Dinamalar-Logo
Dinamalar Logo


/ஆன்மிகம்/இந்து/கட்டுரைகள்/வள்ளல் பெருமாள்

வள்ளல் பெருமாள்

வள்ளல் பெருமாள்

வள்ளல் பெருமாள்

ADDED : செப் 27, 2019 10:12 AM


Google News
Latest Tamil News
ஈரோடு மாவட்டம் பாரியூரில் ஆதிநாராயணப்பெருமாள் குடியிருக்கிறார். வாரி வழங்கும் வள்ளலான இவரை புரட்டாசி சனிக்கிழமையில் தரிசித்தால் செல்வம் பெருகும்.

விவசாய மக்கள் வாழும் பகுதியான இங்கு ஒரு சமயம், மழை இல்லாமல் பஞ்சம் ஏற்பட்டது. காக்கும் கடவுளான திருமாலை வழிபட்டால் நன்மை கிடைக்கும் என்ற முடிவுக்கு வந்தனர். பெருமாள் சிலை ஒன்றை பிரதிஷ்டை செய்து கூட்டு பிரார்த்தனை நடத்தினர். அதன் பயனாக மழை பெய்தது. அதற்கு நன்றி செலுத்தும் விதத்தில் கோயில் எழுப்பி,சுவாமிக்கு ஆதிநாராயணப் பெருமாள் எனப் பெயரிட்டனர். இங்கு ஸ்ரீதேவி, பூதேவியுடன் மூலவர் கிழக்கு நோக்கி இருக்கிறார். உற்ஸவர் தனி சன்னிதியில் தெற்கு நோக்கி உள்ளார்.

கோஷ்ட தெய்வங்களாக வேணு கோபாலர், நாராயணர், வெங்கடாஜலபதி, நரசிம்மர், குருவாயூரப்பன் சன்னதிகள் உள்ளன. ஆழ்வார்களான நம்மாழ்வார், ராமானுஜர், திருமங்கையாழ்வார் பிரகாரத்தில் உள்ளனர். புரட்டாசி சனியன்று வெள்ளி கருட வாகனத்தில் சுவாமி வலம் வருவார். பாஞ்சராத்ர ஆகம முறையில் பூஜை நடக்கின்றன. மகாளய அமாவாசையான இன்று சுவாமிக்கு துளசி மாலை சாத்தி நெய் தீபமேற்ற பிதுர் தோஷம் மறையும். முன்னோர் ஆசி கிடைக்கும்.

இக்கோயிலில் ஆஞ்சநேயரை மூன்று கோலங்களில் தரிசிக்கலாம். முன் மண்டபத்தில் சஞ்சீவி ஆஞ்சநேயர், வீர ஆஞ்சநேயர் அருகருகில் உள்ளனர். யோக ஆஞ்சநேயரின் மணி கட்டிய வால், இரண்டு காலுக்கும் நடுவே கீழே உள்ளது. இவரின் திருவடி, வால் இரண்டையும் ஒரே நேரத்தில் தரிசிப்பது சிறப்பு. புரட்டாசி சனியன்று இவருக்கு வெற்றிலை மாலை சாத்த விருப்பம் நிறைவேறும்.

எப்படி செல்வது: ஈரோட்டில் இருந்து கோபி செட்டிபாளையம் 40 கி.மீ., இங்கிருந்து 5 கி.மீ., துாரத்தில் பாரியூர்

விசேஷ நாட்கள்: புரட்டாசி சனி, பவுர்ணமி, வைகுண்ட ஏகாதசி

நேரம்: காலை 7:00 - 1:00 மணி; மாலை 4:00 - 8:00 மணி

தொடர்புக்கு: 04285 - 222 010, 222 080

அருகிலுள்ள தலம்: பாரியூர் கொண்டத்து காளியம்மன் கோயில்





      Our Apps Available On




      Dinamalar

      Follow us