Dinamalar-Logo
Dinamalar Logo


/ஆன்மிகம்/இந்து/கட்டுரைகள்/முருகனை வணங்கும் பிரம்மா

முருகனை வணங்கும் பிரம்மா

முருகனை வணங்கும் பிரம்மா

முருகனை வணங்கும் பிரம்மா

ADDED : பிப் 18, 2013 11:23 AM


Google News
Latest Tamil News
'ஓம்' என்னும் பிரணவ மந்திரத்தின் அர்த்தம் தெரியாததால், படைக்கும் தொழிலை இழந்தார் பிரம்மா. அவர் முருகனுக்கு மரியாதை தெரிவித்து பதவியை மீண்டும் பெற்ற தலம் சிதம்பரம் அருகிலுள்ள பரங்கிப்பேட்டை முத்துக்குமார சுவாமி (முருகன்) கோயில்.

தல வரலாறு:





நமுசி என்ற அசுரன், எந்த ஆயுதத்தாலும் தனக்கு அழிவு வரக்கூடாது என்று வரம் பெற்றிருந்தான். இதனால், ஆணவத்துடன் தேவர்களைத் துன்புறுத்தினான். இந்திரன் அவனுடன் போரிட்டு தோற்ற பின் தனக்கு அருளும்படி சிவனை வேண்டினான். சிவன் அவனிடம், கடல் நுரையை எடுத்து அதை அசுரன் மீது வீசும்படி கூறினார். கடல் நுரையை ஆயுதமாக கருத முடியாதென்பதால், இந்திரன் கடல் நுரையை வீச, அசுரன் அழிந்தான். மகிழ்ந்த இந்திரன் சிவலிங்க பிரதிஷ்டை செய்து பூஜித்தான். இவர் விஸ்வநாதர் எனப் பெயர் பெற்றார். இந்த சம்பவம் நிகழ்ந்த பகுதியே இன்று பரங்கிப்பேட்டை என பெயர் பெற்றுள்ளது. விஸ்வநாதர் கோயிலில், பிற்காலத்தில் முத்துக்குமார சுவாமி (முருகன்) சந்நிதி அமைக்கப்பட்டது. இவர் சிவனை விட பிரபலமாகி விட்டதால், கோயிலின் பெயரும் 'முத்துக்குமார சுவாமி கோயில்' என்றாகி விட்டது. சிதம்பரம் நடராஜர் கோயிலுக்கு வடகிழக்கில் உள்ளது.

இழந்தது கிடைக்க வழிபாடு: பொருளை இழந்தவர்கள் மீண்டும் கிடைக்கவும், அநியாயமாக பதவியிறக்கம் அல்லது வேலை இழந்தவர்கள் நிவாரணம் வேண்டி, விஸ்வநாதருக்கும், விசாலாட்சி அம்பிகைக்கும் விசேஷ பூஜை செய்கின்றனர்.

விசேஷ பிரம்மா:





சிவன் கோயில் கோஷ்டத்தில் (சுற்றுச்சுவர்) பிரம்மா, நின்ற நிலையில்தான் இருப்பார். இங்கு அமர்ந்து இரண்டு கைகளையும் கூப்பிய நிலையில் இருக்கிறார். பிரணவ மந்திரத்தின் பொருள் தெரியாததால், பிரம்மாவிடமிருந்து படைக்கும் தொழிலைப் பறித்து, அவரை சிறையில் அடைத்தார் முருகன். பின், தேவர்களின் வேண்டுகோளுக்கிணங்க அவரை விடுவித்தார். இது முருகனுக்குரிய பிரதான தலம் என்பதால், இங்கு பிரம்மா அமர்ந்த நிலையில் கைகூப்பி, முருகனுக்கு மரியாதை செலுத்தும் வகையில் உள்ளார். அருகிலுள்ள துர்க்கை எட்டு கைகளுடன் காட்சியளிக்கிறாள். வளர்பிறை அஷ்டமியன்று இவளுக்கு பூஜை நடக்கும்.

