Dinamalar-Logo
Dinamalar Logo


/ஆன்மிகம்/இந்து/கட்டுரைகள்/சனாதன தர்மம் - 31

சனாதன தர்மம் - 31

சனாதன தர்மம் - 31

சனாதன தர்மம் - 31

ADDED : மே 24, 2024 09:39 AM


Google News
Latest Tamil News
காக்கை குருவி எங்கள் ஜாதி...

யாவர்க்குமாம் பசுவிற்கு ஒரு வாயுறை என்கிறார் திருமூலர். இங்கே பசு என்பது எல்லா விலங்குகளையும் குறிக்கும். உயிர்களிடத்தில் அன்பு வேண்டும் என்பது மகாகவி பாரதியாரின் வைர வரிகள்.

இப்போது மனிதநேயம் என்ற சொல்லை பயன்படுத்தி வருகிறார்கள். ஆனால் சனாதனத்தைப் பொறுத்தவரையில் மனித நேயத்தையும் கடந்து உயிர்கள் மட்டுமல்ல அசையும், அசையா அத்தனைப் பொருட்கள் மீதும் நாம் நேயத்துடன் நடக்க வேண்டும் என்பது தான். காலை எழுந்தவுடன் பூமித்தாயைத் தொட்டு வணங்குவது முதல் வீடு கட்டத் தொடங்கும் முன்பாக வாஸ்து பூஜையின் போது அவ்விடத்தில் வசிக்கும் சிற்றுயிர்களிடம் மன்னிப்பு கேட்பது வரை ஒவ்வொரு செயலிலும் நேயத்தை வெளிப்படுத்துகிறோம்.

மலைகள், ஆறுகள், காடுகள் என அனைத்தும் வழிபாட்டிற்கு உரியவை என்னும் போது ஒவ்வொரு பொருளிலும் கடவுளையே நாம் காண்கிறோம். ஆகவே தான் தாயுமானவர், 'எல்லோரும் இன்புற்றிருக்க நினைப்பதுவே அல்லாமல் வேறொன்று அறியேன் பராபரமே' எனப் பாடினார். வள்ளலாரும் 'வாடிய பயிரைக் கண்ட போதெல்லாம் வாடினேன்' என உள்ளம் கசிந்தார். இந்த பிரபஞ்ச இயக்கம் மனிதன் வாழ்வதற்கு மட்டுமல்ல. எல்லா உயிரினங்களும் அதனதன் போக்கில் இயல்பாக வாழ்வதற்கு நாம் உதவினால் மட்டுமே நாமும் நிம்மதியாக வாழ இயலும். எனவே நதிகளை தெய்வங்களாகப் போற்றினார்கள். மலைகளின் மீது கோயில்களைக் கட்டினார்கள். இறையச்சம் இருந்தவரை இயற்கை அழிக்கப்படவில்லை என்பதை நினைத்துப் பார்க்க வேண்டும்.

சரி, குறைந்த பட்சம் பறவை, விலங்குகள் மீதாவது அன்புடன் இருக்கப் பழகுவோம். பசுவை தெய்வமாகவே வணங்குகிறோம். பசுவிடம் இருந்து பெறப்படும் பால், தயிர், நெய், சாணம், கோமியம் ஆகியன சரியான விகிதத்தில் கலக்கப் பெற்று நம் வீட்டு விசஷேங்களில் நாம் குடிக்கத் தரப்பட்டது. இதை 'பஞ்சகவ்யம்' என்பார்கள். சிவபெருமானுக்கு அபிஷேகம் செய்வார்கள்.

'ஆவினுக்கு அருங்கலம் அரன் அஞ்சாடுதல்' என்பார் திருநாவுக்கரசர்.

இது இன்றைய மருந்துக்கு இணையானது என்கிறது மருத்துவ உலகம். வெளிநாடுகளில் விற்பனை செய்யப்படுகிறது. எனவே தான் இதை குழந்தை பிறந்த பெண்கள், ருதுவான பெண்களுக்கு நோய் எதிர்ப்பு சக்திக்கான மருந்தாக அந்தக் காலத்தில் தந்தனர். எனவே பசுக்களைக் காப்பது நம் கடமை.

