PUBLISHED ON : செப் 22, 2025 12:00 AM

'தேர்தல் நெருங்கும் நேரத்தில் கூட்டணியில் குழப்பத்தை ஏற்படுத்துவதற்காகவே சிலர் வந்து சேர்ந்து விடுகின்றனர்...' என, லோக் ஜனசக்தி கட்சி தலைவரும், மத்திய அமைச்சருமான சிராக் பாஸ்வானைப் பற்றி கூறுகின்றனர், மத்தியில் ஆளும், தேசிய ஜனநாயக கூட்டணி கட்சி நிர்வாகிகள்.
பிரதமர் மோடி தலைமையிலான மத்திய அரசில், உணவு பதப்படுத்துதல் துறை அமைச்சராக இருப்பவர் சிராக் பாஸ்வான். முன்னாள் மத்திய அமைச்சர், மறைந்த ராம்விலாஸ் பாஸ்வானின் மகன் இவர்.
கடந்த லோக்சபா தேர்தலில் இவரது கட்சி, பீஹாரில் ஆளும், ஐக்கிய ஜனதா தளம் - பா.ஜ., ஆகிய கட்சிகள் அடங்கிய, தே.ஜ., கூட்டணியில் ஐந்து தொகுதிகளில் போட்டியிட்டு அனைத்திலுமே வெற்றி பெற்றது. விரைவில் நடக்கவுள்ள சட்டசபை தேர்தலிலும் கூட்டணி தொடர்கிறது.
தொகுதி பங்கீடு குறித்து, சமீபத்தில் கட்சி நிர்வாகிகளிடையே பேசிய சிராக், 'சட்டசபை தேர்தலில் நமக்கு எங்கெல்லாம் வெற்றி வாய்ப்பு உள்ளதோ, அங்கெல்லாம் போட்டியிடுவோம். அதிக தொகுதிகளை கேட்டு பெறுவோம்...' என்றார்.
மேலும் பேசிய அவர், 'நான், பீஹாரின் முதல்வராக வேண்டும் என, தொண்டர்கள் ஆசைப்படுகின்றனர். அதில் என்ன தவறு இருக்கிறது... தொண்டர்களின் ஆசைக்கு, நான் முட்டுக்கட்டை போட முடியாது...' என்றார்.
இதை கேட்ட, பா.ஜ., மற்றும் ஐக்கிய ஜனதா தளம் கட்சியினர், 'தேர்தல் வந்தாலே, பலருக்கும் முதல்வர் பதவி மீது ஆசை வந்து விடுகிறது...' என, கிண்டலடிக்கின்றனர்.