Dinamalar-Logo
Dinamalar Logo


/ஆன்மிகம்/இந்து/கட்டுரைகள்/சனாதன தர்மம் - 8

சனாதன தர்மம் - 8

சனாதன தர்மம் - 8

சனாதன தர்மம் - 8

ADDED : நவ 17, 2023 01:19 PM


Google News
Latest Tamil News
மூச்சுக்காற்றே வாழ்க

''அதோ காற்று தேவன் பவனி வரும் ரதம்! அதன் ஆற்றலும் பெருமையும் அளவிடற்கரியன. அது இந்த வையகத்தின் உயிர் ஆற்றல். காற்றின் புகழ் தீராது'' இது ரிக் வேத மந்திரம். மகாகவி பாரதியாரின் வரிகளில். காற்று நாம் வாழ வகை செய்வது. இந்தக் காற்றை, பிராண சக்தியைக் கொண்டு மனிதன் நெடிது வாழ வழி சொல்கிறது சனாதன தர்மம். மூச்சுக் காற்றை முறைப்படுத்தினால் மனிதன் தெய்வமாகலாம். மூலாதாரம், சுவாதிஷ்டானம், மணிபூரகம், விசுக்தி, ஆக்ஞா என்னும் ஒளி இடங்களை ஆண், பெண் பேதமின்றி அனைவரும் பெற்றிருக்கிறோம்.

இதை விநாயகர் அகவலில் 'மூலாதாரத்து மூண்டெழு கனலைக் காலால் எழுப்பும் கருத்து அறிவித்தே... என்கிறார் அவ்வையார். கால் என்றால் காற்று என பொருள். மூச்சுப் பயிற்சி, யோகம் பிராணாயாமம் போன்றவை இன்று பெரிதும் பேசப்படுகிறது. மனிதன் உயிர் வாழத் தேவையான ஆக்சிஜனை அவன் பிரபஞ்ச வெளியில் இருந்தே நேரடியாகப் பெற்றுக் கொள்ளும் கலை இது. இதனால் தான் பண்டைய மகரிஷிகள் உணவின்றி நீண்ட நாள் தவநிலையில் இருக்க முடிந்தது. மனிதனின் ஆயுட்காலம் ஆண்டுக் கணக்கில் கணக்கிடப்படுகிறது. ஆனால் உண்மையில் மூச்சுகளின் எண்ணிக்கையே அவனது ஆயுட்காலம் ஆகும்.

இந்த பிரபஞ்ச வெளியில் மனிதன் மட்டுமல்ல. அனைத்து உயிர்களும் வாழ்ந்திட காற்று அவசியம். இதனை உணர்ந்த பெரியவர்கள் மரங்களை கோயில்களைச் சுற்றிலும் வளர்த்தனர். குறிப்பாக அரச மரம். அதனருகில் ஒரு வேப்ப மரம். அதை யாரும் வெட்டக் கூடாது என்பதற்காக அரசுக்கும், வேம்பிற்கும் திருமணம் செய்து வைத்தனர். விடியற்காலையில் பெண்கள் குளித்து விட்டு இந்த மரங்களுக்கு நீர் ஊற்றி வழிபடுவர். இன்றைய அறிவியல் சொல்கிறது. அரசும், வேம்பும் இருக்கும் இடங்களில் ஓசோன் காற்று நிறைய கிடைக்கிறது. இதை குறிப்பாக பெண்கள் சுற்றி வந்து சுவாசிக்கும் போது கருப்பை தொடர்பான பிரச்னைகள் தானாகவே சரியாகிறது.

வரலாறு படிக்கும் போது அசோகர் சாலைகளின் இருபுறமும் மரங்களை நட்டார் என்று படித்தோம். எழுதினோம். அப்போது புரியவில்லை. ஆனால் நெடுந்துாரம் சாலைகளில் இன்று பயணம் செய்யும் போது காணாமல் போன மரங்களை எண்ணிப் பார்க்கிறோம். ஆனால் நம் கார்களில் மட்டும், 'மரம் வளர்ப்போம். மழை பெறுவோம்'என எழுதி வைக்கிறோம்.

'கண்களை விற்றுச் சித்திரம் வாங்கினால் கைகொட்டிச் சிரியாரோ...' என்ற பாரதியாரின் வைர வரிகளுக்கேற்ப மரங்களைத் தொலைத்து காற்றைத் தேடி ஓடினோம்.

நமது சமயத்தில் வேள்விகளுக்கு முக்கியத்துவம் அதிகம். வேள்விகள் செய்வதால் வளிமண்டலம் துாய்மையாகிறது. அவற்றில் இடப்படும் மூலிகைகள் நெய், மரக்குச்சிகள்(சமித்து) ஆகியவை காற்றைத் துாய்மை செய்கிறது என்று சொன்னவுடன் சிரித்தார்கள். ஆனால்

போபால் விஷ வாயுக் கசிவின் போது வேள்விகள் வளர்க்கப்பட்ட வீடுகளில் உள்ளவர்கள் மட்டும் பிழைத்தார்கள் என்பது வரலாற்றுப் பதிவு. ஹிந்து சமயத்தின் ஒவ்வொரு சடங்கிலும் அறிவியல் உள்ளது என்பதற்கு இதுவே சாட்சி.

ஆனால் இன்று ராட்சத தனமாகப் பெருகிவிட்ட வாகனங்களால் வளி மண்டலத்தில் எரிக்கப்படாத கார்பன்டை ஆக்சைடு நிரம்பி வருகிறது. இது மேகங்கள் உருவாவதை தடுக்கிறது. இதனால் மேகங்கள் கருக்கொண்டு குளிர்ச்சி அடைய முடியாமல் மழை அளவு குறைகிறது என்பது தான் உண்மை.

சனாதன தர்மம் யாகங்களைப் போற்றியது, மரங்களைத் தெய்வமாகப் போற்றி பாதுகாத்தது, மலைகளில் கடவுளை வைத்து வலம் வந்து வணங்கியது. இதனால் தென்றல், வாடை, கொண்டல், மேலை(கோடை) என நான்கு திசைகளில் இருந்து நல்ல காற்றினைப் பெற்று வாழ்ந்தோம். ஒழுங்குபடுத்தப்பட்ட காற்று இசையாவது போல ஒழுக்கங்களைச் சொல்லித் தரும் சமயக் கோட்பாடுகளைப் போற்றினால் தான் இனி உலகம் இயல்பான மூச்சுக்கு வழிவகுக்கும். சனாதனம் வெறும் சடங்கு முறைகள் அல்ல. வாழ்வியல் ஆகும்.



-தொடரும்

இலக்கிய மேகம் ஸ்ரீநிவாசன்

93617 89870





      Our Apps Available On




      Dinamalar

      Follow us