PUBLISHED ON : ஜூன் 06, 2025 12:00 AM

'வேறு கட்சிக்கு ஓடிவிடலாமா...' என, கவலையுடன் யோசிக்கின்றனர், திரிணமுல் காங்., கட்சியின் மூத்த நிர்வாகிகள்.
மேற்கு வங்கத்தில், முதல்வர் மம்தா பானர்ஜி தலைமையிலான, திரிணமுல் காங்., ஆட்சி நடக்கிறது. கட்சியில், தன் அரசியல் வாரிசாக, மருமகன் அபிஷேக் பானர்ஜியை அறிவிக்க முடிவு செய்து, அதற்கான நடவடிக்கைகளில் ஈடுபட்டு வந்தார், மம்தா பானர்ஜி.
ஆனால், மம்தாவுக்கு ஜால்ரா அடித்து, காலத்தை ஓட்டி வரும் சில மூத்த நிர்வாகிகள், அவரிடம், அபிஷேக் பானர்ஜியை பற்றி தப்புத்தப்பாக போட்டுக் கொடுத்தனர். 'அபிஷேக், தன்னிச்சையாக செயல்படுகிறார். கட்சியை கைப்பற்றுவதற்காக, ஆதரவாளர்கள் கூட்டத்தை உருவாக்கி வருகிறார்...' என்றனர்.
கடுப்பான மம்தா, அபிஷேக்கை கடுமையாக எச்சரித்ததுடன், கட்சி நிகழ்ச்சிகளில் அவருக்கு முக்கியத்துவம் கொடுப்பதையும் தவிர்த்து வந்தார்.
இந்நிலையில் தான், சமீபத்தில், 'ஆப்பரேஷன் சிந்துார்' நடவடிக்கை குறித்து விளக்குவதற்காக வெளிநாட்டுக்கு சென்ற அனைத்துக் கட்சி எம்.பி.,க்கள் குழுவில், திரிணமுல் சார்பில் அபிஷேக் பெயரை பரிந்துரைத்தார், மம்தா.
இது, கட்சியின் மூத்த நிர்வாகிகளிடையே கலக்கத்தை ஏற்படுத்தி உள்ளது. 'அவசரப்பட்டு, அபிஷேக்கை பற்றி மம்தாவிடம் போட்டுக்கொடுத்து விட்டோம். இப்போது இருவரும் ஒன்று சேர்ந்து விட்டனர்; இனி, நம் பாடு திண்டாட்டம் தான்...' என, புலம்புகின்றனர்.