PUBLISHED ON : மே 04, 2026 01:33 AM

'இன்னும் சில மாதங்களுக்கு, கர்நாடகா பக்கமே எட்டிக் கூட பார்க்க மாட்டேன்...' என, விரக்தியுடன் கூறுகிறார், காங்கிரஸ் தலைவர் மல்லிகார்ஜுன கார்கே.
கர்நாடகா மாநிலத்தில், முதல்வர் சித்தராமையா தலைமையிலான காங்கிரஸ் ஆட்சி நடக்கிறது. துணை முதல்வராக, காங்கிரஸ் மாநில தலைவர் சிவகுமார் பதவி வகிக்கிறார்.
கடந்த, 2023ல் இங்கு நடந்த சட்டசபை தேர்தலில், காங்கிரஸ் வெற்றி பெற்ற போது, முதல்வராக பதவியேற்பது யார் என்பதில், சித்தராமையா - சிவகுமார் இடையே மோதல் ஏற்பட்டது.
கட்சி மேலிடம் தலையிட்டதால், முதல் இரண்டரை ஆண்டுகள் சித்தராமையாவும், அடுத்த இரண்டரை ஆண்டுகள் சிவகுமாரும் முதல்வராக பதவி வகிப்பது என முடிவு செய்யப்பட்டது. ஆனால், இரண்டரை ஆண்டுகள் கடந்த பிறகும், முதல்வர் பதவியிலிருந்து விலக மறுக்கிறார், சித்தராமையா.
இதனால், கர்நாடகா மாநில காங்கிரசில் உச்ச கட்ட கோஷ்டி பூசல் நிலவுகிறது. காங்கிரஸ் தேசிய தலைவரான மல்லிகார்ஜுன கார்கேயும், கர்நாடகா மாநிலத்தை சேர்ந்தவர் தான். சமீபத்தில் அவர் கர்நாடகாவுக்கு வந்த போது, 'அடுத்த முதல்வர் யார்...' என, பத்திரிகையாளர்கள் கேள்வி எழுப்பினர்.
அதற்கு, 'இதெல்லாம் எங்களின் உள்கட்சி விவகாரம்; இதை, பொதுவெளியில் தெரிவிக்க வேண்டிய அவசியம் இல்லை. ஒவ்வொரு முறையும் கர்நாடகாவுக்கு வரும் போதும், இதே கேள்வி கேட்கப்படுகிறது; இது, எரிச்சலை ஏற்படுத்துகிறது...' என, விரக்தியுடன் பதில் அளித்தார், கார்கே.
