Dinamalar-Logo
Dinamalar Logo


/ஆன்மிகம்/இந்து/கட்டுரைகள்/சனாதன தர்மம் - 36

சனாதன தர்மம் - 36

சனாதன தர்மம் - 36

சனாதன தர்மம் - 36

ADDED : ஜூன் 27, 2024 01:03 PM


Google News
Latest Tamil News
பார்க்குமிடத்தில் எல்லாம்...

பார்க்கும் இடமெல்லாம் நீக்கமற நிறைகின்ற பரிபூரண ஆனந்தமே என்பார் தாயுமானவர். ஆம். சனாதன தர்மத்தைப் பொறுத்தவரை ஒரு குறிப்பிட்ட இடத்தில் மட்டும் கடவுளை வணங்கும் வழக்கமில்லை. எல்லா இடங்களிலும், எல்லாத் திசைகளிலும், எல்லாப் பொருட்களிலும் அவரைக் காணும் பக்குவத்தை வளர்ப்பதே சனாதனத்தின் நோக்கம்.

ஒருமுறை கைலாயத்தில் விநாயகர் ஒரு பூனையுடன் விளையாடிக் கொண்டிருந்தார். அவருக்குப் பசி வந்து விட்டது. உடனே பூனையை விட்டு விட்டு பராசக்தியை நோக்கி ஓடினார். அம்மா பசிக்கிறது என்றார். உடனே கொழுக்கட்டையைக் கொண்டு வந்தாள்.

அப்போது விநாயகர் தன் அம்மாவின் கன்னங்களை பார்த்தார். கன்னத்தில் கீறல் இருந்தது. பதறிப்போய், 'உன் கன்னத்தில் எப்படி கீறல் வந்தது எனக் கேட்டார். நீ தான் கீறி விட்டாய் என்றார். அம்மா... பூனையுடன் விளையாடி விட்டு இப்போது தான் வந்திருக்கிறேன். நான் எப்போது உன் கன்னத்தில் கீறினேன் என்றார் அழுகையுடன்.

உடனே பார்வதி, 'பூனையுடன் விளையாடிக் கொண்டிருந்தாய் அல்லவா! அறியாமல் உன் விரல் நகம் அதன் முகத்தில் கீறி விட்டது. அதுவே என் முகத்தில் உள்ளது. உலகத்து உயிர்களுக்கெல்லாம் நான் தானே தாய். அதனால் தான் என் முகத்திலும் கீறல் ஏற்பட்டது என்றார். விநாயகரும் தாயாரின் அன்பையும், பெருமையையும் உணர்ந்தார்.

ஆண்டாளின் பக்தி பற்றி சொல்லும் போது, 'இந்த பிரபஞ்சத்தில் எந்தப் பொருளைப் பார்த்தாலும் அதில் திருமாலைக் காணும் பேறு பெற்றிருக்கிறாள்' என வியக்கிறார் ஆழ்வார். மண்ணைத் துழாவினால் இது வாமன அவதாரத்தில் அவர் பாதம் பட்ட மண் அல்லவா எனப் பெருமைப்படுவாள். வானத்தைக் காணும் போது இது திருமால் மேவும் வைகுண்டம் என வணங்குவாள். கடலைக் கண்டால் கடல் வண்ணன் நினைவு அவள் கண்களில் இருந்து கண்ணீரைச் சொரியும். சூரியனைக் காணும் போது ஸ்ரீதரன் மூர்த்தி அல்லவா என்பாள்.

தீயைத் தழுவிக் கொண்டு அச்சுதனின் திருமேனியைத் தழுவுவது போல் அல்லவா இருக்கிறது என்பாள். காற்றைத் தழுவிக் கொண்டு என்னுடைய கோவிந்தன் என்பாள். சந்திரனைக் கண்டால் ஒளி மணிவண்ணன் என்பாள். மலையைக் கண்டால் நெடுமாலே என்பாள். மழையைக் கண்டால் நாரணன் வந்தான் என்பாள். பசுமாடு, கன்றுகளைக் கண்டால் இவை கண்ணன் மேய்த்தவை என்பாள்.

