Dinamalar-Logo
Dinamalar Logo


/ஆன்மிகம்/இந்து/கட்டுரைகள்/ஏற்றுங்க தீபம்

ஏற்றுங்க தீபம்

ஏற்றுங்க தீபம்

ஏற்றுங்க தீபம்

ADDED : நவ 26, 2012 11:40 AM


Google News
Latest Tamil News
260 கோடி வயது

திருவண்ணாமலையை ஆர்க்கேயன் காலத்தியது என்கிறார்கள். அதாவது, இந்த காலம் 200 கோடி ஆண்டுகளுக்கு முற்பட்டது. இந்த காலத்திலேயே திருவண்ணாமலை தோன்றி விட்டது என்கிறார்கள் ஆராய்ச்சியாளர்கள். திருவண்ணாமலையின் வயதை இவர்கள் 260 கோடி ஆண்டுகள் என்று மதிப்பிட்டுள்ளார்கள். இது உலகிலேயே மிகப்பழமையான மலை என்று, டாக்டர் பீர்பால் சகானி என்ற விஞ்ஞானி தெரிவித்துள்ளார். முதல் கணக்கெடுப்பின் படி மலையின் உயரம் 2665 அடி.

ரொம்ப ரொம்ப சிறந்த மாதங்கள்

திருவண்ணாமலையில் ஒவ்வொரு மாதம் பவுர்ணமியன்றும் ஏராளமான பக்தர்கள் கிரிவலம் வருகிறார்கள். ஆனால், ஐப்பசி, கார்த்திகை, மார்கழியில் எல்லா நாட்களும் வலம் வரலாம். இவை மிகச்சிறந்த மாதங்கள் என்கிறார்கள் பெரியவர்கள். ''இப்போ இருக்கிற கூட்டத்துக்கு இதையெல்லாம் பார்த்தால் முடியுமா! எந்த மாசம் வந்தால் என்ன! மனசு அண்ணாமலையார் கிட்டே இருக் கணும்,'' என்கிறார்கள் மூத்த பக்தர்கள்.

தீபதரிசன மண்டபம்

அண்ணாமலையார் கோயிலிலுள்ள கிளிக்கோபுரம் அருகில் தீபதரிசன மண்டபம் உள்ளது. மங்கையர்க்கரசி அம்மையார் என்பவர் இந்த மண்டபத்தை 1202ல் எழுப்பினார். இதை மங்கையர்க்கரசி மண்டபம் என்றும் சொல்வர். இங்கு தான் தீபம் ஏற்றும் முன்பு,பஞ்சமூர்த்திகள் எழுந்தருளுவர்.

கரும்புத்தொட்டில்

அண்ணாமலையின் முக்கிய நேர்த்திக்கடன்களில் ஒன்று கரும்புத்தொட்டில். குழந்தை பாக்கியமில்லாதவர்கள் இங்கு கிரிவலம் வருவர். தங்களுக்கு மகப்பேறு வாய்த்தால், அந்தக் குழந்தையை கரும்புத்தொட்டிலில் இட்டு, கிரிவலம் வந்து அண்ணாமலையாரைத் தரிசிக்க வருவதாக வேண்டிக்கொள்வார்கள். இவ்வாறு செய்தால், இன்னும் பல இனிய குழந்தைகளை அந்த தம்பதிகள் பெறுவார்கள் என்பது ஐதீகம்.

ஆறுவிரல் ஆறுமுகம்

திருவண்ணாமலை திருப்புகழ் புலவர் அருணகிரியாருக்கு கைகளில் ஆறுவிரல் இருந்தது. அவர் ஆறுமுக பக்தர் என்பதால், அந்த முருகனே அவருக்கு அப்படி கொடுத்தான் போலும்! அவர் கால்களை சற்று உயர்த்தி எக்கி நடப்பார். அந்த நடை மயில்போல இருக்குமாம்! முருகனின் வாகனத்தை இது நினைவுபடுத்தியது.

கண்ணொளி கீரையும் உண்ணாமுலையாளும்

பொன்னாங்கண்ணி கீரை சாப்பிடுவது கண்ணுக்கு நல்லது என்பார்கள் சித்த வைத்தியத்தில்! இதை அழுத்தம் திருத்தமாக இந்தப் பகுதி மக்கள் இளசுகளுக்கு எடுத்துச் சொல்வதற்காக, 'பொன்னாங்கண்ணியை புளிபோட்டு கடைஞ்சா உண்ணாமுலை தாயே ஓடி வந்து சாப்பிடுவா!'' என்கிறார்கள். இப்படி சொன்னால் தான், இளசுகள் 'அம்பாளே விரும்பும் கீரையாயிற்றே' என்று விரும்பிச் சாப்பிடுவார்களாம்.

மீனின் பெயர் செல்லாக்காசு

திருவண்ணாமலையிலுள்ள ரமணர் ஆஸ்ரமம் அருகேயுள்ள தீர்த்தத்தை 'அகத்தியர் தீர்த்தம்' என்பர். இது இருக்கும் இடத்தின் பெயர் பலாக்கொத்து. இதில் வசிக்கும் மீனின் பெயர் செல்லாக்காசு. அடேங்கப்பா! இப்படி ஒரு பெயர் வைக்க என்ன காரணம் என்று கேட்டால், ''இது அந்தக்காலத்து மீன் சாமி! அபூர்வ இனம் சாமி,'' என்ற பதில் மட்டும் தான் கிடைக்கிறது.

திருவண்ணாமலையில் உருவான ஆதீனம்

குன்றக்குடி ஆதீனம் பக்திப்பணியில் பிரபலமானது. இந்த ஆதீனத்தை ஸ்ரீலஸ்ரீதெய்வசிகாமணி தேசிகர் திருவண்ணாமலையில் தோற்றுவித்தார். பின்னர் அது சிவகங்கை மாவட்டம் பிரான்மலைக்கு மாற்றப்பட்டது. பிறகு குன்றக்குடிக்கு மாறியது. இதில் ஒரு விசேஷம் என்னவென்றால், திருவண்ணாமலை கோயிலுக்குள் இருக்கும் தீர்த்தத்தின் பெயரும் சிவகங்கை. சிவகங்கைக் கரையில் உருவான ஆதீனம், அதே பெயருள்ள ஊருக்கு மாறியது விந்தை தானே!




      Our Apps Available On




      Dinamalar

      Follow us