Dinamalar-Logo
Dinamalar Logo


/ஆன்மிகம்/இந்து/கதைகள்/ஆண்டாளும் அற்புதங்களும் - 20

ஆண்டாளும் அற்புதங்களும் - 20

ஆண்டாளும் அற்புதங்களும் - 20

ஆண்டாளும் அற்புதங்களும் - 20

ADDED : ஏப் 27, 2023 03:01 PM


Google News
Latest Tamil News
ஆண்டாளும் மீராவும் ஒன்றிணைந்த மையம்

சிறுவயதில் நமக்குச் சொல்லப்பட்ட பல கதைகளின் நாயகன் யாராக இருக்கும் என நினைக்கிறீர்கள்? நிச்சயம் கண்ணனாகத்தான் இருப்பான். கண்ணனை நம் எல்லோருக்கும் பிடிக்கும். காரணம் எப்போதும் சிரித்த முகத்துடன் புத்திசாலியாக, சமயோஜிதமாக, எதற்கும் பதட்டப்படாதவனாக, தான் மேற்கொள்ளும் செயல்களில் வெற்றி அடைபவனாக இப்படி பல்வேறு பரிணாமங்களில் ஜொலிப்பவன் கண்ணன். தன்னை நம்பி வந்தோரை மகிழ்வித்து மகிழ்பவன்.

ஒருவருக்கு குழந்தை இல்லையா? உடனே வீட்டில் கண்ணன் படம் அல்லது பொம்மையை வாங்கி வையுங்கள் என்பது தான் நம்மைச் சேர்ந்தவர்களின் முதல் குரலாக ஒலிக்கிறது. கிருஷ்ண ஜெயந்தியை வீட்டில் கொண்டாடுங்கள். குழந்தை பிறக்கும் என்பார்கள். 'யமுனை ஆற்றிலே ஈர காற்றிலே கண்ணனோடு தான் ஆட' என்று கண்ணனை விரும்பும் ராதைகள் தான் ஏராளம். அதனாலேயே அவன் மாயக்கண்ணன். காதல் ராதைகள் என்றால் உடனே நம் நினைவுக்கு வருவது ஆண்டாளும் மீராவும் தான்.

எட்டாம் நுாற்றாண்டின் இடைப்பட்ட காலத்தில் ஆண்டாளும் 16 ஆம் நுாற்றாண்டில் வாழ்ந்த மீராபாயும் தென்னிந்தியாவையும் வட இந்தியாவையும் கண்ணனை தன் பக்தியாலும் காதலாலும் நிரப்பியவர்கள். எப்படி இருவரும் ஒன்றுபட்டு இருக்கிறார்கள்? பார்ப்போம் வாருங்கள்.

மீராவும் ஆண்டாளைப் போன்றே வைணவக் குடும்பத்தில் பிறந்தவள். ராஜபுத்திர இளவரசி. பெரியாழ்வாரிடம் கண்ணனின் கதைகளை கேட்டு வளர்ந்தவள் கோதை. மீராபாயின் தாயோ, ”இதோ, உன்னை கல்யாணம் செய்து கொள்ளப் போகிறவன்” என்று ஒரு கண்ணன் பொம்மையை சிறுமியாக இருக்கும் போது கையில் கொடுக்கிறாள். ஏழாம் வயதில் தன் தாயை இழந்து விட்டாலும் அவள் கொடுத்த கண்ணன் பொம்மையும் அவள் சொல்லிச் சென்ற வாசகமும் அவளுடனே குடி கொண்டிருந்தது. குழந்தை பருவம் முதலே 'கிரிதர கோபாலன்' எனும் கண்ணன் மீது தொடங்கிய ஈடுபாடு நாளடைவில் கண்ணனை மணவாளனாக வரித்துக் கொண்டது.

