Dinamalar-Logo
Dinamalar Logo


/ஆன்மிகம்/இந்து/கட்டுரைகள்/நீதிபதி பெருமாள்

நீதிபதி பெருமாள்

நீதிபதி பெருமாள்

நீதிபதி பெருமாள்

ADDED : மே 09, 2020 06:16 PM


Google News
Latest Tamil News
சிவன், பார்வதிக்குள் நடனத்தில் சிறந்தவர் யார் என தீர்ப்பளித்த பெருமாள், கடலுார் மாவட்டம் சிதம்பரத்தில் குடி கொண்டிருக்கிறார். நடராஜர் கோயிலுக்குள் அமைந்த திவ்யதேசம் இது.

நடனத்தில் யார் சிறந்தவர் என சிவன், பார்வதிக்கும் இடையே போட்டி ஏற்பட்டது. மகாவிஷ்ணுவே நடுவராக இருந்து தீர்ப்பளிக்க வேண்டும் எனக் கேட்டுக் கொண்டனர். தேவ சிற்பியான விஸ்வகர்மா மூலம் இத்தலத்தில் சித்திரசபையை உருவாக்கி, இருவரையும் நடனமாடச் செய்தார் விஷ்ணு.

ஒருவருக்கொருவர் சளைக்காமல் ஆடத் தொடங்கினர். ஒரு கட்டத்தில் வலது காலைத் துாக்கி தலைக்கு மேலே நிறுத்தினார் சிவன். பெண் என்பதால் பார்வதியால் அப்படி காலைத் துாக்க முடியவில்லை. இந்நிலையில் சிவன் வெற்றி பெற்றதாக அறிவித்தார் விஷ்ணு.

அக்கோலத்தில் சிவன் 'நடராஜர்' என்னும் பெயரில் எழுந்தருளினார். மகாவிஷ்ணுவும் 'கோவிந்தராஜப் பெருமாள்' என்னும் பெயரில் இங்கு கோயில் கொண்டார். குறுமுனிவர் அகத்தியர், கலிங்க நாட்டின் மன்னரான கவேரனின் மகள் லோபமுத்திரையை திருமணம் புரிந்தார். பின்னர் அகத்தியர் தன் மனைவியை நதியாக மாற்றவே அவள் 'காவிரி' எனப் பெயர் பெற்றாள். அதில் நீராடிய கவேரனும், அவனது மனைவியும் பிறப்பற்ற முக்தியை அடைய வேண்டினர். சிதம்பரத்திலுள்ள கோவிந்தராஜரை தரிசித்தால் பெற முடியும் என காவிரி

தெரிவிக்க, அவர்களும் பெருமாளை தரிசித்து பலன் அடைந்தனர்.

சிதம்பரம் நடராஜர் சன்னதிக்கு அருகில் கோவிந்தராஜப் பெருமாள் கோயில் உள்ளது. சாத்வீக விமானத்தின் கீழிருக்கும் இவர் சயன கோலத்தில் எழுந்தருளியுள்ளார்.

உற்ஸவர் தேவாதிதேவன் தாயார்களுடன் அமர்ந்த நிலையிலும், மற்றொரு உற்ஸவர் சித்திரக் கூடத்துள்ளான் நின்றபடியும் உள்ளனர்.

புண்டரீக வல்லித் தாயார், கருடாழ்வார், நரசிம்மர், கோபாலர், ஆண்டாள், அனுமன் சன்னதிகளும் உள்ளன.

எப்படி செல்வது: கடலுாரில் இருந்து சிதம்பரம் 42 கி.மீ.,

விசேஷ நாட்கள்: வைகுண்ட ஏகாதசி, புரட்டாசி சனி, நரசிம்ம ஜெயந்தி, கிருஷ்ண ஜெயந்தி

நேரம்: காலை 6:30 - பகல் 12:00 மணி; மாலை 5:00 - இரவு 10:30 மணி

தொடர்புக்கு: 04144 - 222 552, 98940 69422

அருகிலுள்ள தலம் : சிதம்பரம் நடராஜர் கோயில்






      Our Apps Available On




      Dinamalar

      Follow us