Dinamalar-Logo
Dinamalar Logo


/ஆன்மிகம்/இந்து/கட்டுரைகள்/புதன்கிழமை கோயில்

புதன்கிழமை கோயில்

புதன்கிழமை கோயில்

புதன்கிழமை கோயில்

ADDED : பிப் 18, 2013 11:36 AM


Google News
Latest Tamil News
புதனுக்கு கிரகப்பதவி வழங்கிய சத்தியநாதேஸ்வரர் காஞ்சிபுரத்தில் வீற்றிருக்கிறார். இவரை மாணவர்கள் புதன்கிழமையில் வழிபட்டால் தேர்வில் நல்ல மதிப்பெண் பெறுவர். காஞ்சியின் நவக்கிரக கோயிலாக இது விளங்குகிறது.

தல வரலாறு:





சிபி என்னும் இந்திரன் தேவலோகத்தை அரசாட்சி செய்தான். நிலையில்லாத சுகபோக வாழ்வை வெறுத்த அவன், பக்திநெறியில் விருப்பம் கொண்டான். தேவகுருவான வியாழனின் ஆலோசனைப்படி, காஞ்சி சத்திய விரத தீர்த்தத்தில் நீராடி அங்கிருக்கும் இறைவனை வழிபட்டான். அவனுடைய பக்தியை மெச்சிய சிவனும் காளை வாகனத்தில் பார்வதியுடன் எழுந்தருளி முக்தி வழங்கினார். அவருக்கு இங்கு கோயில் எழுப்பப்பட்டது. வாழ்க்கை என்றால் 'நிலையாமை' என்பதே உண்மை. இந்த உண்மையை உலகுக்கு உணர்த்திய சிவனுக்கு 'சத்தியநாதேஸ்வரர்' என்ற திருநாமம் சூட்டப்பட்டது. ஞானசம்பந்தரால் பாடல் பெற்ற தலம் இது.

மூலவருடன் அம்மன்:





மூன்று நிலை ராஜகோபுரம் உள்ள இக்கோயிலில் மூன்று பிரகாரங்கள் உள்ளன. சுவாமி மேற்கு பார்த்தபடி சுயம்பு லிங்கமாக உள்ளார். காஞ்சியில் காமாட்சி அம்மனே பொதுவான அம்பிகையாக இருப்பதால் சிவன் கோயில்களில் அம்பாளை பார்ப்பது அரிது. ஆனால், பிரம்மராம்பிகை என்னும் திருநாமத்துடன் சத்தியநாதேஸ்வரருடன் கருவறையில் அம்பாள் வீற்றிருக்கிறாள். தெற்கு பார்த்தநிலையில் உற்சவராக இவள் இருந்தாலும், மூலவருக்குரிய முறைப்படியே பூஜை நடத்தப்படுகிறது. காரைச்செடி நிறைந்திருந்ததால் இத்தலத்திற்கு காரைக்காடு என்ற பெயரும் உண்டு. இந்திரதீர்த்தம், சத்திய விரத தீர்த்தம் ஆகியவை உள்ளன.

புதன் தலம்:





பிரகஸ்பதியை (வியாழன்) குருவாக ஏற்று, சந்திரன் கல்வி கற்றான். அப்போது அவன்,குருபத்தினியான தாரையுடன் பழகினான். இருவருக்கும் 'புதன்' என்னும் குழந்தை பிறந்தது. பிள்ளையைச் சந்திரனே வளர்த்தான். புதன் பெரியவனானதும், தனது பிறப்பின் முறை அறிந்து வருந்தி தவ வாழ்வில் ஈடுபட்டான். மனஅமைதி வேண்டி, காஞ்சியில் தங்கி சத்தியநாதேஸ்வரரை வழிபட்டான். அவனுக்கு ஆறுதல் தரும் வகையில் சிவன் அவனுக்கு நவக்கிரக தகுதி அளித்தார். பிரகாரத்தில் புதன் தெற்கு பார்த்த சந்நிதியில் வீற்றிருக்கிறார். மாணவர்கள், புதன்கிழமையில் இவரை வழிபட்டால் ஞாபகசக்தி அதிகரித்து கல்வியில் சிறந்து விளங்குவர்.

இங்கு மட்டும் ஏழு:





சனகர், சனந்தனர், சனாதனர், சனத்குமாரர் ஆகிய நான்கு சீடர்களுடன் தட்சிணாமூர்த்தி காட்சியளிப்பார். ஆனால், இங்கு 7 சீடர்களுடன் மாறுபட்ட கோலத்தில் வீற்றிருக்கிறார். இவரை வழிபட்டால் அறியாமை நீங்கி ஞானம் பெருகும். மகாகணபதி, பைரவர், வள்ளி தெய்வானையுடன் சண்முகர், மகாலட்சுமி, சந்திரசேகரர், சோமாஸ்கந்தர், நடராஜர், துர்க்கை, அண்ணாமலையார், இந்திரன் சந்நிதிகளும் உள்ளன.

இருப்பிடம்:





காஞ்சிபுரம் பஸ் ஸ்டாண்டில் இருந்து 2 கி.மீ.,

திறக்கும்நேரம்:





காலை 6- மதியம் 12, மாலை 4- இரவு 8.

போன்:





98438 32997, 98653 74005.

சி.வெங்கடேஸ்வரன், சிவகங்கை




      Our Apps Available On




      Dinamalar

      Follow us