ஆறுமுகத்தின் அமைப்பு:





முத்துக்குமாரர், முன்புறம் ஐந்து, பின்புறம் ஒன்று என ஆறு முகங்களுடன், இந்திர மயில் மீது அமர்ந்த நிலையில் காட்சி தருகிறார். கிருத்திகை நாட்களில் இவருக்கு விசேஷ அபிஷேகம் நடக்கும். செவ்வாய்தோறும் இவருக்கு 'சத்ருசம்ஹார திரிசதி' அர்ச்சனை நடக்கிறது. அப்போது, முருகனின் ஆறு முகங்களுக்கும் செவ்வரளி மாலை அணிவித்து, தனித்தனியே தீபாராதனை செய்து, தனித்தனி நைவேத்யத்துடன் பூஜை நடக்கும். இவ்வேளையில் இவருக்கு தேன் படைத்து பிரசாதமாகத் தருவர்.

மாசி மக தீர்த்தவாரி:





முருகப்பெருமான் ஆடு, மயில் தவிர, சிவனுக்கு ரிய ரிஷபம் மற்றும் ஐராவதம் எனப்படும் தேவலோகத்து வெள்ளை யானையிலும் பவனி வருவார். முருகன் அருள்பெற்ற இடும்பனும் வாகனமாக இருக்கிறார். மாசி மகத்தன்று, முருகன் வங்காள விரிகுடா கடலுக்குச் சென்று தீர்த்தவாரி காண்பார்.

அமாவாசை பூஜை:





முன் மண்டபத்தில் 18 படிகளுடன் ஐயப்பன் சந்நிதி உள்ளது. தமிழ் மாதப் பிறப்பு நாட்களில் இவருக்கு விசேஷ பூஜை நடக்கும். அப்போது சுவாமி பிரகார வலம் வருவார். முன் மண்டபத்தில் உள்ள நடராஜர், ஆனி திருமஞ்சனம், மார்கழி திருவாதிரை என வருடத்தில் இருமுறை புறப்பாடாவார்.

பைரவருக்கு அமாவாசை பூஜை:





வழக்கமாக பைரவருக்கு தேய்பிறை அஷ்டமி நாட்களில்தான் விசேஷ பூஜை நடக்கும். இங்கு, அமாவாசையன்று இரவில் பூஜை நடக்கிறது. பிரகாரத்தில் ஐந்து தலை நாகத்தின் கீழே ஐந்து நாகங்களுடன் நாகராஜா சந்நிதி உள்ளது. இருபுறமும் இரண்டு நாக கன்னிகள் உள்ளனர். நாகதோஷம் மற்றும் களத்திர தோஷத்தால் திருமணத்தடை உள்ளோர் நாகருக்கு தாலி மற்றும் சிவப்பு வஸ்திரம் அணிவித்து வழிபடுகின்றனர். பிரகாரத்தில் ஆதிவிநாயகர், பாலசுப்பிரமணியர், மகாலட்சுமி, சனீஸ்வரர் மற்றும் நவக்கிரக சந்நிதிகள் உள்ளன. இமயமலையில் இருப்பதாகச் சொல்லப்படும் பாபாஜியின் தந்தை சுவேத நாதைய்யர் இக்கோயிலில்தான் அர்ச்சகராகப் பணியாற்றினார். இக்கோயிலில் பாலாலயம் நடந்துள்ளது. கும்பாபிஷேக திருப்பணிகள் வேகமாக நடக்கின்றன. பக்தர்கள் இதில் பங்கேற்கலாம்.

இருப்பிடம்:





சிதம்பரத்தில் இருந்து 22 கி.மீ., தூரத்தில் உள்ள பரங்கிப்பேட்டை பஸ் ஸ்டாண்ட் அருகில்.

திறக்கும் நேரம்:





காலை 8 - மதியம் 12, மாலை 5 - இரவு 8 .

போன்:





98948 14078, 98940 48206.




      Our Apps Available On




      Dinamalar

      Follow us