ஆண்டாள் எப்படி பாசுரங்களை பாடி நீங்கா புகழ் பெற்றாலோ அது போல மீராவின் வாழ்விலும் மாயங்கள் நடந்திருக்கிறது. ஆண்டாளைப் போல் இவரும் மேகங்களை துாது விடுகிறார். தான் கனவில் அனுபவித்தவற்றை ஆண்டாள் 'வாரணமாயிரம்' பதிகத்தில் வெளியிடுவது போல மீராபாயும், கண்ணன் கனவில் தம்மை மணந்ததை கவிதைகளில் வெளியிட்டுள்ளார். தன்னை ஆயர் குல மங்கையாக பாவித்துக் கொண்டதைப் போல, மீராபாயும் தம்மை பிருந்தாவனத்து ஆயர் மகளாக பாவித்து பாடல்கள் பாடியுள்ளார்.

பின்னாளில் குரு ரவிதாசருக்கு சீடரான மீரா, இறுதியில் கண்ணன் வாழ்ந்த பிருந்தாவனத்தை வந்தடைந்தார். அங்கு தன்னை கோபியர்களில் ஒருவராக உணர்ந்த அவள், வட இந்தியா முழுதும் யாத்திரையாக சென்று தம் கருத்துக்களை பாடல்கள் மூலம் வட்டார மொழியான விரஜ மொழியில் பரப்பினார். அது மட்டுமல்ல பிருந்தாவனத்தில் மீரா கண்ணனுக்காக பாடிய பாடல்கள் அனைத்தும் அற்புதமானவை. சூர்தாஸ், துளசிதாஸ், மீரா என ஹிந்தி கவிகளில் மூவரே முதல் சிறப்பு வாய்ந்தவர்கள். அதே போல் குஜராத்தியிலும் கவிதை எழுதினாள். மீராவின் பாடல் ஒன்றினை மட்டும் இங்கு பார்ப்போம்.

எந்தன் உடலை விளக்காக்கி

இதயத்தை இடுதிரியாக்கி

உன்பால் உள்ள காதலையே

எண்ணெய்யாக ஆக ஏற்றிடுவேன்

இரவும் பகலும் எரியட்டும்

அருள்மிகு அடியார் கூடிடும் உன்

அழகிய சந்நிதி முன்னிலையில்

உன்னைப் பிரிந்து ஒருகணமும்

இருக்கமாட்டேன் இனி ஐயா

என்னை உனதாய் ஏற்றுக்கொள்

என்னை உனைப்போல் ஆக்கிவிடு

இப்படி தமிழ்நாட்டு ஆண்டாளுக்கும் ராஜபுத்திர இளவரசி மீராவிற்கும் வாழ்வின் நோக்கம் ஒன்றாகவே இருந்தது. ஆண்டாளின் பாசுரங்களை எப்படி இசையுடன் பாட முடியுமோ, அப்படியே இவரும் பக்திநெறியை பாடல்கள் வாயிலாக பாடிப் பரப்பினார்.

இருவருமே பிறப்பு, இறப்பு என்னும் சுழற்சியிலிருந்து விடுபட்டு பேரின்ப நிலையை அடைய 'கிருஷ்ண பக்தி' அவசியம் என்றனர். எளிய பக்தியும் நம்பிக்கையுமே கடவுளிடம் சென்று சேரும் வழி என்பதை நமக்கு சொல்லிச் சென்றிருக்கிறார்கள்.

ரங்கமன்னார் ஸ்ரீரங்கம் கோயிலின் கருவறையில் வரவழைத்து அனைவரும் பார்க்கும் போதே கோதையை தனக்குள் ஐக்கியமாக்கிக் கொண்டார். இதே போல மீரா இறுதி காலத்தில் துவாரகைக்கு வந்தடைந்தாள். அங்கு துவாரகதீசன் (கண்ணன்) முன்பு பாடிக்கொண்டே கண்ணனோடு கலந்து மாயமானாள்.

ஆண்டாள் எப்படி ஸ்ரீரங்கம் சென்று கண்ணனை அடைந்தாலோ அதேபோல் மீராவும் துவாரகை சென்று கண்ணனை அடைகிறாள். கலியுகத்தில் அப்படி கடவுளை அடைந்ததால் மீராவும், ஆண்டாளும் பெண்களின் இதயத்தில் பிரகாசித்துக் கொண்டிருக்கிறார்கள்.

