Dinamalar-Logo
Dinamalar Logo


/ஆன்மிகம்/இந்து/கட்டுரைகள்/எதற்கும் காலம் நேரம் வரணும்!

எதற்கும் காலம் நேரம் வரணும்!

எதற்கும் காலம் நேரம் வரணும்!

எதற்கும் காலம் நேரம் வரணும்!

ADDED : நவ 19, 2012 12:50 PM


Google News
Latest Tamil News
அன்றுவெள்ளிக் கிழமை. சாலம்மாள் கை கால் அலம்பி திருநீறு, குங்குமம் தரித்தாள். பிரம்புக்கூடையில் பூஜை பொருட்களை எடுத்துக் கொண்டாள். மகள் மணிமொழியுடன் முருகன் கோயிலுக்குப் புறப்பட்டாள். கந்தரநுபூதி என்ற மந்திரநூலைப் பாராயணம் செய்து கொண்டே நடந்தாள்.

கோயிலுக்கு வந்த சாலம்மா, விளக்கில் நெய்விட்டு ஆலயத்தை வலம் வந்தாள். முருகனை எண்ணி உள்ளம் உருகினாள். பிரகாரத்தில் இருந்த ஏழைகளுக்கு பணம் கொடுத்தாள். ''முருகா! இவர்களின் துயரம் போக அருள்செய்,'' என்று வேண்டிக் கொண்டாள்.

சந்நிதியில் முருகனுக்கு அலங்காரம் செய்து கொண்டிருந்தனர். சாலம்மா மகளுடன் அமர்ந்து முருகனின் சடாக்ஷர மந்திரத்தை (ஓம் சரவணபவ) ஓதினாள். மணிமொழி,''அம்மா! போரடிக்கிறது. வீட்டுக்குப் போகலாம். வா,'' என்றாள்.

சாலம்மா,'' மகளே! ஒரு பெரிய மனிதரையே காலமல்லாத காலத்தில் பார்ப்பது நல்லதல்ல; உரிய காலத்தில் தான் பார்க்க வேண்டும். வீட்டில் தானே 24 மணிநேரமும் அடைபட்டுக் கிடக்கிறோம். கோயிலில் சிறிது நேரம் இருந்தால் நல்லது தானே! சமயம் பார்த்துத் தான் கடவுளை வணங்க வேண்டும். இப்போது சுவாமிக்கு அலங்கார சமயம். இது தரிசனத்திற்கு ஏற்ற நேரம் அன்று; அலங்காரம் முடிந்தவுடன் ஆராதனை நிகழும்,'' என்றாள். தொடர்ந்து அவளிடம் அவள் கூறியது இதுதான்.

* ஒவ்வொரு ஆராதனைக்கும் ஒவ்வொரு காரணம் உண்டு. இறைவன் அகரம் முதலாக க்ஷகரம் முடிவாக 51 அட்சரங்களின் வடிவமாக விளங்குகிறான். அதனால் 'அடுக்காலத்தி' என்ற அக்ஷர தீபத்தைக் காட்டுகிறார்கள்.

* 27 நட்சத்திர வடிவமாக இறைவன் விளங்குகிறான் என்பதை உணர்த்தும் பொருட்டு நட்சத்திரதீபம் காட்டுவர். ஐந்து மந்திர வடிவமாக விளங்குகிறான் என்பதை அறிவிக்க ஐந்து தட்டு தீபம் காட்டுவர்.

* கட்டை அல்லது துணியைக் கொளுத்தினால் முடிவில் கரி சாம்பல் மிஞ்சும். கற்பூரத்தைக் கொளுத்தினால் தீயில் கரைந்து மறைந்து விடுகிறது. ஜீவன் (மனிதன்) சிவத்தில் ஒன்றுபட வேண்டும் என்ற உண்மையை நாம் உணரும் பொருட்டுக் கற்பூர தீபம் காட்டுகிறார்கள். கோயிலில் தரிசனம் செய்பவர்கள் இந்த உண்மைகளை அறிந்து வழிபாடு செய்தல் வேண்டும்.

தாயார் கூறிய அறிவுரைகளைக் கேட்ட மணிமொழி அகம் மகிழ்ந்தாள். அப்போது கோயில் கண்டாமணி முழங்கியது. தீபாராதனை நடந்தது. சாலம்மாளும், மணிமொழியும் முருகனைப் பக்தியுடன் தரிசித்தனர். முருகனின் கருணைப் பிரசாதத்துடன் திருநீற்றுப் பிரசாதமும் பெற்றுத் திரும்பினர். கடவுளை வணங்கவே காலம் நேரம் வர வேண்டுமென்றால், அவனது கருணை கிடைக்கவும் காத்திருக்கத் தானே வேண்டும்!

வாரியார் கந்தசஷ்டி அருளுரை




      Our Apps Available On




      Dinamalar

      Follow us