PUBLISHED ON : ஜூலை 18, 2024 12:00 AM

'மறுபடியும் சிறைக்கு போனாலும் பரவாயில்லை; இனி மனைவியை முதல்வராக்கி விடலாம் என்ற தெம்போடு இருக்கிறார்...' என, ஜார்க்கண்ட் முதல்வரும், ஜார்க்கண்ட் முக்தி மோர்ச்சா தலைவருமான ஹேமந்த் சோரன் பற்றி கூறுகின்றனர், இங்குள்ள அரசியல்வாதிகள்.
பண மோசடி வழக்கில்சிக்கி சிறைக்கு போன சோரன், கட்சியின் மூத்த நிர்வாகியான சம்பாய் சோரனை முதல்வர் பதவியில் அமர்த்தினார்.
'இனி சோரன் சிறையில் இருந்து வந்தாலும், அவருக்கு முதல்வர்பதவி கிடைக்காது. சம்பாய் சோரன் முதல்வர்பதவியை விட்டுக் கொடுக்க மாட்டார்...' என, பேச்சு எழுந்தது.
ஆயினும், சிறையில் இருந்தபடியே வியூகம் வகுத்த சோரன், தன் மனைவி கல்பனாவை இடைத்தேர்தலில் நிறுத்தி வெற்றி பெற செய்தார். தேர்தலில் வெற்றி பெறுவதற்கு முன்னதாகவே, அரசு நிகழ்ச்சிகளில் கல்பனா பங்கேற்றார்.
'எந்த முக்கிய பதவியிலும் இல்லாத ஒருவர், எப்படி அரசு நிகழ்ச்சிகளில் பங்கேற்கலாம்...' என, எதிர்க்கட்சியினர் குரல் எழுப்பினர்.
இதற்கிடையே, சிறையில் இருந்து வெளியில் வந்த ஹேமந்த் சோரனுக்கு, எந்தவித எதிர்ப்பும் இன்றி, முதல்வர் பதவியை விட்டுக் கொடுத்தார், சம்பாய் சோரன்.
மீண்டும் முதல்வராகி விட்ட ஹேமந்த் சோரன், அனைத்து அரசு நிகழ்ச்சிகளுக்கும் தன் மனைவியை உடன் அழைத்துச் செல்கிறார்.
'கல்பனா, முதல்வரின் மனைவி மட்டுமல்ல; சட்டசபை உறுப்பினரும் கூட. இப்போது அவர் அரசு நிகழ்ச்சிகளில் பங்கேற்பதை யாரும் கேள்வி கேட்க முடியாதே...' என்கின்றனர், ஹேமந்த் சோரன் ஆதரவாளர்கள்.