PUBLISHED ON : ஜூன் 28, 2024 12:00 AM

'இருக்கிற இடம் தெரியாமல் அமைதியாக இருந்தவரை இப்படி செய்து விட்டனரே...' என, கேரள மாநில காங்., - எம்.பி., கொடிக்குனில் சுரேஷை நினைத்து பரிதாபப்படுகின்றனர், அவரது ஆதரவாளர்கள். சுரேஷ், கேரள மாநிலத்தைச் சேர்ந்த மூத்த அரசியல்வாதிகளில் ஒருவர். இதுவரை எட்டு முறை லோக்சபாவுக்கு தேர்வு செய்யப்பட்டுள்ளார்.
லோக்சபா தேர்தல் முடிந்ததும், இடைக்கால சபாநாயகராக சுரேஷ் தான் நியமிக்கப்படுவார் என, காங்கிரஸ் கட்சியினர் நினைத்தனர். ஆனால், ஒடிசாவைச் சேர்ந்த பா.ஜ., - எம்.பி., மஹ்தாப் நியமிக்கப்பட்டார்.
இதனால் கடுப்பான காங்., தலைவர்கள், லோக்சபா சபாநாயகர் தேர்தலுக்கு, ஆளுங்கட்சி சார்பில் நிறுத்தப்பட்ட ஓம் பிர்லாவுக்கு எதிராக, சுரேஷை களத்தில் இறக்கி விட்டனர்.
ஆளும் கூட்டணிக்கு பெரும்பான்மை இருப்பதால், ஓம் பிர்லா வெற்றி பெற்று விடுவார் என உறுதியாக தெரிந்தும், சுரேஷை காங்., மேலிடம் போட்டியிட வைத்தது, கேரள காங்கிரசில் சலசலப்பை ஏற்படுத்தியது.
இறுதியில், குரல் ஓட்டெடுப்பிலேயே ஓம் பிர்லா வெற்றி பெற்றதாக அறிவிக்கப்பட்டது. இது, சுரேஷ் ஆதரவாளர்களிடையே அதிருப்தியை ஏற்படுத்தி உள்ளது.
'சபாநாயகர் பதவியை சுரேஷ் கேட்டாரா... அவரை தேவையில்லாமல் களத்தில் இறக்கி விட்டு அவமதித்து விட்டனர். சீனியர் எம்.பி., என்ற அடிப்படையில் லோக்சபா எதிர்க்கட்சி தலைவர் பதவியை அவருக்கு காங்., மேலிடம் கொடுத்திருக்கலாமே...' என்கின்றனர், கேரள மாநில காங்., நிர்வாகிகள்.