Dinamalar-Logo
Dinamalar Logo


/ஆன்மிகம்/இந்து/கட்டுரைகள்/தலவிருட்சங்கள் - 30

தலவிருட்சங்கள் - 30

தலவிருட்சங்கள் - 30

தலவிருட்சங்கள் - 30

ADDED : டிச 15, 2023 11:38 AM


Google News
Latest Tamil News
திருக்கானாட்டுமுள்ளூர் பதஞ்சலீஸ்வரர் -- எருக்கு

சிவனின் நடனத்தை காண விரும்பினார் பாற்கடலில் வாழும் ஆதிசேஷன். அதற்கான அனுமதியை மகாவிஷ்ணுவிடம் கேட்க, “ பூமியில் பதஞ்சலி முனிவராக அவதரித்து சிவனின் நடனத்தைக் காண்பாயாக” என வரமளித்தார். ஆதிசேஷனும் அவதரித்து சிதம்பரத்தில் நடனத்தை கண்டு மகிழ்ந்தார். ஆனாலும் திருப்தி வரவில்லை. மீண்டும் நடனத்தைக் காண விரும்பி நந்தியிடம் ஆலோசித்தார். “மதுாக வனத்தில் சிவநடனத்தை காணலாம்” என்றார். அதன்படி பதஞ்சலி தரிசித்த தலமே கானாட்டுமுள்ளூர். முன்பு காணாட்டம்புலியூர் என அழைக்கப்பட்டது. பதஞ்சலி முனிவருக்காக ஆடியதால் பதஞ்சலிநாதர் என சுவாமி அழைக்கப்படுகிறார்.

சிவன் காலடி வைத்த இடமெல்லாம் சிவலிங்கமாக மாறியதால் இக்கோயிலின் மண்ணை வீட்டிற்கு எடுத்துச் சென்று வழிபடுகின்றனர். இதனால் பாவம் நீங்குவதோடு செல்வம் பெருகும். கோல்வளை கையம்பிகை, அம்புஜாட்சி, காணார்குழலி என்றும் அம்மனுக்கு பெயர்கள் உண்டு. இடது காலை முன்பக்கமாகவும், உடலை பின்பக்கமாகவும் சாய்த்தபடி சுவாமி நடனமாடுவதால் மகிழ்ச்சியை வேண்டுபவர்கள் இங்கு வருகின்றனர்.

மதுாக வன பதஞ்சலீஸ்வரர் கோயிலின் தலவிருட்சம் எருக்கு. கலோடிராபிஸ் ஜய்ஜான்டியா (Calotropis gigantea) என்னும் தாவரவியல் பெயரும், அப்போசினேசியே குடும்பத்தை சார்ந்ததுமான வெள்ளை நிறப் பூக்களையுடைய எருக்குச்செடி மருத்துவ குணம் கொண்டது.

சுந்தரர் பாடிய பாடல்

விடை அரவக்கொடி ஏந்தும் விண்ணவர்தம்

கோனை வெள்ளத்து மாலவனும்

வேத முதலானும் அடியிணையும் திருமுடியும்

காண அரிதாய சங்கரனைத்

தத்துவனைத் தையல் மடவார்கள்

உடைஅவிழக் குழல்அவிழக் கோதை

குடைந்தாடக் குஙடகுடங்கள் உந்திவரும்

கொள்ளிடத்தின் கரைமேல் கடைகள்

விடுவார் குவளை களைவாருங் கழனிக்

கானாட்டு முள்ரில் கண்டுதொழுதேனே

கொள்ளிடக் கரைமேல் திருமுடி அணிந்து ஆடும் கானாட்டு சங்கரனை வணங்குகிறேன் எனப் பாடுகிறார் சுந்தரர்.

சித்தர் போகர் பாடிய பாடல்

எருக்கினுடப் பெயர்தனையே யியம்பக்கேளு

யேகயிட்சி காசுகலாவி க்ஷரம்

பருக்கினுட பாணுசதா புஷ்பமாகும்

பரிதியாஞ் சூரியானஞ் சீரமாகுஞ்

சருக்கினுடச் சம்பல க்ஷரப்பிரனே

சிசாலைப் போடபாலைக் காரவீசி

திருக்கிணுட கிருமினா சனியுமாகுஞ்

செப்பியதோ ரெருக்கினுடச் செயலுமாமே.

ஏகஇச்சி, காசுகலாவி, கூரம், சதாபுஷ்பம், சூரியன், அஞ்சீரம், சம்பல், கூரப்பிரன், பாலைக்காரநீதி, கிருமிநாசினி என பல பெயர்களைக் குறிப்பிடுகிறார்.

சித்தர் அகத்தியர் பாடிய பாடல்

எலிவிஷங் குஷ்டம்ஐயம் ஏறு கிருமி

வலிசூலை வாயுவிஷம் மந்தம் மலபந்தம்

எல்லாம் அகலும் எருக்கிலை யைக்கண்டக்கால்

வில்லார் நுதலே விளம்பு

எருக்கு இலையால் எலிக்கடி,

விஷ பயம், தோல் நோய், கபம், உடல் வலி, மலச்சிக்கல் நீங்கும்.

சித்தர் தேரையர் பாடிய பாடல்

வாத முடன்பிடிப்பு வந்த சுரஞ்சந்நி

ஓதப் பலவிஷங்க ளொட்டுப்புண் சேதமுறச்

செய்யு மடமயிலே செப்புதற் கெண்ணாளும்

வெய்யெருக்கின் பட்டைதனை வேண்டு.

எருக்கு பட்டையால் வாத பிடிப்பு, ஜுரம், ஜன்னி, தொற்று புண்கள் நீங்கும்.

எருக்கம்பாற் கட்டிகளை யேகரைக்கும்

வாய்வைத்

திறக்கறவே கொன்றுவிடுந் தீராச் செருக்கான

சந்நி வலிதீர்க்குஞ் சார்ந்தபல சிந்துார

முன்ன முடிக்குமென் றோர்.

எருக்கம்பாலை நல்லெண்ணெய்யுடன் குழப்பி பற்றிட மூட்டுவீக்கம் தீரும். ஒருதுளி எருக்கம்பாலை துணியில் தொட்டு பல் சொத்தையுள்ள இடத்தில் வைத்தால் பல்வலி, வீக்கம், பல்லில் உள்ள பூச்சி நீங்கும்.

பழுக்க காய்ச்சிய செங்கல் மீது பழுத்த எருக்கு இலையை வைத்து அதன் மீது குதிங்காலை வைக்க குதிகாலில் வேண்டாத எலும்பு வளர்ச்சி கட்டுப்படும். எருக்கு இலையை சுருட்டி வேப்பெண்ணெய்யில் தொட்டு ஒற்றடமிட மூச்சுப்பிடிப்பு நீங்கும். எருக்கம்பூவை மிளகுடன் சேர்த்து அரைத்து மாத்திரையாக்கி சாப்பிட இளைப்பு நீங்கும். குழந்தைகளுக்கு திருஷ்டி தீர எருக்கில் இருந்து நாரைப் பிரித்தெடுத்து கயிறாக்கி கைகள், இடுப்பில் கட்டலாம்.

எப்படி செல்வது: சிதம்பரத்தில் இருந்து காட்டுமன்னார் கோயில் சென்று அங்கிருந்து 8 கி.மீ.,

நேரம்: காலை 6:00 - 11:00 மணி, மாலை 5:00 - 7:00 மணி

தொடர்புக்கு: 93457 78863

-தொடரும்

ஜெ.ஜெயவெங்கடேஷ்

98421 67567





      Our Apps Available On




      Dinamalar

      Follow us