Dinamalar-Logo
Dinamalar Logo


/ஆன்மிகம்/இந்து/கட்டுரைகள்/கந்தசஷ்டி விரதம்

கந்தசஷ்டி விரதம்

கந்தசஷ்டி விரதம்

கந்தசஷ்டி விரதம்

ADDED : அக் 29, 2024 12:39 PM


Google News
Latest Tamil News
நவ.2, 2024 - கந்தசஷ்டி விரதம் ஆரம்பம்

ஐப்பசி மாத அமாவாசைக்கு மறுநாள் வளர்பிறை பிரதமையில் தொடங்கி சஷ்டி வரை ஆறு நாள் வரை விரதம் இருப்பதே கந்தசஷ்டி விரதம். இதை 'மகா சஷ்டி விரதம்' என்றும் சொல்வர். கந்தசஷ்டியன்று சூரபத்மனை சம்ஹாரம் செய்தார் முருகன். இந்நிகழ்வு நடந்த தலமே திருச்செந்துார்.

சூரபத்மன், சிங்கன், தாரகன் முதலிய அசுரர்கள் தேவர்களை துன்புறுத்தினர். இவர்களை சம்ஹாரம் செய்வதற்காக பார்வதியிடம் இருந்து சக்திவேலை பெற்றார் முருகன். வீரபாகுத்தேவர் உள்ளிட்ட நவவீரர்கள் ஒன்பது பேருடன் போருக்கு புறப்பட்டார். அசுரர்களின் மாயா ஜாலங்களை எல்லாம் தோற்கடித்து அசுரனுக்கு சொந்தமான கிரவுஞ்ச மலையை தவிடு பொடியாக்கினர். ஆறாம்நாள் வந்தது.

தன்னுடன் போரிட வந்த முருகனைப் பார்த்து சிறு குழந்தை என ஏளனம் செய்தான் சூரபத்மன். உடனே தான் யார் என்பதை காட்ட விஸ்வரூபம் எடுத்தார் முருகன். ஏளனம் செய்த அவனது வாய் வாழ்த்த தொடங்கியது,

கோலமா மஞ்ஞை மீது

குலவிய முருகன் தன்னை

பாலன் என்றிருந்தேன் அந்நாள்

பரிசினை அறிந்திலேன் யான்

மாலயன் தனக்கும் மற்றும் யார்க்கும்

மூலநாயகமாய் நின்ற மூர்த்தி

இம்மூர்த்தியன்றோ என்றான். அதாவது அழகிய மயில் வாகனத்தின் மீது எழுந்தருளிய பெருமானை பாலகன் என எண்ணியிருந்தேன். இப்போது பார்த்தால் தேவர்கள் யாவருக்கும் மூல காரணமாக இருக்கும் சிவகுமாரன் என்பது புரிந்தது. இருந்தாலும் ஆணவத்தால் போரிட ஆரம்பித்தான். மாய ஜாலத்தால் மாமரமாகி நின்றான்.

வேலை வீசி மாமரத்தை இருகூறாக்கி சேவல், மயிலாக மாற்றி ஏற்றார் முருகன். இதை 'சங்கரன் மகன் சட்டியிலே மாவறுத்தார்' எனச் சொல்லும் வழக்கம் உண்டு.

சங்கரன் மகன் - சிவனின் மகனான முருகன்

சட்டியிலே - சஷ்டி திதியில்

மா - மாமரமாக நின்ற சூரனை

அறுத்தார் - வேலால் இரு கூறாக பிளந்தார் என்பதை இது குறிக்கும்.

சூரசம்ஹார நிகழ்வின் மூலம் நாம் ஒன்றை தெரிந்து கொள்ள வேண்டும்.

'பகையை அழி; பகைவனை அழிக்காதே' என்பதுதான் அது. சூரனை அழிக்கவில்லை.

மாறாக அவனது ஆணவத்தை அழித்து ஆட்கொண்டார் முருகன். எந்த தெய்வத்திற்கும் இல்லாத பெருமை முருகனுக்கு உண்டு. காரணம் எதிரியை அழிக்காமல் அவனது சக்தியை பயன்படுத்திக் கொண்டார்.

சஷ்டி விரதம் இருக்க விரும்புபவர்கள் பூஜை அறையைச் சுத்தம் செய்து அறுகோண வடிவ கோலமிடுங்கள். அதில் விளக்கேற்றி முருகனை வழிபட்டு விரதத்தை தொடங்குங்கள். ஊனை உருக்கி உள்ளொளி பெருக்கும் இவ்விரதத்தை அவரவர் உடல் நிலைக்கு தகுந்தவாறு இருக்கலாம்.

ஆறு நாளும் பழச்சாறு, இளநீர் மட்டுமே சிலர் அருந்துவர். முதல் ஐந்து நாட்களில் மதியம் ஒரு நேரம் சாப்பிட்டு ஆறாம் நாளில் முழுவதுமாக பட்டினி விரதம் இருப்பர். கந்தசஷ்டி கவசம், கந்தகுரு கவசம், திருப்புகழ் பாடல்களை பாடுவர். குடும்ப கஷ்டம் தீர, வேலைவாய்ப்பு கிடைக்க, கடல் தொல்லை தீரும். முக்கியமாக குழந்தை இல்லாத பெண்கள் இவ்விரதம் இருந்தால் குழந்தை பாக்கியம் உண்டாகும்.





      Our Apps Available On




      Dinamalar

      Follow us