Dinamalar-Logo
Dinamalar Logo


/ஆன்மிகம்/இந்து/கட்டுரைகள்/தலவிருட்சங்கள் - 27

தலவிருட்சங்கள் - 27

தலவிருட்சங்கள் - 27

தலவிருட்சங்கள் - 27

ADDED : நவ 17, 2023 01:38 PM


Google News
Latest Tamil News
மதுரை பேச்சியம்மன் - கல்லால்

காவல் தெய்வங்களில் ஆண் தெய்வமான இருளப்ப சாமியும், பெண் தெய்வமான பேச்சியம்மனும் தென் மாவட்டங்களில் புகழ் பெற்றவர்கள். வைகையாற்றின் படித்துறை ஒன்றில் இருக்கும் கல்லால் மரத்தடியில் இருக்கும் பெண் தெய்வம்தான் சக்திதேவி என்ற பேச்சியம்மன். மதுரை நகரின் காவல் தெய்வங்களில் ஒன்றான இந்த அம்மன் கருவறையில் பிரம்மாண்டமாக காட்சியளிக்கிறாள். பேச்சு வராமல் தவித்த பெண் ஒருத்தி, வைகையாற்றின் படித்துறையில் உள்ள கல்லால் மரத்தடியில் நின்று வழிபட்டாள். அப்போது ஓங்கிய வலக்கையும், இடக்கையில் குழந்தையுமாக சுயம்பு வடிவில் பேச்சியம்மன் காட்சியளித்து பேசும் ஆற்றலைக் கொடுத்தாள்.

நாகம்மாள், கருப்பசாமி, இருளப்பசாமி, அய்யனார், வீரமலை பெரியண்ணன், சின்னன்னன், சப்த கன்னியர், வராகி, வானப்பட்டறையர், முனீஸ்வரர் ஆகியோருக்கு இங்கு சன்னதிகள் உள்ளன. வெள்ளிக்கிழமைகளில் அபிேஷகம் முடிந்ததும் அம்மன் பச்சைப் பட்டாடையில் பக்தர்களுக்கு காட்சி தருகிறாள். தினமும் மாலையில் குங்கும அலங்காரம் நடக்கிறது. திக்குவாய், பேச்சு வராத குழந்தைகளுக்கு தேன் பிரசாதம் தருகின்றனர். தினமும் இதைச் சாப்பிட்டால் குறைபாடு மறையும். நாகதோஷம், புத்திர தோஷம் தீர பால் அபிஷேகம் செய்கின்றனர்.

கோயிலின் தலவிருட்சமாக ஆயிரம் ஆண்டுகள் பழமையான கல்லால் மரம் உள்ளது. பைக்கஸ் மைக்ரோகார்பா (Ficus microcarpa) என்னும் தாவரவியல் பெயர் கொண்ட இது மோரேசியே குடும்பத்தை சேர்ந்தது. ஆலமர குடும்பத்தைச் சேர்ந்த இதன் பால், விழுது, பூ, பட்டை, இலை அனைத்தும் சித்த மருத்துவத்தில் பயன்படுகின்றன.

சித்தர் போகர் பாடிய பாடல்

ஆலினிட பேர்தனையே யறியக்கேளு

அழகான வாடாத்த பலசிரிங்கி

நீலினிட நியக்குரோத கந்தசொத்துரு

நிச்சயமாம் கூரிவைசிர வணரவாபி

பாலினிட பகுவாதாவனப் பதியுமாகும்

பாரமாம் பரமாகும் பாலி ஆகும்

பாலினிட பஞ்சணையாம் வடவிருட்சமாகும்

பாடியதோ ராலினிட பேருமாமே.

வாடாத்தம், பலசிரிங்கி, நியக்கு, ரோதகந்தம், சொத்துரு, கூரிவை, சிரவணம், பகுவாதவணம், பரமாகும்பாலி, பஞ்சணை, வடவிருட்சம் என்னும் பெயர்களால் ஆலமரம் குறிப்பிடப்படுகிறது.

அகத்தியர் பாடிய பாடல்

சொல்லுகின்ற மேகத்தைத் துட்ட

அகக்கடுப்பைக்

கொல்லுகின்ற நீரிழிவைக் கொல்லுங்காய் -

நல்லாலின்

பாலும் விழுதும் பழமும் விதையும் பூவும்

மேலும் இலையுமென விள்

அருகம்புல்லை பொடி செய்து, அதற்கு சம அளவு ஆலமரத்தின் பாலை சேர்த்து, 48 நாள் சாப்பிட தோலில் தோன்றும் வெள்ளை நிறம் நீங்கும். ரத்தசோகை மறையும். சர்க்கரை நோய், வயிற்றுக்கடுப்பு, மேக நோய்களை நீக்கி, உடலுக்கு வலிமை தரும் என அகத்தியர் குறிப்பிடுகிறார்.

சித்தர் தேரையர் பாடிய பாடல்

அச்சரம் புண்கிரந்தி யாவும் பயந்தோட

வச்சமற மேகமுந்தீ யாகுமே - இச்சகத்தில்

நாததென மூவருக்கு நற்றுணையா

மாக்கைக்கும்

பூத மதிபதியைப் போல்

வாய்ப்புண்கள், கொப்புளம் மறைய இலை, பட்டையை கஷாயம் செய்து வாய் கொப்பளிப்பது நல்லது.

வடமரவீழ் பல்லிறுக்கு மாமேகம் போக்கு

மடர்கொழுந்தி ரத்தப்போக் காற்றும் -

படரதிலாம்

புல்லுருவி யொன்றெய்திற் பொல்லா விடபாக

வல்லுருவி லுண்மை மதி

ஆலம்பால் மேக மறுத்தசையும் பல்லிறுக்குங்

கோல முடிக்குக் குளிர்ச்சி தரும் - ஞாலமதின்

மெத்தவுமே சுக்கிலத்தை விருத்திசெய்யுந்

தப்பாமற்

சுத்த மதிமுகத்தாய் சொல்.

ஆலவிழுதால் பல் விளக்கினால் பற்கள் இறுகும். ஆலம்பால் மேகநோய்களை நீக்கி, உடல் பலத்தை அதிகரிக்கும். ஆலம்பாலை தடவினால் பித்தவெடிப்பு நீங்கும்.

எப்படி செல்வது : மதுரை பெரியார் பஸ் ஸ்டாண்டில் இருந்து 3 கி.மீ.,

நேரம்: காலை 6:00 - 12:00 மணி; மாலை 4:00 - 9:00 மணி

தொடர்புக்கு: 93441 18680

-தொடரும்

ஜெ.ஜெயவெங்கடேஷ்

98421 67567





      Our Apps Available On




      Dinamalar

      Follow us