Dinamalar-Logo
Dinamalar Logo


/ஆன்மிகம்/இந்து/கட்டுரைகள்/கொலு வைக்கப்போறோம்!

கொலு வைக்கப்போறோம்!

கொலு வைக்கப்போறோம்!

கொலு வைக்கப்போறோம்!

ADDED : அக் 15, 2012 01:04 PM


Google News
Latest Tamil News
கொலு பொம்மை தத்துவம்: மனிதன், குடும்ப வாழ்விலும், ஆன்மிக வாழ்விலும் படிப்படியாக முன்னேற வேண்டும் என்பதை நவராத்திரியின் கொலு படி தத்துவம் உணர்த்துகிறது. கொலுவில் ஒன்பது படிகள் அமைப்பது சிறப்பு.

முதல் படியில் புல், செடி, கொடி ஆகிய தாவர பொம்மைகளை வைக்க வேண்டும். இயற்கையோடு ஒன்றிய வாழ்க்கையை இது குறிக்கிறது.

இரண்டாம் படியில் சங்கால் செய்த பொம்மைகளை வைக்கலாம். நத்தை பொம்மை வைப்பது நலம் பயக்கும். நத்தை போல மெதுவாக நிதானமாக சென்று உயர் இடத்தைப் பிடிக்க வேண்டும் என்று உறுதி கொள்வதே இதன் பொருள்.

மூன்றாம் படியில் எறும்பு, கரையான் புற்று பொம்மைகளை வைக்க வேண்டும். எறும்பைப் போல சுறுசுறுப்பு, எத்தனை முறை தகர்த்தாலும் கரையான் திரும்பத் திரும்ப புற்றைக் கட்டுவது போன்ற திட மனப்பான்மை வேண்டி இந்த பொம்மைகளை அடுக்க வேண்டும்.

நான்காம் படியில் நண்டு, வண்டு பொம்மைகள் இடம்பெற வேண்டும். இவற்றின் குணம் ஆழமாக ஊடுருவி பார்ப்பது. எந்த விஷயத்தையும் ஆழமாக சிந்தித்து செயலாற்றுவதை இந்த பொம்மைகள் குறிக்கும்.

ஐந்தாம் படியில் மிருகம், பறவை பொம்மைகள் வைக்க வேண்டும். மிருக குணத்தை விட வேண்டும். பறவை போல் கூடி வாழ வேண்டும் என்பதே இதன் பொருள்.

ஆறாம் படியில் மனித பொம்மை வைக்க வேண்டும். வாழ்க்கையில் மேற்கண்ட ஐந்து படிகளில் உள்ளது போன்ற குணங்களை கடைபிடித்தால் முழு மனிதன் என்ற அந்தஸ்தைப் பெறலாம்.

ஏழாம் படியில் முனிவர்கள், மகான்கள் பொம்மை வைக்க வேண்டும். மனிதன் உயரிய பக்தி மார்க்கத்தை கடைபிடித்தால் மகான்கள் ஆகலாம் என்பதே இதன் பொருள்.

எட்டாம் படியில் தேவர்கள், நாயன்மார்கள், ஆழ்வார்கள், நவக்கிரகங்களின் பொம்மைகளை வைக்க வேண்டும். மகான் நிலையை அடையும் மனிதன் தேவர் நிலைக்கு உயர்வதை இது காட்டுகிறது.

ஒன்பதாம் படியில் பிரம்மா, விஷ்ணு, சிவன் ஆகியோர் தங்கள் தேவியரான சரஸ்வதி, லட்சுமி, பார்வதியுடன் இருக்க வேண்டும். ஆதிபராசக்தி சிலையை நடுவில் பெரிய அளவில் வைக்க வேண்டும். உயிர்கள் தங்கள் நிலையை கொஞ்சம் கொஞ்சமாக உயர்த்தி, தெய்வமாக வேண்டும் என்ற தத்துவத்தை உணர்த்தவே கொலு உருவானது.

நம் வீட்டு குழந்தைகளிடம் கொலு பொம்மைகளை காட்டி மகிழ்ச்சிப்படுத்துவதுடன், அவர்களின் வயதுக்கேற்ற முறையில், இந்த தத்துவார்த்தங்களையும் எளிதில் புரியுமளவு கற்றுத்தர வேண்டும்.




      Our Apps Available On




      Dinamalar

      Follow us