PUBLISHED ON : ஜூலை 29, 2024 12:00 AM

'யார் என்ன வேண்டுமானாலும் பேசட்டும்; அதைப் பற்றி எனக்கு எந்த கவலையும் இல்லை...' என, கடுப்புடன் கூறுகிறார், ஆந்திர முதல்வரும், தெலுங்கு தேசம் கட்சி தலைவருமான சந்திரபாபு நாயுடு.
சமீபத்தில் நடந்த சட்டசபை தேர்தல் மற்றும் லோக்சபா தேர்தல்களில், அதிக தொகுதிகளில் வெற்றி பெற்று சாதித்து காட்டிய சந்திரபாபு நாயுடு, ஐந்து ஆண்டுகளுக்கு பின், மீண்டும் முதல்வர் பதவியில் அமர்ந்துள்ளார்.
மத்தியில், பிரதமர் மோடி தலைமையிலான ஆட்சிக்கு, தெலுங்கு தேசம் கட்சி எம்.பி.,க் களின் ஆதரவு மிகவும் அவசியம் என்பதால், மத்திய அமைச்சரவையிலும் அவரது கட்சிக்கு முக்கியத்துவம் அளிக்கப்பட்டுள்ளது.
தேசிய அளவில் சந்திரபாபு நாயுடு இப்போது தவிர்க்க முடியாத, செல்வாக்கான அரசியல்வாதியாக உருவெடுத்துள்ளார்.
இந்த நிலையில் தான், சமீபத்தில் தாக்கல் செய்யப்பட்ட மத்திய பட்ஜெட்டில் ஆந்திர மாநிலத்துக்கு அதிக நிதி ஒதுக்கப்பட்டுள்ளது. அமராவதியில் புதிய தலைநகர் அமைப்பதற்கு, ஆந்திராவுக்கு, 15,000 கோடி ரூபாயை மத்திய அரசு வாரி வழங்கியுள்ளது.
இதனால், போதிய நிதி கிடைக்காத மற்ற மாநில அரசியல்வாதிகள், 'மத்திய அரசுக்கு, 'ஜால்ரா' அடிப்பதற்காக கிடைத்த பரிசு...' என, சந்திரபாபு நாயுடுவை கிண்டலடிக்கின்றனர்.
இதில் எரிச்சல் அடைந்துள்ள சந்திரபாபு, 'நிதி கிடைக்காத வயிற்றெரிச்சல் கோஷ்டிகள் இப்படித் தான் புலம்பும்...' என்கிறார்.