PUBLISHED ON : ஜூன் 14, 2025 12:00 AM

'முழு பூசணிக்காயை சோற்றில் மறைக்க முயற்சிக்கின்றனரே...' என, ராஜஸ்தான் முன்னாள் முதல்வர் அசோக் கெலாட், முன்னாள் துணை முதல்வர் சச்சின் பைலட் பற்றி ஆச்சரியத்துடன் பேசுகின்றனர், அங்குள்ள மக்கள்.
ராஜஸ்தானில், முதல்வர் பஜன்லால் சர்மா தலைமையிலான, பா.ஜ., ஆட்சி நடக்கிறது. ராஜஸ்தான் காங்கிரசில் செல்வாக்கான அரசியல்வாதி அசோக் கெலாட்; இவர், மூன்று முறை முதல்வராக பதவி வகித்துள்ளார்.
கெலாட்டுக்கும், ராஜஸ்தான் காங்கிரசில், மற்றொரு செல்வாக்குமிக்க இளம் அரசியல்வாதியுமான சச்சின் பைலட்டுக்கும் இடையே பல ஆண்டுகளாக கடுமையான பனிப்போர் நிலவியது.
இரண்டு ஆண்டுகளுக்கு முன் சச்சின் பைலட், 'கெலாட்டுக்கு வயதாகி விட்டது; அவர், இளைஞர்களுக்கு வழிவிட வேண்டும்...' என்றார். பதிலடியாக, 'சச்சின் பைலட்டால், எந்த வேலையையும் திறம்பட செய்ய முடியாது...' என, கெலாட் வெளுத்து வாங்கினார்.
இந்த நிலையில்தான், தன் தந்தையும், மறைந்த முன்னாள் மத்திய அமைச்சருமான, ராஜேஷ் பைலட்டின் நினைவு நாள் நிகழ்ச்சியில் பங்கேற்கும்படி, சமீபத்தில் கெலாட்டை சந்தித்து, சச்சின் பைலட் அழைப்பு விடுத்தார்; அவரும், எந்தவித மறுப்பும் கூறாமல் நிகழ்ச்சியில் பங்கேற்றார்.
இதை பார்த்த பத்திரிகையாளர்கள், 'பழைய பகை எல்லாம் போய் விட்டதா...' என, கெலாட்டிடம் கேட்டனர். அதற்கு அவர், 'எங்களுக்குள் எப்போதும் பகை இருந்தது இல்லை. பைலட், என் மகனை போன்றவர்...' என்றார்.
'அரசியல்வாதிகள் பொய் சொல்வது வழக்கம்தான்; அதிலும் ஒரு நியாயம் வேண்டாமா?' என, பத்திரிகையாளர்கள் புலம்புகின்றனர்.