பாம்பைப் பார்த்தால் பயமின்றி அதன் பின்னே சென்று இது திருமாலின் படுக்கை என்பாள். இப்படி பத்துப் பாடல்களிலும் ஆண்டாள் எல்லாப் பொருட்களிலும் திருமாலைக் காணும் தன்மையை நமக்குக் கண்ணீர் பெருகும்படி எடுத்துக் கூறுகிறார். இதுதான் சனாதனத்தின் உச்சநிலை.

கடவுளே இல்லை; நான் தான் கடவுள் என்று ஆர்ப்பரித்துத் திரிந்த இரணியனுக்கு பக்தர்களில் சிறந்த பிரகலாதன் மகனாகப் பிறந்தான். கடவுள் எல்லா இடங்களிலும் இருக்கிறான். உலகில் பிறந்து அழியும் இரணியனான நீ எப்படி கடவுளாக முடியும் என கேட்டான். அதற்காக பிரகலாதனை மகன் என்றும் பார்க்காமல் துன்பங்களுக்கு ஆளாக்கினான். மகாவிஷ்ணுவின் அருளால் அவற்றில் இருந்து எல்லாம் பிழைத்த பிரகலாதனை நோக்கி, 'கடவுள் எங்கே இருக்கிறான்' எனக் கேட்கிறான். 'துாணிலும் இருக்கிறான்; துரும்பிலும் இருக்கிறான்' என்றான்.

இந்த துாணில் இருக்கிறானா எனக் கேட்டு கதாயுதத்தால் அடித்த போது அதில் இருந்து நரசிங்கப் பெருமாள் தோன்றினார் என்பதை வரலாறு உலகறியும். எனவே உலகின் எல்லாப் பொருட்களிலும் கடவுள் இருக்கிறார் என்பது மெய்ப்பிக்கப்பட்ட உண்மையாகும்.

கிராமப் புறங்களில் வயலில் நாற்று நடும் போது அந்த வயல் மண்ணிலேயே விநாயகரைப் பிடித்து வைத்து அவர் மீது அருகம்புல்லைச் செருகி வழிபாடு செய்வார்கள். மாவுப் பலகாரத்திற்கு மாவு பிசைந்து பலகார மாவிலேயே பிள்ளையாரைப் பிடித்து வைப்பார்கள். சாணத்தின் உதவி கொண்டு வரட்டி தட்டும் போது அது நன்றாக வர வேண்டுமே என சாணத்திலேயே பிள்ளையாரைப் பிடித்து வைத்து வழிபடுவார்கள். வரட்டியை இரண்டு நாள் கழித்துப் பார்த்தால் அதற்குள் புழுக்கள் இருக்கும். ஆனால் சாணப் பிள்ளையாருக்குள் எத்தனை ஆண்டானாலும் புழு தோன்றாது. 'சாத்திரம் பொய்யா சாணத்தைப் பார்' என்றொரு பழமொழி உண்டு.

அபிராமி பட்டர், 'நான் பார்க்கும் திசைகளில் எல்லாம் அம்பிகையின் திருவுருவத்தைக் காண்கிறேன்' என்கிறார். மகாகவி பாரதியாரும் காக்கைச் சிறகினிலே கண்ணனின் கரிய நிறத்தைக் காண்கிறார். பார்க்கின்ற மரங்களில் எல்லாம் பச்சைமா மலை போல் மேனி என ஆழ்வார் பாடியது போன்று கண்ணனின் பச்சை வண்ணத்தைக் காண்கிறார்.

எங்கெல்லாம் இனிய சங்கீதம் கேட்கிறதோ அங்கெல்லாம் கண்ணபிரானின் புல்லாங்குழல் இசையைக் கேட்பதாகக் கூறி மெய் மறக்கிறார். இதற்கும் ஒரு படி மேலே போய் எரிகின்ற தீக்குள்ளே விரலை வைத்துப் பார்க்கும் போது எம்பெருமான் கண்ணனின் திருமேனியைத் தீண்டுகின்ற மெய் சிலிர்க்கும் அனுபவம் தோன்றுவதாகக் கூறி வியக்கிறார். இப்படி ஞானிகள், பெரியவர்களின் அனுபவங்களைக் கூறிக் கொண்டே போகலாம்.

