வர் நிதிஷ் குமார் தலைமையிலான ஐக்கிய ஜனதா தளம், பா.ஜ., கூட்டணி ஆட்சி நடக்கிறது. நிதிஷ் குமார் ஞாபக மறதி நோயால் அவதிப்படுவதாக, ராஷ்ட்ரீய ஜனதா தளம் கட்சி தலைவர் தேஜஸ்வி யாதவ் அடிக்கடி கூறி வருகிறார்.
ஆனால், 'எங்கள் தலைவரை கிண்டலடிக்க தேஜஸ்வி யாதவுக்கு என்ன தகுதி உள்ளது...' என, ஆவேசப்பட்டனர், ஐக்கிய ஜனதா தளம் கட்சி நிர்வாகிகள்.
சமீபத்தில், பாட்னாவில் நடந்த ஒரு அரசு நிகழ்ச்சியில், மூத்த ஐ.ஏ.எஸ்., அதிகாரி ஒருவர், முதல்வர் நிதிஷ் குமாருக்கு சிறிய பூந்தொட்டியை பரிசாக அளித்தார்.
அதை வாங்கிய நிதிஷ் குமார், அந்த பூந்தொட்டியை, அந்த அதிகாரியின் தலையில் வைத்ததுடன், சத்தமாக சிரிக்கவும் செய்தார். ஏராளமான பார்வையாளர்கள், கேமராக்கள் முன்னிலையில் நடந்த இந்த நிகழ்வு, அனைவருக்கும் அதிர்ச்சியை ஏற்படுத்தியது.
இதை சுட்டிக்காட்டிய தேஜஸ்வி யாதவ், 'நிதிஷ் குமாருக்கு முதல்வர் பதவி வகிப்பதற்கான தகுதி கொஞ்சம்கூட இல்லை. தயவுசெய்து வேறு ஒருவரை முதல்வராக்குங்கள்; இல்லையெனில்,பீஹாரின் மானம் கப்பலேறி விடும்...' என, ஆவேசப்படுகிறார்.