அது சரி, கண்ணன் என்ன எப்பொழுதும் பெண்களையே தனக்குள் ஐக்கியமாக்கிக் கொள்கிறான்? அவனை மனமுருக வழிபடும் ஆண்களை கண்டு கொள்ள மாட்டானா என நினைக்கும் உங்களின் மனநிலை புரிகிறது. ஜெயதேவகோ சுவாமி இந்திய வரலாற்றின் இணையற்ற கவிகளில் ஒருவர். சமஸ்கிருதத்தில் கைதேர்ந்தவர். புகழ்பெற்ற பூரி ஜகன்னாதர் கோயிலுக்கு அருகிலுள்ள ஊரில் தான் பிறந்தார். 12ம் நுாற்றாண்டில் வாழ்ந்த இவரது முக்கிய படைப்பு புகழ் மிக்க கீதகோவிந்தம் என்னும் காவியம். எப்படி ஆண்டாள் என்றால் திருப்பாவை நினைவுக்கு வருகிறதோ அவ்வாறே ஜெயதேவர் என்றால் கீதகோவிந்தம் நினைவுக்கு வரும். கண்ணன், ராதையின் காதல் லீலைகளை உணர்ச்சிபூர்வமாகவும் தத்துவார்த்தமாகவும் வர்ணிக்கும் காவியம் இது. இந்த அஷ்டபதி பாடல்கள் இந்தியா முழுமையிலும் பஜனைகளில் தொன்று தொட்டு பின்பற்றப்படுகிறது. இதை பாடும் போது மனதில் இன்ப உணர்ச்சி எழும். ஆங்கிலத்திலும் பல ஐரோப்பிய மொழிகளிலும் மொழிபெயர்க்கப்பட்டிருக்கிறது.

ஜெயதேவருக்கு பத்மாவதி என்ற பெண்ணை மணமுடித்தனர். இருவரும் நகமும் சதையுமாக வாழ்ந்தனர். கண்ணனுடைய லீலா வினோதங்களை ஜெயதேவர் பாடலாகப் பாட பத்மாவதி அபிநயம் பிடித்து ஆடியும் வந்தாள். மக்களிடம் பக்தி உணர்வை பரப்ப பல கோயில்களுக்கு ஒன்றாகச் சேர்ந்து சென்று பாடினர். ஜெயதேவர் செல்லும் இடமெல்லாம் பத்மாவதியும் சென்று அவரது பாடல்களுக்கு மெருகேற்றினாள். மக்கள் ஜெயதேவரின் பக்தி இலக்கியங்களை ஜகன்நாதர் சன்னதியில் வைத்து அனுதினம் பரவசமாக பாடினர். ஒரு நாள் கருவறையிலிருந்து ''உனது பாடலை அங்கீகரித்து ஏற்றுக் கொண்டேன், ஆனந்தமடைந்தேன்” என அசரீரி கேட்டது. கூடியிருந்த மக்கள் ஆனந்தமடைந்து ஜெயதேவரின் பக்தி பாடல்களை வேதமாக கருதினர். அவரது அஷ்டபதியை பாடி ஆடினர். ஜெயதேவர் பத்மாவதி திவ்ய தம்பதிகள் கண்ணனோடு ஏககாலத்தில் இரண்டற கலந்து விட்டனர். இவ்வாறு ஒரு பாக்கியம் கிடைப்பது அதிசயத்திலும் அதிசயம்.

ஆண்டாள், மீரா வரலாறு மட்டுமல்ல, இந்த ஜெயதேவர் வரலாறு மற்றும் இவர்களது பாடல்களை அனுதினமும் பாராயணம் செய்பவர்களும் கேட்பவர்களும் திருமாலின் அருளைப் பெற்று ஆனந்தமாக வாழ்வர் என்பதே நமக்கான நல்ல செய்தி. பல்லாண்டுகள் ஆனாலும் ஆண்டாளின் பாசுரங்களும், மீராவின் பாடல்களும் ஜெயதேவரின் பாடல் வரிகளும் காற்றினிலே வரும் கீதமாய் நம் காதுகளில் ஒலித்துக் கொண்டே இருக்கின்றன. இவர்களைப் போல நாமும் கடவுளை உணர்வோம், அடைவோம்… வாருங்கள்!

-தொடரும்

பவித்ரா நந்தகுமார்

82204 78043

arninpavi@gmail.com





      Our Apps Available On




      Dinamalar

      Follow us