Dinamalar-Logo
Dinamalar Logo


/ஆன்மிகம்/இந்து/கதைகள்/காதலுக்கு மொழி எதற்கு?

காதலுக்கு மொழி எதற்கு?

காதலுக்கு மொழி எதற்கு?

காதலுக்கு மொழி எதற்கு?

ADDED : ஜூன் 22, 2023 11:08 AM


Google News
Latest Tamil News
அர்ச்சகர் தெளிவாக மந்திரம் சொல்லி மீனாட்சியம்மனுக்கு தீபாராதனை காட்டினார். தன்னை மறந்து கைகூப்பினாள் தாரணி. அவள் அமெரிக்காவிலேயே பிறந்து வளர்ந்தவள். ஆன்மிகத்தில் ஆர்வம் கொண்டவள்.

பிரகாரத்திற்கு வந்தவுடன் அர்ச்சகரிடம் ஒரு சந்தேகத்தைக் கேட்டாள்.

“அமெரிக்காவுல மக்களுக்குப் புரியற மொழியிலதான் வழிபாடு நடக்குது. இங்க மட்டும் ஏன் சாமி யாருக்கும் புரியாத மொழியில மந்திரம் சொல்றீங்க? நீங்க சொன்னதுல எனக்கு ஒன்றும் புரியலயே” அர்ச்சகர் புன்னகைத்தார்.

“ஹிந்து மதத்துல கூட்டு வழிபாடுங்கறதே கிடையாதும்மா. இங்க வழிபாடுங்கறது தனி மனிதன் சம்பந்தப்பட்ட விஷயம். அதனால நம்ம கோயில்ல வரிசையா எல்லோரும் உக்கார்ந்து ஒரே ஜபத்தையோ மந்திரத்தையோ சொல்றதில்ல. அபிஷேகம், தீபாராதனை நடக்கும்போது எல்லாரும் சேந்து நிப்பாங்களேயொழிய அவங்க அவங்க தனித்தனியாத்தான் பிரார்த்தனை செய்வாங்க.

அங்க பாருங்க. தீபாராதனை நடக்குது. எல்லாரும் ஏதோ வாய்க்குள்ள முணுமுணுக்கறாங்க. எல்லாரும் ஒரே மந்திரத்தைச் சொல்லலை. மனசுல இருக்கறத தெய்வத்துக்கிட்ட தெரிவிக்கறாங்க. சில பேர்கிட்ட பிரார்த்தனை பட்டியல் இருக்கும். சில பேரு அம்பாளப் பார்த்தவுடன் உருகிப்போய் அழுவாங்க. சில பேரு நிறைய கேட்பாங்க. சில பேரு எதுவுமே கேக்கமாட்டாங்க. எப்பவும் என் மனசுல நீ இருக்கணும் தாயின்னு சில பேர் வேண்டிக்குவாங்க. என் பையனுக்கு மெடிக்கல் சீட் கிடைக்கணும்னு சில பேர் வேண்டிக்குவாங்க.

வழிபாட்டுக்கும் காதலுக்கும் மொழி தேவையில்லமா. நமக்கும் கடவுளுக்கும் உள்ள உறவு காதலனுக்கும் காதலிக்கும் உள்ள உறவு. ஒவ்வொரு காதலனும் காதலியும் ஒவ்வொருமாதிரிப் பேசிப்பாங்க. உலகத்துல உள்ள எல்லாக் காதலர்களும் குறிப்பிட்ட வார்த்தைகளப் பயன்படுத்தித்தான் தங்கள் காதலச் சொல்லணும்னு சட்டம் போட்டா உலகத்துல காதலே இருக்காது.

இங்கேயே பாருங்க அந்தப் பச்சை சட்டைக்காரரு அபிராமி அந்தாதி சொல்லிக்கிட்டு இருக்காரு. இந்த காவி வேட்டிக்காரரு லலிதா ஸஹஸ்ர நாமம் சொல்றாரு. கிராமத்துலருந்து வந்திருக்கற அந்தம்மா, 'அம்மா தாயே காப்பாத்து',ன்னு கதறிக்கிட்டிருக்கு. கடவுள்மேல உள்ள காதல் எத்தனை விதமா வெளிப்படுது பாத்தீங்களா?”

“அப்போ நீங்க கால் மணி நேரம் வாய் கிழியச் சொன்னீங்களே, அது என்ன சாமி?”

“நான் அம்பாளோடா நுாத்தியெட்டு பேர்களச் சொல்லி பூப்போட்டு பூஜை செஞ்சேன். நம்ம கோயில்கள் எல்லாத்துலயும் அபரிமிதமான சக்தி இருக்கு. அதனாலதான் இங்க வந்தா மனசு நிம்மதியாகுது. அந்தச் சக்திய நிலைப்படுத்தவும் அதிகரிக்கவும் ஆகம விதிகளின்படி பூஜை புனஸ்காரம் எல்லாம் நடக்குது. நான் சொன்ன மந்திரங்கள் எத்தனையோ ஆயிரம் வருஷமா புழக்கத்துல இருக்கு. அந்த மந்திரத்தோட சப்தத்துக்கே சக்தி இருக்கு. சப்தத்தையே நாத பிரம்மம்னு வணங்கற மதம் நம்மளோடது. நான் சொல்ற மந்திரம் உங்க மனசை அமைதியாக்கி அம்பாள்கிட்ட உயர்ந்த விஷயங்களக் கேட்க வைக்கும். ஆனா வழிபாடுங்கறது உங்க மொழியில உங்க மனசுக்குள்ள உங்களுக்கும் அவளுக்கும் நடுவுல நடக்கற காதல் விவகாரம்தான்.”

அங்கிருந்தபடியே தாரணி அம்பாளை நோக்கிக் கைகூப்பினாள். உண்மை புரிந்ததால் அவளின் கண்களில் கண்ணீர் கசிந்தது.

வரலொட்டி ரெங்கசாமி





      Our Apps Available On




      Dinamalar

      Follow us