Dinamalar-Logo
Dinamalar Logo


/ஆன்மிகம்/இந்து/கட்டுரைகள்/வாங்க... வாங்க... திருமலையில் இந்த வருடம் இரண்டு பிரம்மோற்ஸவம்

வாங்க... வாங்க... திருமலையில் இந்த வருடம் இரண்டு பிரம்மோற்ஸவம்

வாங்க... வாங்க... திருமலையில் இந்த வருடம் இரண்டு பிரம்மோற்ஸவம்

வாங்க... வாங்க... திருமலையில் இந்த வருடம் இரண்டு பிரம்மோற்ஸவம்

ADDED : செப் 17, 2012 10:17 AM


Google News
Latest Tamil News
திருப்பதி திருமலை வெங்கடாஜலபதி கோயிலில் ஆண்டு தோறும் விழாக்காலம்தான் என்றாலும், பிரம்மோற்ஸவம் என்றால் தனிக்களைதான். கீழ்திருப்பதியில் துவங்கி மேல் திருப்பதி(திருமலை)வரை வண்ண விளக்கு அலங்காரம் ஒரு பக்கம், நாட்டில் உள்ள மலர்களை எல்லாம் தருவித்து நடத்தும் மலர்கண்காட்சி ஒரு பக்கம், இத்துடன் தினமும் காலையிலும், இரவிலும் பக்தர்களுக்கு தரிசனம் தரும் உற்சவர் மலையப்பசுவாமி என்று விழா நடக்கும் பத்து நாட்களும் திருமலை பூலோக சொர்க்கமாகத் திகழும்.

வழக்கமாக வருடத்திற்கு ஓரு முறை வரக்கூடிய பிரம்மோற்ஸவம் இந்த வருடம் இரண்டு முறை வருகிறது. புரட்டாசி நவராத்திரி பிரம்மோற்ஸவம் அக்டோபர் 14 துவங்கி 23 வரை நடக்கிறது. முன்னதாக, செப்டம்பர் 18 துவங்கி 26 வரை ஒரு பிரம்மோற்ஸவம் நடக்கிறது.

சிலை இல்லாத தேர்: படைப்பு கடவுள் பிரம்மா முன்நின்று நடத்தும் திருவிழா என்பதால் பிரம்ம உற்ஸவம் என்றிருந்து பிரம்மோற்ஸவம் ஆனது. இப்போதும் மலையப்பசுவாமி உலா வரும்போது முன்னதாக பிரம்மாவின் குட்டிதேர் செல்லும். பிரம்மாவுக்கு வழிபாடு கிடையாது என்பதால், இதில் சிலை ஏதும் இருக்காது. அரூபமாகக் காட்சியளிப்பார். இந்த தேரை சிறுவர்கள், பெண்கள் இழுத்துச் செல்வார்கள்.

பிரம்மோற்ஸவத்திற்கு முதல் நாள் பெருமாளின் படைத்தளபதியான சேனை முதலியார் அவரது பரிவாரங்களான அங்கதன், அனுமன், கருடன் சகிதம் மாடவீதிகளில் உலா வந்து ஏற்பாடுகள் எல்லாம் சரியாக இருக்கிறதா என்று பார்த்து ரிப்போர்ட் செய்வார். மறுநாள் கருடக்கொடி கோயிலுனுள் ஏற்றப்படும். கருடன் கொடிமரம் வழியாக விண்ணுக்கு சென்று அங்குள்ளவர்களுக்கு அழைப்பு விடுப்பதாக சொல்வர்.

நம்ம பெருமாளுக்கு பிடிச்ச ஒருவர்னா, அது ஆதிசேஷன்தான்., பாற்கடலில் ஆனந்தமாய் பள்ளிகொண்டிருப்பதே ஆதிசேஷன் மீதுதான். ஆகவே அவருக்கு பிடித்த சேஷ வாகனத்தில் முதல் நாள் உலாவருவார். முதல் நாள் இரவு தேவியருடன் பெரிய சேஷவாகனத்தில் வலம்வந்தவர் இரண்டாம் நாள் காலை தனியாக சின்ன சேஷ வாகனத்தில் வலம்வருவார். இரவு சரஸ்வதி வேடத்தில் கையில் வீணையுடன் வெள்ளை உடையில் அன்ன வாகனத்தில் (ஹம்ச வாகனம்)வலம்வருவார்.

மூன்றாம் நாள் காலை சிம்ம வாகனத்திலும், இரவில் குளிர்ச்சியான முத்துபந்தல் வாகனத்திலும் தேவியர் இருவரும் முத்து கொண்டை போட்டிருக்க வலம் வருவர். நான்காம் நாள் கேட்டவர்களுக்கு கேட்டதை அருளும் கற்பகவிருட்சமான தங்கமரத்தின் கீழ் தேவியருடனும், காலருகே கோமாதாவுடனும் உலாவருவார். இந்த அலங்காரத்தின் போது விவசாய மக்கள் நல்வாழ்வு வாழ விசேஷ தீபாரதனை செய்வர். இதை நேத்ரானந்த தீபசேவை என்பர். சுவாமியின் கண் அருகே நீண்ட நேரம் தீபாராதனை காட்டப்படும். 'நேத்ரம்' என்றால் 'கண்'. அன்று இரவு சர்வத்தையும் ஆளும் அரசர்கள் தங்கள் தோள்களில் சுவாமியை சுமந்துவருவர் என்ற ஐதீகத்தின் அடிப்படையில், சர்வபூபாள வாகனத்தில் பவனி வருவார். 'எவ்வளவு உயர்ந்தவராயினும் எனக்கடிமை' என்று பெருமாள் இதன்மூலம் உலகுக்கு எடுத்துச் சொல்கிறார்.

ஐந்தாம் நாள் காலை மோகினிக்கோலம். சிவனாரையே சில கணம் சிந்தை கலங்கவைத்த தெய்வீக திருக்கோலத்தில், தந்த பல்லக்கில் அழகே உருவாக சுவாமி உலா வருவார். இந்த கோலத்திற்கு இன்னொரு ஸ்பெஷாலிடியும் உண்டு. ஸ்ரீவில்லிபுத்தூர் ஆண்டாள் சூடிக்கொடுத்த மாலையை சூடி, அவள் பேசிக் களித்த கிளியைத் தாங்கி வருவார். அன்று இரவு பெருமாளின் பிரியமான பக்தனான கருடன் மீது அமர்ந்து சுவாமி உலாவருவார். இதுவே பிரம்மோற்ஸவத்தின் உச்சமான நாள். மூலவருக்குரிய மகரகண்டி, லட்சுமி ஆரம் என்ற கோடிக்கணக்கான மதிப்புள்ள பழங்கால நகைகள், இன்று ஓரு நாள் மட்டும் மலையப்பசுவாமிக்கு அணிவிக்கப்பட்டு பவனி வருவார். எனவே, மூலவரையே தரிசிப்பதாக எண்ணி லட்சக்கணக்கில் பக்தர்கள் திரள்வார்கள். இதே போல தொடர்ந்து ஆறு, ஏழு,எட்டாம் நாள் திருவிழா முடிந்த பிறகு ஒன்பதாம் நாள் சக்ர ஸ்நானம் நடக்கும். சுவாமியுடன் சேர்ந்து புனிதமான குளத்தில் நீராடி மகிழ்வர். அன்று மாலை கொடி இறக்கப்படும்.

-எல்.முருகராஜ்.




      Our Apps Available On




      Dinamalar

      Follow us