Dinamalar-Logo
Dinamalar Logo


/ஆன்மிகம்/இந்து/கட்டுரைகள்/உலகின் மிக உயரமான சிவலிங்கம் - போவோமா தட்சிண கைலாசம்

உலகின் மிக உயரமான சிவலிங்கம் - போவோமா தட்சிண கைலாசம்

உலகின் மிக உயரமான சிவலிங்கம் - போவோமா தட்சிண கைலாசம்

உலகின் மிக உயரமான சிவலிங்கம் - போவோமா தட்சிண கைலாசம்

ADDED : டிச 13, 2019 09:46 AM


Google News
Latest Tamil News
'தட்சிண கைலாசம்' என்றழைக்கப்படும், கேரளாவில் உள்ள செங்கல் மகேஸ்வரம் சிவபார்வதி கோயில், உலகில் வேறெங்கும் இல்லாத தனிச்சிறப்புகளை கொண்டது. சிவபெருமானின் 12 ஜோதிர்லிங்கங்களும், விநாயகரின் 32 வடிவங்களும் பிரதிஷ்டை செய்யப்பட்ட ஒரே கோயில், சிவனும் பார்வதியும் ஒரே மூலவராக காட்சி தரும் கோயில், உலகிலேயே உயரமான சிவலிங்கம் உடைய கோயில் என்ற பெருமை பெற்ற தலம் இது.

ஐந்தாயிரம் ஆண்டுகளுக்கு முன்பு சிவனும், பார்வதியும் மண்புற்று வடிவில் இங்கு தோன்றினர். தேவபிரசன்னம் பார்த்த போது இது தெரிந்து, 2017 ல் அந்த இடத்தில் கோயில் கட்டப்பட்டது. கேரள பாரம்பரிய கோயில் கட்டட கலையை பின்பற்றி, மரம் மற்றும் அபூர்வ இன பாறை கற்களால் மூன்றடுக்காக ராஜகோபுரம் வடிவமைக்கப்பட்டுள்ளது.

சிவபரிவார தரிசனம்

கோயிலுக்குள் சென்றதும் மூலஸ்தானத்தில் இணைந்து காட்சியளிக்கும், உலகை ஆளும் சிவபெருமானையும், பார்வதி தாயையும் தரிசிக்கலாம். பின்னர் அங்கேயே தனிக்கோயிலாக உள்ள விநாயகரையும், முருகனையும் தரிசித்து விட்டால் 'சிவபரிவார தரிசனம்' செய்ததாக அர்த்தம். சிவபெருமானின் குடும்பத்தை தரிசித்து விட்டோம் என்று நாம் மனதில் நினைத்தாலே மேனி சிலிர்க்கிறது.

மகேஸ்வரம் கோயிலின் சிவபரிவார தரிசனத்திற்கு மகிமை பல. மனமுருகி வழிபட்டால், பிரிந்து கிடக்கும் குடும்பத்தினரிடையே, கணவன்- மனைவி இடையே ஒற்றுமை ஏற்படும். குடும்பத்தில் அன்பு, அமைதி, ஆரோக்கியத்தை இந்த தரிசனம் தரும்.

வாழ்வின் தடை அகல

சிவபரிவார தரிசனத்தை முடித்து விட்டால், அந்த வளாகத்தில், சிவபார்வதியை சுற்றி பிரதிஷ்டை செய்யப்பட்டுள்ள 12 ஜோதிர்லிங்கங்களை தரிசிக்கலாம். தோஷம், நோய் நீங்க பக்தர்கள் ஜோதிர்லிங்கங்களை வழிபடுகின்றனர்.

இக்கோயிலுக்கு வெளியே தனிக்கட்டடத்தில் விநாயகரின் 32 வடிவங்கள் பிரதிஷ்டை செய்யப்பட்டுள்ளது. நாம் உள்ளேயே, சுவாமி அருகில் சென்று வழிபடலாம். இந்த 32 விநாயகர் வடிவத்தையும் ஒரே நேரத்தில் தரிசித்தால் வாழ்வின் தடைகள் அகலும்.

மகாலிங்கம்

சிவபார்வதி கோயில் வளாகத்தின் வடமேற்கு திசையில் உலகின் மிக உயரமான, பிரம்மாண்ட 111 அடி சிவலிங்கம் 2019 நவம்பரில் திறக்கப் பட்டது. இதற்கான மண், தண்ணீர், ஆயுர்வேத மூலிகை பொருட்கள் அனைத்தும் புனித தலங்களில் இருந்து கொண்டுவரப்பட்டவை.

