Dinamalar-Logo
Dinamalar Logo


/ஆன்மிகம்/இந்து/கட்டுரைகள்/டில்லி திருப்பதி

டில்லி திருப்பதி

டில்லி திருப்பதி

டில்லி திருப்பதி

ADDED : மார் 15, 2024 11:15 AM


Google News
Latest Tamil News
டில்லி ராமகிருஷ்ணபுரத்தில் ஸ்ரீவெங்கடேஸ்வரா (பாலாஜி) மந்திர் என்னும் பெயரில் ஏழுமலையான் கோயில் உள்ளது. இங்கு பக்தர்கள் முடிக்காணிக்கை, காது குத்துதல், அங்கப் பிரதட்சணம் நேர்த்திக்கடன்களைச் செய்கின்றனர்.

முன்பு வேலைவாய்ப்பு, குடும்பச் சூழ்நிலை காரணமாக இப்பகுதியில் குடியேறிய மக்கள் இக்கோயிலை நிர்மாணித்தனர். பின்னர் ராஜ கோபுரம், அர்த்த மண்டபம், மகா மண்டபம் கட்டப்பட்டு கும்பாபிஷேகம் நடத்தப்பட்டது.

ஐந்து நிலைகளுடன் கூடிய ராஜகோபுரம் கம்பீரமாக நிற்கிறது. கருவறையில் சீனிவாசப்பெருமாள் மூலவராகவும், அலர்மேல் மங்கைத் தாயார் தனி சன்னதியிலும் அருள்கின்றனர். முன்புறம் 41 அடி உயர கொடிமரம் தாமிரக் கவசத்துடன் உள்ளது. ஆண்டாள், அனுமன், ஆழ்வார்கள், நிகமாந்த மகாதேசிகன், லட்சுமி நரசிம்மர், சுதர்சனாழ்வார் சன்னதிகள் பிரகாரத்தில் உள்ளன. இங்குள்ள கண்ணாடி அறை பார்க்க அழகாக இருக்கும். மூன்று ஆண்டுக்கு ஒருமுறை காய்க்கும் மாமரமே இங்கு தலவிருட்சம். வளாகத்தில் உள்ள நந்தவனத்திலேயே பூஜைக்குரிய பூக்கள், துளசி இலைகள் சேகரிக்கப்படுகின்றன. நம்மாழ்வார் சன்னதியின் மீது குடை விரித்தது போல மகிழ மரம் உள்ளது.

சித்ரா பவுர்ணமியன்று கஜேந்திர மோட்ச விழாவில் கஜேந்திரன் என்னும் யானையின் சிலைக்கு அருகிலுள்ள தொட்டியில் தண்ணீர் நிரப்பப்பட்டு யானை நீராட வரும் வைபவம் நடக்கிறது. அப்போது பெருமாள் கருட வாகனத்தில் எழுந்தருள்வார்.

கார்த்திகை உத்திரட்டாதியன்று நடக்கும் வார்ஷீக விழாவன்று அபிஷேகம், வீதியுலா நடக்கும். அனுமனுக்கு மார்கழி மூலத்தன்று வடைமாலை சேவை நடப்பது சிறப்பு. இங்குள்ள பாடசாலையில் நாலாயிர திவ்ய பிரபந்தம், ஆழ்வார்களின் வரலாறு சொல்லித் தருகின்றனர். தினமும் அதிகாலையில் விஸ்வரூப தரிசனத்தின் போது கோபூஜையை தரிசிக்கலாம்.

எப்படி செல்வது: டில்லியில் இருந்து காந்தி மார்க்கம் வழியாக 22 கி.மீ.,

விசேஷ நாள்: வைகுண்ட ஏகாதசி, புரட்டாசி சனிவாரம், பங்குனி உத்திரம்.

நேரம்: காலை 7:00 - 11:00 மணி; மாலை 5:00 - 8:00 மணி

தொடர்புக்கு: 011 - 2610 9096

அருகிலுள்ள தலம்: லட்சுமி நாராயண் மந்திர் (மதர் தெரசா கிரஷன்ட் வழியாக 12 கி.மீ.,) (செல்வம் பெருக...)

நேரம்: அதிகாலை 4:30 - 1:00 மணி; மதியம் 2:30 - 9:00 மணி

தொடர்புக்கு: 011 - 2336 3637





      Our Apps Available On




      Dinamalar

      Follow us