Dinamalar-Logo
Dinamalar Logo


/ஆன்மிகம்/இந்து/கட்டுரைகள்/குல தெய்வம் தெரியவில்லையா?

குல தெய்வம் தெரியவில்லையா?

குல தெய்வம் தெரியவில்லையா?

குல தெய்வம் தெரியவில்லையா?

ADDED : டிச 03, 2012 12:35 PM


Google News
Latest Tamil News
குலதெய்வம் எதுவென தெரியாதவர்கள், திண்டுக்கல் அருகிலுள்ள அகரம் முத்தாலம்மனை குலதெய்வமாக ஏற்கலாம்.

தல வரலாறு:





விஜயநகரப்பேரரசு காலத்தில் வடநாட்டில் வசித்த பக்தர் ஒருவர், தான் தினமும் வணங்கி வந்த அம்பாள் கோயிலில் இருந்து சிறிது மண் எடுத்துக் கொண்டு தெற்கே வந்தார். அம்பிகை, ஓரிடத்தில் அந்த மண்ணை வைத்து வணங்கும்படி உத்தரவிட்டாள். மணல் மீது ஒரு கல்லை வைத்து, அதை அம்பிகையாகக் கருதி வணங்கி வந்தார். பிற்காலத்தில், இங்கு வசித்த பக்தர் ஒருவர் மூன்று அம்மன் சிலை வடித்து பிரதிஷ்டை செய்து கோயில் எழுப்பினார். 'முத்தாலம்மன்' என்று பெயர் சூட்டினார். முத்தாலம்மனுக்காக தோன்றிய முதல் தலமாக கருதப்படுவதால், தமிழ் எழுத்துக்களில் 'அ'வே முதல் எழுத்து என்பதன் அடிப்படையில், இவ்வூருக்கு 'அகரம்' என்ற பெயர் ஏற்பட்டது.

மூன்றும் தரும் அம்பிகையர்:





எந்தச்செயலைச் செய்வதாக இருந்தாலும் மூன்று விஷயம் அடிப்படையாகத் தேவைப்படும். முதலில் செய்ய வேண்டிய செயலைப் பற்றி ஆசைப்பட வேண்டும். பின், ஞானத்துடன் அதை செயல்படுத்த வேண்டும். இவையே இச்சா (ஆசை) சக்தி, கிரியா (செயல்) சக்தி, ஞான (அறிவு) சக்தி எனப்படும். இம்மூன்றையும் இவர்கள் தருகின்றனர். மூவரும் நின்றபடி, அட்சய பாத்திரம் ஏந்தி தவக்கோலத்தில் இருக்கின்றனர். இதனால், இவர்களிடம் கேட்டது கிடைக்கும். நினைத்தது நடக்கும். குலதெய்வம் தெரியாதவர்கள் இவர்களைத் தங்கள் குலதெய்வமாக ஏற்கலாம். பவுர்ணமி நாட்களில் அம்பிகைக்கு விசேஷ பூஜை உண்டு.

உத்தரவு தரும் காவல் தெய்வம்:





அம்பாள் சந்நிதியில் பூதராஜா, பூதராணி ஆகிய காவலர்கள் உள்ளனர். கோயிலில் விழா துவங்க, பூதராணியிடம் உத்தரவு கேட்கின்றனர். பக்தர்கள் தங்கள் பிரார்த்தனை நிறைவேற, புதிதாகச் செயல்களைத் துவங்க, நிலம், வீடு தொடர்பான பிரச்னைகள் நீங்க பூதராஜாவிடம் உத்தரவு கேட்கின்றனர். இவ்வாறு வரும் பக்தர்கள் பூதராஜா முன் நின்று கொண்டு, தங்கள் பிரார்த்தனையைச் சொல்வர். அப்போது, பல்லி சப்தமிட்டால் அதை தங்களுக்கு அம்பிகை இட்ட உத்தரவாகக் கருதி அச்செயலை துவங்குகின்றனர். அதேநேரத்தில் கோயில் வளாகத்தில் வேறு இடத்திலோ, பூதராணியிடமிருந்தோ சத்தம் கேட்டால் அச்செயலை தள்ளிப்போட்டு விடுகின்றனர். அம்பாள் சன்னதியில் பூ கட்டிப் போட்டு உத்தரவு கேட்கும் வழக்கமும் உண்டு.

மஞ்சள் பிரார்த்தனை:





குழந்தை பாக்கியம் கிடைக்க அம்பாள் சன்னதியில் 5 எலுமிச்சை மற்றும் குளியல் மஞ்சளுடன் வந்து வழிபடுகின்றனர். அர்ச்சகர்கள் அதை அம்பாள் பாதத்தில் வைத்து பூஜித்து, மூன்றை மட்டும் பிரசாதமாகத் தருவார். எலுமிச்சையை சாப்பிட்டும், மஞ்சளைத் தேய்த்து குளித்தும் வர வேண்டும்.

சுரலிங்கேஸ்வரர்:





இங்குள்ள விநாயகர் ஞானத்துடன், வேண்டும் வரங்களையும், செயல்களில் வல்லமையும் பெற அருள் செய்பவர் என்பதால் 'அருள் ஞானசுந்தர மகாகணபதி' என்று அழைக்கப்படுகிறார். திருமணத்தடை உள்ளோர் இவருக்கு தேங்காய் மாலை அணிவித்து வேண்டிச்செல்கின்றனர். இங்கு விசாலாட்சி அம்பிகையுடன், ஐந்து முகங்களுடன் கூடிய ஜுரலிங்கேஸ்வரர் இருக்கிறார். லிங்கத்தின் நான்கு புறமும் நான்கு முகங்கள் உள்ளது. மற்றொரு முகத்தைக் காண முடியாது.

விழா சிறப்பு:





ஐப்பசி மாத முதல் செவ்வாய்க் கிழமையை 10ம் நாளாகக் கணக்கிட்டு, இங்கு விழா நடக்கிறது. 9ம் நாள் காலையில் அம்பிகைக்கு கண்திறப்பு வைபவம் நடக்கும். அன்று அம்பிகை ஆயிரம் பொன் சப்பரத்தில் கொலுமண்டபம் செல்வாள். 10ம் நாளில் மண்ணால் செய்யப்பட்ட அம்பிகை, சொருபட்டை என்னும் விமானத்தில் பூஞ்சோலை எனப்படும் மைதானத்திற்கு செல்வாள். மழையில் கரையும் விதமாக அமைக்கப் படும் விமானம் இது. மைதானத்தில் சிறப்பு பூஜை செய்த பின், அம்பிகையை அங்கேயே வைத்து விடுவர். அதன்பின், 3 அல்லது 4 நாட்களுக்குள் மழை பெய்து, சிலை தாமே கரைந்து விடுவதாகச் சொல்கின்றனர்.

இருப்பிடம்:





திண்டுக்கல்லில் இருந்து கரூர் ரோட்டில் 12 கி.மீ., தூரத்தில் தாடிக்கொம்பு. இங்கிருந்து ஒரு கி.மீ., தூரத்தில் கோயில். தாடிக்கொம்பில் பிரபலமான சவுந்தரராஜப்பெருமாள் மற்றும் சுவர்ணகர்ஷண பைரவர் கோயில் உள்ளது.

திறக்கும் நேரம்:





காலை 7 - மதியம் 12, மாலை 5 - இரவு 8 .

போன்:





98657 72875.




      Our Apps Available On




      Dinamalar

      Follow us