Dinamalar-Logo
Dinamalar Logo


/ஆன்மிகம்/இந்து/கட்டுரைகள்/மகாலட்சுமியின் தவம்

மகாலட்சுமியின் தவம்

மகாலட்சுமியின் தவம்

மகாலட்சுமியின் தவம்

ADDED : நவ 10, 2023 10:38 AM


Google News
Latest Tamil News
கடலுாருக்கு அருகிலுள்ளது திருவஹீந்திரபுரம். இது மகாலட்சுமி தவம் இருந்து பெருமாளை திருமணம் செய்த தலம். வைணவ குருநாதர்களில் ஒருவரான சுவாமி வேதாந்த தேசிகர் இங்குள்ள ஹயக்ரீவரை நேரில் தரிசித்துள்ளார். பல சிறப்புகளை உடையது இத்தலத்திற்கு வாருங்கள். மகாலட்சுமியின் அருளைப் பெறுங்கள்.

அசுரர்களின் கொடுமையை தாங்க முடியாத தேவர்கள் விஷ்ணுவிடம் முறையிட்டனர். பூலோகத்திலுள்ள ஒளஷத மலையில் தங்கியிருந்து தன்னை வழிபடுங்கள். தக்க சமயத்தில் உதவுவதாக வாக்களித்தார் விஷ்ணு. அதன்படி சக்கராயுதத்தை ஏவினார். அது அசுரர்களை அழித்தது. தேவர்களுக்கு மும்மூர்த்தி வடிவத்தில் காட்சி தந்தார்.

இதனால் தேவநாதசுவாமி என பெயர் பெற்றார். இவருக்கு யுகம் கண்ட பெருமாள் என்ற சிறப்பு பெயரும் உண்டு. பிருகு முனிவரின் மகளாக தோன்றிய மகாலட்சுமி இங்கு தவமிருந்து பெருமாளை திருமணம் செய்து கொண்டதால் இத்தல தாயாரான ஹேமாம்புஜவல்லியை வணங்குபவருக்கு மாங்கல்ய பாக்கியம் உண்டாகும்.

இத்தலத்தை ஆதிஷேசன் உருவாக்கி அஹீந்திரபுரம் என பெயரிட்டார்.

ஒரு சமயம் பெருமாளுக்கு தாகம் ஏற்பட்ட, கருடனை அழைத்து தனக்கு தீர்த்தம் கொண்டு வரப் பணித்தார். உடனே ஒரு ரிஷியின் கமண்டலத்தில் இருப்பதை அறிந்த கருடன், தன் அலகால் அதை தட்டி விட்டார். கோபமான ரிஷி அவரை எதிர்க்க மனமில்லாதவராக, “இந்த நீர் கலங்கட்டும்” என சபித்தார். பதறிய கருடன், பெருமாளின் தாகம் தீர்க்கவே அவ்வாறு செய்ததாகச் சொன்னார். அதைக் கேட்டு வருந்திய ரிஷி, “கலங்கிய நீர் தெளியட்டும்” என்று கூறினார். அது தான் இங்கு ஓடும் கெடில நதி. கருடன் வரத்தாமதமானதால், ஆதிசேஷன் தன் வாலால் பூமியைப் பிளந்து, அங்கு ஊற்றினை பெருக்கெடுக்கச் செய்து பெருமாளின் தாகத்தினை தீர்த்தார்.

இப்போதும் அது சேஷ தீர்த்தம் என்ற பெயரில் உள்ளது. இன்றும் இதில் உப்பு, மிளகு, வெல்லமிட்டு வேண்டுதலை நிறைவேற்றுகின்றனர் பக்தர்கள். இங்கு நரசிம்மர் தொடையில் தாயாரை அமர்த்தி காட்சி தருகிறார். இக்கோயிலுக்கு அருகிலுள்ளது பிரம்மச்சாலமலை. இங்கு லட்சுமி ஹயக்ரீவருக்கு தனிச்சன்னதி உள்ளது.

திருமங்கையாழ்வாரால் மங்களாசாசனம் செய்யப்பெற்ற பெருமையினை உடையது இத்தலம். தாயார், பெருமாளை வணங்குவோர்கள் பெரிய பதவி, நிலைத்த செல்வம், மக்கட்பேறு, நீண்ட ஆயுளை பெறுகிறார்கள்.

எப்படி செல்வது: கடலுாரில் இருந்து பண்ருட்டி வழியாக 3 கி.மீ.,

விசேஷ நாள்: சித்திரை பிரம்மோற்ஸவம், வைகாசி நம்மாழ்வார் திருவிழா, புரட்டாசி தேசிகன் வைபவம், ஐப்பசி முதலாழ்வார்கள் உற்ஸவம்

நேரம்: காலை 6:00 - 11:00 மணி; மாலை 4:30 - 8:00 மணி

தொடர்புக்கு: 04142 - 287 515

அருகிலுள்ள தலம்: ஹயக்ரீவர் கோயில் 1 கி.மீ., (கல்வியில் சிறக்க)

நேரம்: காலை 7:30 - 12:00 மணி; மாலை 4:30 - 7:30 மணி





      Our Apps Available On




      Dinamalar

      Follow us