Dinamalar-Logo
Dinamalar Logo


/ஆன்மிகம்/இந்து/கட்டுரைகள்/ஆதிசாஸ்தா கோயில்

ஆதிசாஸ்தா கோயில்

ஆதிசாஸ்தா கோயில்

ஆதிசாஸ்தா கோயில்

ADDED : நவ 17, 2023 01:21 PM


Google News
Latest Tamil News
கார்த்திகை மாதம் ஆரம்பித்ததும் 'சுவாமியே சரணம் ஐயப்பா' என்ற மந்திர ஒலி கேட்க ஆரம்பித்துவிடும். இப்படி சபரிமலைக்கு சென்று சாஸ்தாவை வணங்க இருக்கும் பக்தர்கள் ஆதி சாஸ்தாவையும் தரிசிக்கலாமே. இவர் கேரள மாநிலம் திருவனந்தபுரம் கரமனையில் இருக்கிறார்.

திருவனந்தபுரம் ஒரு காலத்தில் காடாக இருந்தது. இதை அனந்தன் காடு என்று அழைத்தனர். இப்பகுதியை ஆண்ட கர மகாராஜா பல கோயில்களை கட்டினார். ஒருசமயம் அவர் காட்டு வழியே சென்றார். அப்போது சிலந்திகள் வலை பின்னிய ஓர் இடத்தில் சாஸ்தா சிலை இருப்பதைக் கண்டார். உடனே ஊருக்குள் சிலை வைத்து கோயில் கட்ட முடிவெடுத்தார். அன்று இரவு அவரது கனவில் தோன்றிய சாஸ்தா, 'என்னை ஊருக்குள் கொண்டு வர முயற்சிக்காதே. நான் காட்டில் இருப்பதையே விரும்புபவன். சிலந்திகள் வலை கட்டியிருக்கும் இடத்திலேயே கோயில் எழுப்பு. கோயிலுக்கு கூரை அமைக்காதே. வானமே எனது எல்லையாக இருக்கட்டும்' என்றார். அதன்படி அந்த இடத்திலேயே கோயில் கட்டினார்.

இங்கு மேற்கூரை இல்லை என்றாலும் சிலந்திவலை போல கூம்பு ஒன்றை அமைத்துள்ளனர். கருவறையைச் சுற்றி நான்கு புறமும் சுவரும், சுவர்களின் நடுவில் பலகணி (ஜன்னல்) வடிவமைக்கப்பட்டுள்ளது. ஏன் என்றால்... சுவாமிக்கு நேர் எதிரில் மட்டும் இல்லாமல், பலகணிகளின் வழியாகவும் சுவாமியை தரிசிக்கலாம். திருவனந்தபுரத்தில் பல சாஸ்தா கோயில்கள் இருந்தாலும் மிக பழமையான சாஸ்தா கோயில் இது. இதனால் இவருக்கு 'ஆதி சாஸ்தா' என்ற பெயரும் உள்ளது. இப்பகுதியை சுற்றியுள்ள பக்தர்கள் இக்கோயிலை சபரிமலையாகவே கருதி வீட்டில் இருமுடி கட்டி, இங்கு வந்து நெய் அபிஷேகம் செய்கின்றனர்.

எல்லா மலையாள மாத பிறப்பு நாட்களிலும், முக்கிய விழா நாட்களிலும் நெய் அபிஷேகம் செய்கின்றனர். இப்பகுதியில் திருமணம் உள்ளிட்ட சுபநிகழ்ச்சிகளை செய்வோர், சாஸ்தாவுக்கு முதல் பத்திரிகை வைக்கின்றனர். இங்குள்ள அரசமரத்தடியில் சிவலிங்கமும், நாகரும் பிரதிஷ்டை செய்யப்பட்டுள்ளது.

எப்படி செல்வது: திருவனந்தபுரம் ரயில்வே ஸ்டேஷனிலிருந்து 3 கி.மீ.,

விசேஷ நாள்: கார்த்திகை முதல் தேதி துவங்கி 41 நாட்கள் மண்டல பூஜை காலம், 41ம் நாள் கரமனை ஆற்றில் ஆராட்டு விழா

நேரம்: அதிகாலை 5:00 - 11:00 மணி; மாலை 5:00 - 8:00 மணி

தொடர்புக்கு: 0471 - 245 1837

அருகிலுள்ள தலம்: திருப்பாதபுரம் மகாதேவர் கோயில் 15 கி.மீ., (கண் நோய் தீர...)

நேரம்: அதிகாலை 5:00 - 10:30 மணி; மாலை 5:00 - 8:00 மணி

தொடர்புக்கு: 0471 - 244 3555





      Our Apps Available On




      Dinamalar

      Follow us