Dinamalar-Logo
Dinamalar Logo


/ஆன்மிகம்/இந்து/செய்திகள்/உடனடி பலனுக்கு...

உடனடி பலனுக்கு...

உடனடி பலனுக்கு...

உடனடி பலனுக்கு...

ADDED : மார் 20, 2025 01:27 PM


Google News
Latest Tamil News
அன்றாடம் பல காரணங்களுக்காக வீட்டை விட்டு நாம் வெளியே செல்கிறோம். அதிக நேர பயணமோ, குறைந்த நேர பயணமோ எதுவாக இருந்தாலும் அது பாதுகாப்பாக அமைய நம் பெரியோர்கள் வழிகாட்டியுள்ளனர். குல தெய்வம், இஷ்ட தெய்வத்தை வழிபட்டு பயணத்தை தொடங்க வேண்டும்.

ஒரு செயல் தடையின்றி நிறைவேற சூழல், சந்தர்ப்பம், தெய்வ அருள் அவசியம். அதிலும் நவக்கிரகங்களின் அருள் மிக அவசியம். கிரகங்களைக் கண்டாலே பயம், நடுக்கம் பலருக்கும் ஏற்படுகிறது. இதைப் போக்க கோளறு பதிகத்தை திருஞான சம்பந்தர் பாடியுள்ளார். எல்லோருக்கும் எல்லாக் காலத்திலும் எல்லா கிரகங்களும் நன்மை தரும் சூழ்நிலையில் இருப்பதில்லை. துன்பம் போக்கும் அருமருந்தாக இப்பதிகம் உள்ளது.

மதுரையில் சமணம் மேலோங்கி இருந்த காலம் அது. மன்னர் கூன்பாண்டியன் சமண சமயத்தை பின்பற்றினார். இதனால் கவலைப்பட்ட மகாராணி மங்கையர்க்கரசியார் மீண்டும் சைவம் தழைக்க என்ன செய்யலாம் என வருந்தினார். அப்போது சம்பந்தர் பற்றி கேள்விப்பட்டு அவரை மதுரைக்கு வரவழைக்க தீர்மானித்தார். அமைச்சரான குலச்சிறையாரிடம் மதுரைக்கு சம்பந்தரை அழைத்து வருவது உங்கள் பொறுப்பு என தெரிவித்தார்.

அப்போது சம்பந்தர் வேதாரண்யம் கோயிலில் திருநாவுக்கரசருடன் தங்கியிருந்தார். மங்கையர்க்கரசியாரின் அழைப்பை ஏற்ற சம்பந்தர் மதுரைக்கு புறப்படத் தயாரானார். திருநாவுக்கரசரிடம் ''அப்பர் பெருமானே! மதுரைக்குச் செல்லும் எனக்கு தங்களின் ஆசி வேண்டும்'' எனக் கேட்டார். யோசித்தபடி, '' இப்பொழுதே மதுரை செல்ல வேண்டுமா? நாளும், கோளும் சரியில்லையே'' என்றார் திருநாவுக்கரசர். ''சிவனை வழிபடும் நமக்கு பயம் இருக்கலாமா? எந்த சூழலிலும் துன்பங்களை தீர்த்து சிவபெருமான் காத்தருள்வார். நவக்கிரக நாயகனான சிவபெருமானை வழிபட்டால் எல்லா நலன்களையும் அருள்வார்'' என பதிகம் பாடினார். அதுவே கோளறு பதிகம் எனப்படுகிறது.

வேயுறு தோளிபங்கன் விடமுண்ட கண்டன்

மிகநல்ல வீணை தடவி

மாசறு திங்கள்கங்கை முடிமேல் அணிந்தென்

உளமே புகுந்த அதனால்

ஞாயிறு திங்கள்செவ்வாய் புதன்வியாழன் வெள்ளி

சனிபாம்பு இரண்டும் உடனே

ஆசறு நல்லநல்ல அவைநல்ல நல்ல

அடியார் அவர்க்கு மிகவே.

என தொடங்கும் இதில் 11 பாடல்கள் உள்ளன.

அதன்பின் மதுரைக்கு வந்த ஞானசம்பந்தர் அனல்வாதம், புனல்வாதங்களில் ஈடுபட்டு சமணர்களை வென்றார். வெப்புநோய் ஏற்பட்ட மன்னரைக் குணப்படுத்தியதோடு அவரது கூனல் முதுகை நிமிர்த்தி 'நின்ற சீர் நெடுமாறனாக' மாற்றினார்.

ஞானசம்பந்தரால் மதுரையில் மீண்டும் சைவம் தழைத்தது. இந்த பதிகத்தை தினமும் பூஜை செய்யும் போதும், வீட்டை விட்டு வெளியே புறப்படும் நேரத்திலும் படிக்கலாம். முழுமையாக படிக்க முடியாதவர்கள் இதன் முதல் பாடலை மட்டுமாவது பாடினால் பலன் கைமேல் கிடைக்கும்.





      Our Apps Available On




      Dinamalar

      Follow us