பகவான் ரமணரிடம் மருத்துவத்தால் தீர்க்க இயலாத தோல் நோயுடன் வந்தார் ஒரு செல்வந்தர். அவரால் ஆடைகளைக் கூட அணிய முடியாத சூழ்நிலை இருந்தது. அவரை ஒரு மண்டலம்(48 நாள்) பசுக்கள் இருக்கும் கோசாலையை சுத்தம் செய்யும்படி பணித்தார் ரமணர். பகவானின் அருளாலும், கோசாலையின் மகிமையாலும் பூரண குணம் ஏற்பட்டது.

இன்றும் பல்வேறு இடங்களில் காஞ்சி மஹாபெரியவரின் வழிகாட்டுதலில் கோசாலைகள் மின்விசிறி உள்ளிட்ட நவீன வசதிகளுடன் சிறப்பாக பராமரிக்கப் படுகிறது. வயதான அடிமாடுகளைக் கூட விலை கொடுத்து வாங்கி அவற்றைப் பராமரிக்கும் பணிகளையும் பலர் ஆர்வமுடன் செய்கிறார்கள்.

பழங்காலத்தில் செம்பாறாங்கற்களில் தொட்டிகள் அமைத்து காடுகளில் கொண்டு போய் வைத்து விட்டு வருவார்கள். காரணம் மழை பெய்யும் போது அதில் தண்ணீர் நிரம்பி விலங்குகள் குடிக்க உதவியாக இருக்கும் என்பதற்காக. மேலும் செம்பாறாங் கற்களை துாண் போல நடுக்காடுகளில் நட்டும் வைப்பார்கள். உடம்பு அரிக்கும் போதோ அல்லது ஒட்டுண்ணிச் செடிகள் ஒட்டியதை நீக்குவதற்காக அதன் மீது சொரியவோ இத்தகைய தர்மங்களைச் செய்தார்கள். இதனை 'ஆவுரிஞ்சு தறி' என்பார்கள். பசுக்கள் உராய்ந்து தினவு தீர்க்க நடப்படும் கல்துாண்கள் என்பது இதன் பொருள். விலங்குகளிடம் எத்தைகைய அன்பைச் செலுத்தினர் என்பதற்கு இது உதாரணம்.

சிபிச் சக்கரவர்த்தியின் வரலாறு உலகமே அறிந்த விஷயம். தர்மநெறி தவறாத சிபிச் சக்கரவர்த்தி மீது தேவர்களே பொறாமைப்பட்டனர். இத்தகைய கருணையாளனின் அன்பை உலகிற்கு தெரிவிக்க வேண்டும் என்ற நோக்கத்தில் தேவேந்திரன், அக்னியுடன் பூலோகம் வந்தான்.

அக்னி ஒரு புறாவாகவும், தேவேந்திரன் ஒரு பருந்தாகவும் மாறிக் கொண்டனர். சிபிச் சக்கரவர்த்தி தன் தோட்டத்தில் உலா வரும் போது அவரிடம் ஒரு புறாவானது பயத்துடன் அடைக்கலம் புகுந்தது. புறாவை ஆதரவாக கைகளால் அணைத்துக் கொண்டார். அதை துரத்தி வந்த பருந்தானது அவரிடம், 'சிபியே... இது என் உணவு. இதை என்னிடமே ஒப்படைத்திடு. அதுவே தர்மம்'' என்றது. உடனே சிபியும், ''மனிதனைப் போல நீ பேசுவது விந்தையாக இருக்கிறது. இருப்பினும் என்னிடம் அடைக்கலமாக வந்த புறாவை எப்படி ஒப்படைப்பது? எனக் கேட்டார்.

