Dinamalar-Logo
Dinamalar Logo


/ஆன்மிகம்/இந்து/கட்டுரைகள்/குழந்தை வரம் பெற...

குழந்தை வரம் பெற...

குழந்தை வரம் பெற...

குழந்தை வரம் பெற...

ADDED : செப் 27, 2024 01:01 PM


Google News
Latest Tamil News
பெங்களுரு விபூதிபுரத்தில் அருள்புரியும் லிங்க வீரபத்திரரை தரிசித்தால் அறிவும், அழகும் கொண்ட குழந்தைகள் பிறப்பார்கள். சாந்தமான முகத்துடன் பத்ரகாளியம்மன் சன்னதியும் இங்குள்ளது.

பழங்காலத்தில் வீரபல்லாளன் என்னும் மன்னர் இப்பகுதியை ஆட்சி செய்தார். சிவபக்தரான இவருக்கு சிவனின் அம்சமான வீரபத்திரரை தரிசிக்கும் எண்ணம் ஏற்படவே தவத்தில் ஈடுபட்டார். மன்னரின் பக்தியை மெச்சி வீரபத்திரராக காட்சியளித்தார் சிவன். தனக்கு தரிசனம் அளித்தபடியே சிலை செய்து மன்னர் கோயில் எழுப்பினார். விபூதிப்புரம் வீரசிம்மாசன சமஸ்தான மடத்தின் கட்டுப்பாட்டில் இக்கோயில் உள்ளது.

வடக்கு நோக்கிய இத்தலத்தில் சிவனுக்குரிய புலித்தோல் நிற ஆடையை வீரபத்திரருக்கு அணிவித்து அலங்காரம் செய்கின்றனர். கையில் திரிசூலம், உடுக்கை உள்ளது. தட்சனும், அவனது மனைவி பிரசுத்தாதேவியும் அருகில் வணங்கியபடி உள்ளனர். வீரபத்திரருக்கு பின்புறம் பீடத்தில் சிவலிங்கம் உள்ளது. இவரை 'லிங்க வீரபத்திரர்' என அழைக்கின்றனர். கருவறைக்கு எதிரில் நந்தி உள்ளது. பத்ரகாளியம்மன் சாந்தமான கோலத்தில் தனி சன்னதியில் இருக்கிறாள். இவள் 'காளிகாம்பாள்' எனப்படுகிறாள்.

வீரபத்திரருக்கு ஞாயிறு, அமாவாசையன்று ஹோமம், ருத்ராபிஷேகம் நடக்கிறது. கார்த்திகை மாத கடைசி திங்களன்று 'அக்னி பிரவேசம்' என்னும் பூக்குழி இறங்கும் விழா நடக்கிறது. அப்போது கோயிலுக்கு எதிரில் அக்னி குண்டம் வளர்த்து, அதிலிருந்து அர்ச்சகர் கைகளால் நெருப்பு எடுத்து சாம்பிராணி துாபமிடுவார். அதன் பின் வீரபத்திர சுவாமி பல்லக்கில் எழுந்தருள்வார். அப்போது குழந்தை வரம் வேண்டி அம்மனுக்கு மஞ்சள் வஸ்திரம், வில்வ மாலை, வளையல் அணிவித்தும், வீரபத்திரருக்கு பாயசம் வைத்தும் வழிபடுகின்றனர்.

மனக்குழப்பம், எதிரிபயம் தீர வெற்றிலை, எலுமிச்சை மாலை அணிவிக்கின்றனர். நினைத்தது நிறைவேற திங்கள் அன்று ருத்ராபிஷேகம் செய்கின்றனர்.



எப்படி செல்வது : பெங்களூரு மெஜஸ்டிக் பஸ் ஸ்டாண்டில் இருந்து 18 கி.மீ.,

விசேஷ நாள்: திருக்கார்த்திகை, மகாசிவராத்திரி.

நேரம்: காலை 7:00 - இரவு 9:30 மணி

தொடர்புக்கு: 080 - 2523 7234

அருகிலுள்ள கோயில் : பெங்களூரு இஸ்கான் 17 கி.மீ., (மனநிறைவுடன் வாழ...)

நேரம்: காலை 8:30 - 12:00 மணி; மாலை 4:00 - 8:00 மணி

தொடர்புக்கு: 080 - 2347 1956





      Our Apps Available On




      Dinamalar

      Follow us