PUBLISHED ON : ஜூலை 03, 2024 12:00 AM

'புதுப்புது ஐடியாவாக செயல்படுத்துகிறார்; இதெல்லாம் யார் சொல்லிக் கொடுத்தது என தெரியவில்லை...' என, மத்திய பார்லிமென்ட் விவகாரத் துறை அமைச்சரும், பா.ஜ.,வைச் சேர்ந்தவருமான கிரண் ரிஜிஜுவை கிண்டல் அடிக்கின்றனர், சக அமைச்சர்கள்.
லோக்சபா தேர்தல்முடிந்து, மீண்டும்மோடி தலைமையிலான அரசு பொறுப்பேற்றுள்ள நிலையில், முக்கியத்துவம்வாய்ந்த பார்லிமென்ட் விவகாரத் துறை அமைச்சராக பொறுப்பேற்றுள்ளார், கிரண் ரிஜிஜு.
டில்லியில் குரங்கு தொல்லை அதிகம். அதிலும், அமைச்சர்கள் வசிக்கும் பகுதிகளில் குரங்குகள் நடமாட்டம் அதிகம்.வீடுகளுக்குள்புகுந்து உணவு பொருட்களை துாக்கி சென்று விடும்.
இதை தடுப்பதற்காக கிரண் ரிஜிஜு மேற்கொண்டுள்ள நடவடிக்கை தான், இப்போது சக அமைச்சர்களிடையே பேசு பொருளாகி உள்ளது. டில்லியில் உள்ள தன் அரசு பங்களாவின் முன், பிரமாண்டமான லங்கூர் குரங்கின் கட் அவுட்டை மாட்டி வைத்துள்ளார், ரிஜிஜு.
லங்கூர் குரங்குகளை பார்த்தால், மற்ற சாதாரண குரங்குகள் பயந்து ஓடி விடும். இதனால், லங்கூர் கட் அவுட்டை வீட்டில் மாட்டி வைத்துள்ளார், கிரண் ரிஜிஜு.
இது குறித்து அவரிடம் கேட்டபோது, 'டில்லியில் கடந்தாண்டு இறுதியில் ஜி 7 மாநாடு நடந்தபோது குரங்குகள் தொல்லையை தடுக்க, லங்கூர் கட் அவுட்டுகள் பல இடங்களில் வைக்கப்பட்டிருந்தன. அதை பின்பற்றி தான், நானும் வைத்தேன். இது, என்னுடைய ஐடியா இல்லை. கடன் வாங்கிய ஐடியா தான்...' என்கிறார், கிரண் ரிஜிஜு.