PUBLISHED ON : ஜூன் 12, 2024 12:00 AM

'தோற்றவர்களுக்கு பதவி கிடைக்காததில் ஒரு நியாயம் இருக்கிறது. வெற்றி பெற்றவர்களுக்கும் பதவி கொடுக்காமல் இருப்பது எந்த வகையில் நியாயம்...' என கவலைப்படுகின்றனர், முன்னாள் மத்திய அமைச்சரும், பா.ஜ.,வைச் சேர்ந்தவருமான அனுராக் சிங்கின் ஆதரவாளர்கள்.
முந்தைய மத்திய அரசில், தகவல் மற்றும் ஒலிபரப்பு துறை அமைச்சராக பதவி வகித்தவர் தான், அனுராக் சிங் தாக்குர். இவர், ஹிமாச்சல் முன்னாள் முதல்வர் பிரேம்குமார் துமாலின் மகன்.
இவரது சுறுசுறுப்பு மற்றும் வேகத்தை பார்த்து, முந்தைய அரசில், முதலில் இணை அமைச்சர் பதவி கொடுத்தார், பிரதமர் மோடி. பின், கேபினட் அந்தஸ்துக்கு உயர்த்தப்பட்டார்.
சமீபத்தில் நடந்து முடிந்த தேர்தலில் ஹிமாச்சலின் ஹமிர்பூர் தொகுதியில் போட்டியிட்டு, அபார வெற்றி பெற்றார். இதனால், தற்போதும் நல்ல துறை கிடைக்கும் என எதிர்பார்த்திருந்தார், தாக்குர்.
ஆனால், மத்திய அமைச்சர் பதவி இவருக்கு தரப்படவில்லை. இதற்கு என்ன காரணம் என்பது குறித்து பா.ஜ.,வுக்குள் தீவிரமாக விவாதிக்கப்படுகிறது.
'கூட்டணி கட்சிகளுக்கு கணிசமான பதவிகளை கொடுக்க வேண்டியிருந்ததால், அனுராக் தாக்குருக்கு பதவி கொடுக்க முடியவில்லை. ஏற்கனவே கேபினட் அமைச்சராக இருந்தவரை, மீண்டும் இணை அமைச்சராக நியமிக்க முடியாது. பதவி கிடைக்காததற்கு இதுதான் காரணம்...' என்கின்றனர், பா.ஜ., மூத்த தலைவர்கள்.
அனுராக் ஆதரவாளர்களோ, 'இதெல்லாம் நம்புற மாதிரியா இருக்கு...' என புலம்புகின்றனர்.