Dinamalar-Logo
Dinamalar Logo


/ஆன்மிகம்/இந்து/கட்டுரைகள்/அம்மனை திரையில் வரையும் அதிசயம்!

அம்மனை திரையில் வரையும் அதிசயம்!

அம்மனை திரையில் வரையும் அதிசயம்!

அம்மனை திரையில் வரையும் அதிசயம்!

ADDED : டிச 03, 2012 12:54 PM


Google News
Latest Tamil News
தஞ்சாவூர் அருகேயுள்ள புன்னைநல்லூரில் புற்றுவடிவில் மாரியம்மன் அருள்பாலித்து வருகிறாள். ஐந்தாண்டுகளுக்கு ஒருமுறை, இவளைத் திரையில் வரைந்து வழிபடுவது வழக்கம்.

தல வரலாறு:





சோழமன்னர்கள் போர் வெற்றிக்காக காளியை வழிபட்டு வந்தனர். இவர்கள் தஞ்சையைச் சுற்றி எட்டு திசைகளிலும், அஷ்ட சக்திகளை காவல் தெய்வங்களாக அமைத்தனர். இதில், கிழக்கு பக்கம் அமைக்கப்பட்ட சக்தியே 'புன்னைநல்லூர் மாரியம்மன்'. 'சோழசம்பு' என்ற நூல் இதைத் தெரிவிக்கிறது. 1680ல் தஞ்சையை ஆண்ட வெங்கோஜி மகாராஜா, திருத்தல யாத்திரை செய்யும் போது சமயபுரத்தில் தங்கினார். அன்றிரவு அம்பிகை அரசரின் கனவில் தோன்றி, ஒரு புன்னைக் காட்டில் புற்றுவடிவில் தான் இருப்பதாகவும், தன்னை வழிபடும்படியும் கூறி மறைந்தாள். அரசரும், அவள் குறிப்பிட்ட இடம் வந்து புற்றுவடிவில் இருந்த அம்மனைக் கண்டு, மேற்கூரையும் அமைத்தார். இத்தலத்திற்கு 'புன்னைநல்லூர்' என பெயரிட்டு, அந்த கிராமத்தை கோயிலுக்கு தானமாக வழங்கினார்.

பார்வை தந்த பார்வதி:





துளஜா என்ற ராஜாவின் புதல்விக்கு அம்மை நோய் ஏற்பட்டு பார்வை போனது. அம்மன் பக்தரான இவரது கனவில், குழந்தை வடிவில் தோன்றிய அம்பிகை, புன்னைநல்லூர் வந்து வழிபடும்படி கூறினாள். மன்னரும் அதன்படிசெய்யவே,மகளுக்கு பார்வை கிடைத்தது.

கோயில் திருப்பணி:





சரபோஜி மன்னர் தஞ்சையை ஆண்ட காலத்தில், மகா மண்டபம், நர்த்தன மண்டபம், கோபுரம் மற்றும் இரண்டாவது பெரிய சுற்றுச்சுவர் கட்டப்பட்டது. மராட்டிய மன்னர் சிவாஜி, இக்கோயிலுக்கு 3வது திருச்சுற்றும், ராணி காமாட்சியம்பா பாயி சாகேப் உணவுக் கூடம் மற்றும் வெளிமண்டபமும் கட்டி கொடுத்தனர். சதாசிவ பிரம்மேந்திர சுவாமி புற்றுவடிவில் இருந்த அம்மனுக்கு, மாரியம்மன் வடிவம் கொடுத்து, ஸ்ரீசக்ரம் பிரதிஷ்டை செய்தார்.

வெண்திரையில் அம்மன்:





மூலவர் புற்று மண்ணால் ஆனதால், அபிஷேகம் கிடையாது. அதற்குப் பதிலாக தைலக்காப்பு சாத்தப்படுகிறது. மூலவர் அருகிலுள்ள விஷ்ணு துர்க்கைக்கும், உற்சவ அம்மனுக்கும் அபிஷேகம் உண்டு. ஐந்து வருடத்திற்கு ஒருமுறை தைலக்காப்பு செய்யப்படும். அப்போது, அம்மனை ஒரு வெண்திரையில் வரைந்து அதில் ஆவாஹனம் செய்து, 48 நாட்கள் பூஜை செய்யப்படும். தைலக்காப்பில் இருக்கும் காலத்தில் உஷ்ணத்தால் பாதிக்காமல் இருக்க இளநீர், தயிர் நைவேத்யம் செய்யப்படும். அத்துடன் மூலஸ்தானத்தை சுற்றியுள்ள உள்தொட்டி, வெளித்தொட்டியில் தண்ணீர் நிரப்பி வைக்கப்படும். கடைசியாக 2009 ஏப்ரல்-மே மாதங்களில் இந்த பூஜை நடந்தது. இனி 2014 ஏப்ரலில் நடத்தப்படும்.

பிரார்த்தனை:





கட்டி, பரு உள்ளவர்கள் இங்குள்ள வெல்லக்குளத்தில் வெல்லம் வாங்கி போடுகிறார்கள். குளத்தில் வெல்லம் கரைவது போல இது கரைந்து விடும் என்பது நம்பிக்கை. திருமணம், குழந்தை பாக்கியம் வேண்டி ஆவணி ஞாயிற்று கிழமையன்று அம்மனை வழிபடுகிறார்கள்.

திறக்கும் நேரம்:





காலை 5- இரவு 9.

இருப்பிடம்:





தஞ்சாவூரிலிருந்து நாகப்பட்டினம் செல்லும் ரோட்டில் ஆறு கி.மீ.

போன்: 04362- 267 740.




      Our Apps Available On




      Dinamalar

      Follow us