ஒரு குருநாதர் தன் மடத்தின் அடுத்த மடாதிபதியாக ஒரு நல்ல சீடனைத் தேர்ந்தெடுக்க வேண்டும் என முடிவு செய்தார். அதற்காக தன்னிடம் உள்ள சீடர்களுக்கு ஒரு தேர்வு வைக்கிறார். அனைவரையும் அழைத்து ஆளுக்கொரு மாம்பழத்தைக் கையில் கொடுத்து, 'இதை யாருக்கும் தெரியாமல் சாப்பிட்டு வாருங்கள். எங்கே சென்று சாப்பிட்டீர்கள் என என்னிடம் கூற வேண்டும்' என்றார்.

சீடர்களும் பழத்தைப் பெற்றுக் கொண்டு ஒவ்வொரு இடத்திற்குச் சென்று சாப்பிட்டனர். ஒவ்வொருவனும் ஒரு மறைவான இடத்தைக் கூறினார்கள். ஒருவன் கிணற்றுப் பின்னால் என்றான். ஒருவன் மரத்தடி, ஒருவன் ஊர் ஓரமுள்ள பாழடைந்த மண்டபம், ஒருவன் மடத்தின் பின்புறம், ஊரின் எல்லையிலுள்ள பள்ளிக்கூடம் எனப் பல்வேறு இடங்களைச் சொன்னார்கள். ஆனால் ஒருவன் மட்டும் பழத்தைச் சாப்பிடாமல் மீண்டும் திரும்பக் கொண்டு வந்து விட்டான். குருநாதர் அவனிடம், 'ஏனப்பா உனக்கு யாருக்கும் தெரியாமல், மறைவாகச் சாப்பிட இடமே கிடைக்கவில்லையா?' எனக் கேட்டார்.

சீடனும் பணிவுடன், 'குருவே! நான் எந்த மறைவான இடத்திற்குச் சென்றாலும் அங்கு ஒருவர் என்னைக் கண்காணித்துக் கொண்டே இருக்கிறார். அவர் தான் கடவுள். அவரே எங்கும் நீக்கமற எல்லாப் பொருட்களிலும் நிறைந்திருக்கிறார்' எனக் கூறி பழத்தை திரும்பக் கொடுத்தான். 'உன்னைப் போன்ற ஒரு நல்ல சீடனை, ஞானம் மிக்கவனைத் தான் தேடினேன். கடவுள் எனக்கு உன்னை வழங்கி என்னை ஆசியளித்து விட்டார்' என்று அவனைக் கட்டித் தழுவிக் கொண்டார். அவனே அடுத்த மடாதிபதி ஆனான்.

இந்த உலகத்தில் நம்மைக் கண்காணிப்பவர்கள் எவரும் இல்லை என அறிந்து தவறு செய்பவர்களே அதிகம் பேர். ஆனால் உண்மையில் நம்மைக் கண்காணிக்கும் கடவுள் இல்லாத இடம் கிடையாது. ஆழ்ந்த விழப்புணர்வுடன் சிந்தித்துப் பார்த்தால் கடவுள் என்னும் கண்காணிப்பாளர் எங்கும் இருப்பதை உணர முடியும். அவ்வாறு உணர்ந்த பிறகு தங்களிடம் இருக்கும் தவறுகளை மனிதர்கள் விட்டு விடுவார்கள் என்கிறார் திருமூலர்.

பார்க்கும் இடமெல்லாம் பரம்பொருள் இருக்கின்றான் என்ற உண்மையை மதம் கடந்து சனாதன தர்மம் விதைக்கிறது என்பதன் மூலம் சனாதன தர்மம் ஒரு வாழ்வியல் முறை என்பதை உணர முடியும். எல்லாம் வல்ல கடவுள் எங்கும் நிறைந்திருக்கிறார். அவரிடம் நம்மைக் காத்தருள வேண்டுவோம்.

-முற்றும்

இலக்கிய மேகம் ஸ்ரீநிவாசன்

93617 89870

இந்த தொடரை புத்தகமாக பெற 1800 425 7700ல் தொடர்பு கொள்ளலாம்.





      Our Apps Available On




      Dinamalar

      Follow us