Dinamalar-Logo
Dinamalar Logo


/ஆன்மிகம்/இந்து/கட்டுரைகள்/அழகு குட்டி செல்லம்

அழகு குட்டி செல்லம்

அழகு குட்டி செல்லம்

அழகு குட்டி செல்லம்

ADDED : ஜூன் 21, 2024 01:00 PM


Google News
Latest Tamil News
குறும்புச் சிரிப்பு. குதுாகலப் பார்வை. மழலை மொழி பேசும் கண்கள். இதழ்களில் தேனாக சிந்தும் எச்சில். இதுபோல் குழந்தையின் அழகை வர்ணித்துக் கொண்டே போகலாம். பிஞ்சுக் குழந்தைகளின் முகத்தை பார்த்தாலே கவலைகள் மறந்து போகும். இவர்களின் பிஞ்சுக் கால்கள் நெஞ்சிலே தடம் பதித்து, நடை பழக சொல்லித்தர யாருக்குத்தான் ஆசையிருக்காது. ஆனால் சிலருக்கு இந்த வாய்ப்பு அமையாமல் தள்ளிப் போகும். இவர்களுக்கு ஆறுதல் கொடுக்க காத்திருக்கிறாள் செங்கல்பட்டு மாவட்டம் திருக்கழுக்குன்றம் சொக்கம்மாள்.

தனக்கோடி, மங்கையற்கரசி தம்பதியர் தர்மம் செய்வதில் வல்லவர்கள். குழந்தை இல்லாததால் திழுக்கழுக்குன்றம் வேதகிரீஸ்வரரிடம் முறையிட்டனர்.

மனம் குளிர்ந்த சுவாமியும் சிவனடியாராக வடிவெடுத்து தனக்கோடி வீட்டிற்கு வந்தார். மகிழ்ச்சியுடன் வரவேற்று உணவு படைத்து நமஸ்காரம் செய்தனர்.

அவர்களின் மனநிலையை உணர்ந்து, ''வேதமலையை 48 நாட்கள் சுற்றுங்கள். எண்ணம் நிறைவேறும்'' என வாக்களித்தார். அதன்படி சங்கு தீர்த்தத்தில் நீராடி கிரிவலம் வந்தனர். ஒருநாள் அதிகாலையில் பெண் குழந்தையின் அழுகுரலை கேட்டு எழுந்தனர்.

ஆம்! பார்வதி குழந்தை வடிவில் வீட்டிற்குள் வந்தாள். அவளுக்கு 'சொக்கம்மாள்' எனப் பெயரிட்டனர். திருமண வயதை அடைந்த போது பங்குனி உத்திர நாளில் வேதகிரி மலையை வலம் வந்த பிறகு திருமணம் பற்றி பேசலாம் எனத் தெரிவித்தாள் சொக்கம்மாள்.

அதன்படி தந்தை முன்னே செல்ல மகள் பின் தொடர்ந்தாள்.

ஓரிடத்தில் மகளைக் காணாமல் திகைத்து நின்றார். அப்போது சுவாமியும், அம்மனும் அவருக்கு காட்சியளித்தனர். ''பார்வதியே குழந்தையாக உன்னிடம் வளர்ந்தாள். என்னை அடையும் நேரம் வந்ததால் சொக்கம்மாள் மறைந்தாள்'' என்றார் சுவாமி.

'' பார்வதி மகளாக பிறக்க நான் பாக்கியம் செய்திருக்கிறேன். இங்கு வழிபடுவோருக்கு குழந்தை வரம் கொடுங்கள்'' என பிரார்த்தித்தார். வரமளித்துவிட்டு சுவாமியும் மறைந்தார். வேதகிரி ஈஸ்வரரை பார்வதி அடைந்த நாள் பங்குனி உத்திரம். இந்நாளில் இங்கு திருக்கல்யாணம் நடக்கிறது. வேதகிரி சுற்றுப்பாதையில் உள்ள சிறுமலையில் சொக்கம்மன் வீற்றிருக்கிறாள். அவளின் கண்கள் நம் கண்ணில் உள்ள ஏக்கத்தை துளைக்கும். மனதில் உள்ள துக்கத்தை கரைக்கும். அவளது அருளால் அழகு குட்டிச் செல்லம் உங்கள் வீட்டில் தவழும்.

எப்படி செல்வது: செங்கல்பட்டில் இருந்து 12 கி.மீ.,

விசேஷ நாள்: தமிழ்ப்புத்தாண்டு, வைகாசி விசாகம், பவுர்ணமி.

நேரம்: காலை 6:30 - 11:00 மணி; மாலை 5:00 - 8:00 மணி

தொடர்புக்கு: 93805 65799

அருகிலுள்ள தலம்: பாடலாத்ரி சிங்கப்பெருமாள் கோயில் 25 கி.மீ., (எதிரி பயம் தீர...)

நேரம்: காலை 7:00 - 12:00 மணி; மாலை 4:30 - 8:30 மணி

தொடர்புக்கு: 044 - 2746 4325, 2746 4441





      Our Apps Available On




      Dinamalar

      Follow us