ADDED : ஜூலை 31, 2011 12:50 PM

அறம்வளர்த்த நாயகியோடு ஐயாறப்பர் அருள்புரியும் திருத்தலம் திருவையாறு. நால்வராலும் பாடப்பெற்ற புண்ணியத்தலம். நாவுக்கரசர் இக்கோயிலைப் பற்றி மட்டும் 126 பாடல்கள் பாடியுள்ளார் என்பது குறிப்பிடத்தக்கது. கயிலைதரிசனம் பெறுவதற்காக வடதிசை நோக்கிச் சென்ற நாவுக்கரசரை, அங்குள்ள நீர்நிலையில் மூழ்கும்படி சிவன் கட்டளையிட்டார். மூழ்கிய அவர், திருவையாறில் உள்ள திருக்குளத்தில் எழுந்தார். இக்குளத்திற்கு 'உப்பங்கோட்டை பிள்ளையார் குளம்' என்றும் 'சமுத்திர தீர்த்தம்' என்றும் பெயருண்டு. அங்கே அம்மையப்பர் ரிஷப வாகனத்தில் காட்சியளித்தார். இவ்விழா ஒவ்வொரு ஆண்டும் ஆடிஅமாவாசையன்று இரவில் நடக்கும். இதை 'அப்பர் கயிலாயக் காட்சி' என்பர். நாவுக்கரசருக்கு 'அப்பர்' என்றும் பெயருண்டு. கயிலாயக் காட்சியின்போது நாவுக்கரசர் பாடிய 'மாதர்பிறைக் கண்ணியானை'' என்று தொடங்கும் பதிகத்தை பக்தர்கள் பாடுவர். இப்பதிகத்தைப் பாடுவோர் கயிலைநாதனை தரிசிக்கும் பேறுபெறுவர் என்பது ஐதீகம். 'ஓசை ஒலியெலாம் ஆனாய் நீயே' என்ற நாவுக்கரசரின் வாக்கை நிரூபிக்கும் விதத்தில் இங்கு கோயில் பிரகாரத்தில் 'ஐயாறப்பா' என்று ஒருமுறை அழைத்தால் ஏழுமுறை எதிரொலிப்பதைக் காணலாம்.