ADDED : ஆக 21, 2023 03:04 PM
அப்துல் முகத்தில் அளவுக்கு மீறிய சோகம். பட்டாம் பூச்சியாய்ப் பறந்து திரிய வேண்டிய இவனுக்கு என்ன துயரம்? என யோசித்தார் பக்கத்து வீட்டுப் பெரியவர். அவனை அழைத்து, காரணம் கேட்க, ''எனக்கு இரண்டு தங்கைகள். குடும்பப் பொறுப்பை நானே பார்க்கிறேன். ஆனால் வேலை இல்லாமல் கஷ்டப்படுகிறேன்'' என வருந்தினான். '' பிரச்னை இல்லாத மனிதர்களே இல்லை. உனக்கு ஐந்து வேளை தொழும் வழக்கம் உண்டா'' எனக்கேட்டார். ''உண்டு. அதை மட்டும் விடவே மாட்டேன்'' எனச் சொன்னான். ''சரி. பிரச்னை தீர ஒரு பிரார்த்தனை சொல்கிறேன். அதை கடைபிடி. 'துக்கம், ஆதரவற்ற நிலை, சோம்பல், கஞ்சத்தனத்தில் இருந்து என்னைப் காப்பாற்றுவாயா இறைவனே' என தொழுகைக்குப் பிறகு ஓதிக்கொண்டிரு. பலன் கிடைக்கும்'' என்றார் பெரியவர்.