Dinamalar-Logo
Dinamalar Logo


/ஆன்மிகம்/இந்து/கட்டுரைகள்/உடும்புப்பிடி பிடிச்சா எதையும் சாதிக்கலாம்!

உடும்புப்பிடி பிடிச்சா எதையும் சாதிக்கலாம்!

உடும்புப்பிடி பிடிச்சா எதையும் சாதிக்கலாம்!

உடும்புப்பிடி பிடிச்சா எதையும் சாதிக்கலாம்!

ADDED : மார் 10, 2013 05:43 PM


Google News
Latest Tamil News
சாதனை செய்பவர்களை, 'உடும்புப்பிடி பிடித்து காரியம் சாதிச்சுட்டான்' என்று சொல்வோம் இல்லையா! அதேபோல, காஞ்சிபுரம் அருகிலுள்ள திருமாகறல், மாகறலீசரை 'பக்தி' என்னும் உடும்புப்பிடியாக பிடித்துக் கொண்டால் போதும். கிரகதோஷம் நீங்கி நினைத்ததை சாதிக்கலாம். ஏனெனில், இந்த சிவனே உடும்பு வடிவ சுயம்புலிங்கம் என்பது குறிப்பிடத்தக்கது. சிவராத்திரியை ஒட்டி இவரை வழிபடுவோமா!

தல வரலாறு:





பூலோகத்தில் சிவபூஜை செய்த பிரம்மா, பலாமரம் ஒன்றை நட்டார். தினமும் பழம் தரும் அதிசயமரம் அது. அதைக் கண்டு வியந்த ராஜேந்திர சோழன், அந்தப் பழத்தை தினமும் தலைச்சுமையாக சிதம்பரம் நடராஜர் கோயிலில் சேர்க்கும்படி உத்தரவிட்டான். நடராஜருக்கு நைவேத்யமாகி மன்னனுக்கு அனுப்புவது வழக்கமானது. ஒருநாள் அந்தண சிறுவன் ஒருவனின் முறை வந்தது. 'பழத்தைக் கொண்டு செல்ல பணியாளை நியமிக்கலாமே' என எண்ணிய அவன், ஒரு தந்திரம் செய்தான். ஊர் மக்களிடம், ''நான் சிறுவன் என்பதால் பழத்தை சுமப்பது சிரமம். நீங்கள் எல்லோரும் பழத்தை கொண்டு செல்லுங்கள். நான் உங்கள் வீடுகளை பார்த்து கொள்கிறேன்,'' என்றான். அனைவரும் சிதம்பரம் புறப்பட்டனர். அந்த மரத்தை அழித்து விட்டால், பழம் சுமக்கும் தொல்லை மக்களுக்கு இனி இருக்காது எனக் கருதி அதை எரித்து விட்டான்.

மறுநாள் பழம் சிதம்பரம் வராததால் மன்னன் விசாரித்தான். அவனிடம் சிறுவன்,''பழத்தை கொண்டு வருவதற்கு எந்த வசதியும் செய்து தராததால் மரத்தை எரித்து விட்டேன்,'' என்றான். தவறுக்கு தண்டனையாக சிறுவனை நாடு கடத்த <உத்தரவிட்டான் மன்னன். காவலர்கள் சிறுவனை இழுத்துச் சென்ற போது, மன்னனும் உடன் சென்றான். சிறுவனை விட்டுத் திரும்பும் வழியில், ஓரிடத்தில் பொன்னிற உடும்பு தென்பட்டது. அதை பிடிக்க முயன்றபோது, புற்றுக்குள் மறைந்தது. புற்றைத் தோண்டிய போது உடும்பின் வால் மீது கோடரி பட்டு ரத்தம் வந்தது. அப்போது வானில் அசரீரி ஒலித்தது.

''மன்னா! ஒரு சிறுவனால் சுமக்க முடியாது என்று தெரிந்தும், பழத்தை நீணட தூரம் சுமக்க உத்தரவிட்டாய். இது தவறல்லவா! இந்த பாவம் தீர இங்கே கோயில் கட்டு. இப்போது, உன் கண் முன் உடும்பாக தோன்றியது நானே (சிவனே)'' என்று உத்தர விட்டது. மன்னனும் கோயில் கட்டினான். இன்றும் கூட உடும்பின் வால் அளவு சிவலிங்கமே சுயம்புமூர்த்தியாக கோயில் உள்ளது

பெயர்க்காரணம்:





சூரபத்மனை அழிக்க, முருகன் போர் செய்த போது, தப்பிப் பிழைத்த மாக்கிரகன் என்ற அசுரன் சிவனை பூஜித்தான். அவன் இங்கு வந்து வழிபட்டதால் இறைவனுக்கு'மாக்கிரஈசன்' என்ற பெயர் வந்தது. அதுவே மருவி 'மாகறலீசர்' என்றானது.

யானையில் முருகன்:





திருப்பரங்குன்றத்தில் முருகனுக்கும் தெய்வானைக்கும் திருமணம் நடந்த போது இந்திரன் திருமணப்பரிசாக வெள்ளை யானையை கொடுத்தான். அந்த யானையில் முருகன் அமர்ந்தார். மயிலுக்கு பதிலாக யானையில் அமர்ந்த முருகனை இங்கே காணலாம். வேறெங்கும் காணமுடியாத சிறப்பு இது.

வீணை தட்சிணாமூர்த்தி:





இத்தலம் திருஞானசம்பந்தரால் பாடப்பட்டது. அழகிய சிற்பங்களோடு ஐந்து நிலை ராஜகோபுரம், இரண்டு பிரகாரம் கொண்டது. இறைவனுக்கு அடைக்கலம் காத்த நாதர், மகம் வாழ்வித்தவர், உடும்பீசர், பாரத்தழும்பர், புற்றிடங்கொண்டார், நிலையிட்ட நாதர், மங்கலங்காத்தவர், பரிந்து காத்தவர், அகத்தீஸ்வரர் ஆகிய பெயர்கள் உண்டு. மூலவர் கஜபிருஷ்ட விமானத்தின் (யானையின் பின்பகுதி) கீழ் வீற்றிருக்கிறார். அம்பிகை திருப்புவனநாயகி தனிசந்நிதியில் வீற்றிருக்கிறாள். பிரகாரத்தில் கணபதி, ஆறுமுகன், அறுபத்து மூவர், நடராஜர், பைரவர், நவக்கிரக சந்நிதிகள் உள்ளன. விமானத்தில் வீணை ஏந்திய தெட்சிணாமூர்த்தி காட்சியளிக்கிறார். இந்த சிவன் மீது உடும்பு போல விடாப்பிடியான பக்தி செலுத்தி, அபிஷேக தீர்த்தம் அருந்தினால் ரத்த சம்பந்தமான நோய், பார்வைக் குறைவு, பக்கவாதம் நீங்குவதாக பக்தர்கள் நம்புகின்றனர். பிரிந்த தம்பதி சேர சிறப்பு பூஜை செய்கின்றனர்.

திறக்கும் நேரம்:





காலை 6- மதியம்12, மாலை 5- இரவு 8.15

இருப்பிடம் :





காஞ்சிபுரத்திலிருந்து 16 கி.மீ.

போன்:





94448 10396.

சி. வெங்கடேஸ்வரன்




      Our Apps Available On




      Dinamalar

      Follow us