அதற்குப் பருந்தோ, 'அனைத்து உயிர்களிடமும் அன்பாக உள்ளவன் நீ என்பதை உலகமே அறியும். ஆகவே என் பசியைப் போக்குவது உன் கடமை'' எனக் கேட்டது. ''உண்மை தான். உன்னை பசியோடு விடக் கூடாது. உனக்குத் தேவை உணவு தானே. நீயும், புறாவும் எனக்கு ஒன்று போலத்தான். ஆயினும் அடைக்கலமாக வந்ததைக் காப்பாற்றுவது என் கடமை. உனக்கு மாமிசம் தானே வேண்டும் என்று சொல்லி ஒரு தராசைக் கொண்டு வரச் சொன்னார்.

ஒருபுறம் புறாவை வைத்து மறுபுறம் தன் தொடையில் இருந்து சதையை அறுத்து வைக்கத் தொடங்கினார். இன்று பிளாஸ்டிக் சர்ஜரிக்கு தொடைப்பகுதியில் சதையை எடுப்பது என்னும் மருத்துவ முறையை எப்போதோ சொன்னது நம் சனாதனம்.

தராசின் முள் நேராக வரவில்லை. உடம்பின் பல பகுதிகளிலும் சதை அறுத்து வைக்கப்பட்டது. தராசு நேருக்கு நேராக வரட்டும் என தானே தராசில் அமர்ந்தார். தராசு சரியானது. இந்திரனும், அக்னியும் உண்மை உருவில் காட்சியளித்து சிபியை வாழ்த்தினர். புறாவிற்காகத் தன்னையே ஈந்த சிபியின் நேயம் உலகம் உள்ள வரைக்கும் இருக்கும். மனித நேயம் கடந்த உயிர்க்குல நேயம் இது.

தற்காலத்தில் பலர் மலைப்பகுதிகளுக்குச் செல்லும் போது குரங்குகளுக்கு உணவாக பழங்களை வழங்குகின்றனர். புறா, குருவி, கிளி போன்ற பறவைகளுக்கு மொட்டை மாடியில் தானியங்களைப் பரப்பி ஓசைபடாமல் காத்திருந்து அவை உண்பதைக் கண்டு களிக்கின்றனர்.

கண்ணுக்குத் தெரியாத சிற்றுயிருக்காக அரிசி மாவில் கோலம் இட்டது தான் நம் ஆன்மிகம். அது பின்னர் சனாதனத்தைப் பற்றிய அக்கறையின்மையால் கோலப்பொடியாக மாறியது.

முப்பது ஆண்டுகளுக்கு முன்பெல்லாம் கோயில்களுக்கு செல்லும் போது ஒரு பாக்சில் நொய்யரிசியும், வெல்லத் துாளும் கலந்து எடுத்துச் செல்வார்கள். அங்கேயுள்ள தலவிருட்சத்தைச் சுற்றிலும் அதை எறும்புகளுக்கு உணவாக இடுவர். இதை வழிபாடாகவே கருதினர் .ஆனால் இப்போது அமாவாசையன்று மட்டும் அகத்திக்கீரையுடன் பசுக்களைத் தேடி ஓடுகிறோம். அவை ஓட்டம் பிடிப்பதைக் காணும் போது ஏன் மற்ற நாளிலும் முன்னோர் ஆசி பெற அவற்றுக்கு கீரை தரலாமே என எண்ண வைக்கிறது.

இவ்வளவு ஏன்... முன்பெல்லாம் வயலில் நெல்லை விதைக்கும் போது, ''காத்தவன் தின்றது போக, கள்வன் தின்றது போக, கண்டவன் தின்றது போக, பறவைகள் தின்றது போக எனக்கு கொஞ்சம் விளையணும் சாமி'' என பாட்டு பாடியவர்களின் பரம்பரையில் வந்தவர்கள் நாம்.

நம் சனாதனம் உயிர்கள் மீது எத்தனை கருணையுடன் இருக்கிறது என்பதற்கான உதாரணங்கள் இப்படி எத்தனையோ உள்ளன. நாம் உயிர்களை நேசிப்போம். இந்த பிரபஞ்சத்தையே வாழ்த்தி மகிழ்வோம்.

-தொடரும்

இலக்கிய மேகம் ஸ்ரீநிவாசன்

93617 89870





      Our Apps Available On




      Dinamalar

      Follow us