நுழைவுக்கட்டணம் ரூ.100 செலுத்தி, இந்த சிவலிங்கத்திற்குள் நாம் சென்று வரலாம்.

எட்டடுக்கு கொண்ட இந்த சிவலிங்கத்திற்குள் நுழைந்தவுடன், கீழ் தளத்தில் பெரிய சிவலிங்கம் உள்ளது. அதற்கு பக்தர்களே பூஜை செய்யலாம். தொடர்ந்து ஆறு தளங்களில் தியான அறைகள் உள்ளன. அவற்றில் சிவனின் வடிவங்கள், சிவலிங்கம், முத்திரைகள், சக்கரங்கள் வெவ்வேறு நிறங்களில் வடிவமைக்கப்பட்டுள்ளன. இங்கு நாம் தியானம் செய்யலாம். அங்கு பிரதிஷ்டையாகி உள்ள லிங்கங்களை வழிபடலாம்.

எட்டாவது தளம் கைலாசம் போன்று உருவாக்கப்பட்டு அதில் சிவன், பார்வதி காட்சி தருகின்றனர். மகாசிவலிங்கத்தின் சுவர்களில் மாமுனிவர்களின் படங்கள் நேர்த்தியாக வரையப்பட்டுள்ளன. சிவபெருமானின் 64 நிலைகளையும், இந்தியாவின் 108 சிவாலயங்களின் சிறிய சிவலிங்கங்களையும் இதற்குள் காணலாம்.

ஒரு குகைக்குள் செல்வது போன்று எட்டு தளங்களும் உள்ளன. போதிய காற்றோட வசதி, வெளிச்சம் உண்டு.

கண்காட்சி போல் அல்லாமல், பக்தியோடு எட்டு தளங்களையும் வலம் வந்து, அங்குள்ள சிற்பங்கள், லிங்கங்களின் தத்துவத்தை புரிந்து வெளியே வரும் போது, ஒரு அற்புத ஆன்மிக அனுபவம் கிடைப்பது நிஜம்.

இறைவன் கட்டளை

இக்கோயில் நிறுவனர் சுவாமி மகேஸ்வரானந்த சரஸ்வதி. இவரது ஆன்மிக, சமூக சேவைக்காக 'சரஸ்வதி' பட்டத்தை காஞ்சி ஜெயேந்திரர் வழங்கி உள்ளார்.

அவர் கூறியதாவது: இப்படியொரு சிவலிங்கம் அமைய வேண்டும் என்பது இறைவன், என் கனவில் வந்து சொன்ன விஷயம். இதற்காக நாடெங்கும் அலைந்து நிறைய விஷயங்களை கற்றுக்கொண்டேன். பல ஆண்டு சிந்தனையில் இதனை நானே வடிவமைத்தேன். மனித உடலின் ஆதாரமாக உள்ள ஆறு சக்கரங்களை அடிப்படையாக வைத்து, ஆறு தளங்கள் அமைத்தேன்.

உயரம் 111 அடி என்பது போல, அகலமும் 111 அடி தான். அதாவது 1--1--1 அடிப்படையில் இந்த உலகை இயங்க வைக்கும் சிவன், பிரம்மா, விஷ்ணு என்ற மும்மூர்த்திகளை அடிப்படையாக வைத்து அளவை தீர்மானித்தேன், என்றார்.

-ஜி.வி.ரமேஷ் குமார்

எப்படி செல்வது

நாகர்கோவிலில் இருந்து திருவனந்தபுரம் செல்லும் சாலையில் 46 கி.மீ., துாரத்தில் உதியங்குளங்கரை உள்ளது. இங்கிருந்து 4 கி.மீ.,

விசேஷ நாட்கள்

விஷூ, விநாயக சதுர்த்தி, மகாசிவராத்திரி

நேரம்

கோயில்: அதிகாலை 4:30 - 11:00 மணி; மாலை 4:30 - 8:00 மணி

சிவலிங்கம்: காலை 8:00 - 1:00 மணி; பகல் 3:30 - 7:30 மணி

தொடர்புக்கு: 0471 - 223 6273

அருகில் உள்ள தலம்: திருவனந்தபுரம் பத்மநாபசுவாமி கோயில்(25 கி.மீ.,)





      Our Apps Available On




      Dinamalar

      Follow us