PUBLISHED ON : ஏப் 29, 2026 12:00 AM

‘நல்லவர்கள், விசுவாசமானவர்கள் என்று நம்பித்தான் வாய்ப்பு கொடுத்தேன்; ஆனால், இப்படி துரோகம் செய்து விட்டனரே...’ என புலம்புகிறார், டில்லி முன்னாள் முதல்வரும், ஆம் ஆத்மி கட்சி ஒருங்கிணைப் பாளருமான அரவிந்த் கெஜ்ரிவால்.
டில்லியில், முதல்வர் ரேகா குப்தா தலைமையிலான பா.ஜ., ஆட்சி நடக்கிறது. இதற்கு முன், ஆம் ஆத்மி ஆளும் கட்சியாக இருந்தது. டில்லியை தாண்டி, ஆம் ஆத்மிக்கு செல்வாக்கு இல்லை என்ற பேச்சு இருந்தது.
ஆனால், பஞ்சாபில், 2022ல் நடந்த சட்டசபை தேர்தலில், ஆம் ஆத்மி வெற்றி பெற்று ஆட்சி அமைத்தது. அந்த கட்சியின் பகவந்த்சிங் மான், முதல்வராக பதவியேற்றார். இதன் வாயிலாக, ஆம் ஆத்மிக்கு ராஜ்யசபா எம்.பி.,க்கள் எண்ணிக்கை, 10 ஆக அதிகரித்தது.
இந்நிலையில் தான், ராகவ் சத்தா உட்பட, ஆம்ஆத்மி கட்சியைச் சேர்ந்த ஏழு ராஜ்யசபா எம்.பி.,க்கள், சமீபத்தில் பா.ஜ.,வில் இணைந்து அரவிந்த் கெஜ்ரிவாலுக்கு அதிர்ச்சி வைத்தியம் அளித்தனர்.
‘கெஜ்ரிவால் தலைமையிலான, ஆம் ஆத்மி கட்சி, அறநெறியில் இருந்து விலகியதால், பா.ஜ.,வில் இணைந்தோம்...’ என்று, ராகவ் சத்தா தெரிவித்தார். ஆம் ஆத்மியின் மொத்த எம்.பி.,க்களில், மூன்றில் இரு பங்கு உறுப்பினர்கள் பா.ஜ.,வில் இணைந்துள்ளதால், அவர்கள் மீது கட்சி தாவல் தடை சட்டத்தின்படி நடவடிக்கையும் எடுக்க முடியாது.
‘கெஜ்ரிவால், அளவுக்கு அதிகமாக பேசுகிறாரே தவிர, அவருக்கு கட்சி பிரச்னைகளை சமாளிக்கும் சாணக்கியத்தனம் இல்லை...’ என்கின்றனர், டில்லி மக்கள்.
