Dinamalar-Logo
Dinamalar Logo


/ஆன்மிகம்/இந்து/கதைகள்/விட்டலனின் விளையாட்டு - 29

விட்டலனின் விளையாட்டு - 29

விட்டலனின் விளையாட்டு - 29

விட்டலனின் விளையாட்டு - 29

ADDED : செப் 22, 2023 10:34 AM


Google News
Latest Tamil News
உள்ளே வெளியே சிவாஜி

ஸந்த் துகாராம் எழுதிய 'க்ருதயுகா' எனத் தொடங்கும் 'அபங்' பாடலின் பொருள்.

கிருத யுகத்தில் நான் பிரகலாதனாக இருந்தேன்.

திரேதாயுகத்தில் அங்கதன் என் பெயர். துவாபர யுகத்தில் உத்தவராக அவதரித்தேன். கலியுகத்தில் இருமுறை அவதரித்தேன். முதலில் நாமதேவராக பிறந்த போது 100 கோடி அபங்கங்கள் பாடுவதாக உறுதி எடுத்தேன். அதில் மீதமுள்ளவற்றைப் பாட இப்போது துகாராமாக வந்திருக்கிறேன். இதுவே என் அவதார ரகசியம்.

...

'மனிதர்களில் ஏற்றத்தாழ்வு இல்லை என்பதை எடுத்துரைத்த மகான்கள் சோக்காமேளர், அன்னமாச்சார்யா, ராமானுஜர் ஆகியோர். அவர்களின் வரிசையில் ராமானந்தரையும் சேர்க்க வேண்டும்' என்றார் பத்மனாபன்.

ராமானந்தர் குறித்து தன் குடும்பத்தினர் யாரும் கேள்விப்பட்டதில்லை என்பதால் அவர் பற்றி சொல்லத் தொடங்கினார். 'பிரயாக்ராஜ் நகரில் ஒரு பிராமண குடும்பத்தில் பிறந்தவர் ராமானந்தர். இளம் வயதிலேயே துறவியானார். வேதங்கள், ராமானுஜரின் தத்துவத்தை காசியில் கற்றார். குருநாதராக ஆன பின் அனைவரோடும் சேர்ந்து உணவு சாப்பிட்டார். இந்த நடைமுறை 'ராமானந்த சம்பிரதாயம்' என பெயர் பெற்றது.

இவரது அறிவுரைகள் எல்லாம் எளிமையாக இருக்கும். சாதாரண மக்களும் சாஸ்திரங்களை அறிந்து பின்பற்ற வேண்டும் என்னும் நோக்கில் ஹிந்தியிலேயே மாணவர்களுக்கு கற்பித்தார். இவரது சீடர்களில் ஒரு பெண், செருப்பு தைக்கும் தொழிலாளி ரவிதாசர், இஸ்லாமியரான

கபீர் ஆகியோரும் இடம் பெற்றிருந்தனர். தன்னுடைய உபதேசங்களை பின்பற்றியவர் அவர் என்று சொல்லி பத்மநாபன் வணங்க, பத்மாசினியும் கைகுவித்து வணங்கினாள்.

அப்போது மயில்வாகனன், 'அப்பா... துகாராம் பற்றிய கதையை இன்னும் நீங்கள் முடிக்கவில்லையே' என நினைவுபடுத்தினான்.

...

துகாராமின் இனிய குரல்வளம், அவரது விட்டல பக்தி, பாடல் இயற்றும் திறமை பற்றி மன்னர் சிவாஜியும் கேள்விப்பட்டார். பண்டரிபுரம் கோயிலுக்குச் சென்று துகாராம் பாடுவதை நேரில் கேட்டால்தான் அவரது பக்தியின் சிறப்பை உணர முடியும் எனக் கருதினார். அதே சமயம் தான் வருவதாக கேள்விப்பட்டால் பண்டரிபுரமே களேபரமாகி விடும் என்பதால் மாறுவேடத்தில் சாதாரண பக்தராக செல்ல முடிவெடுத்தார்.

சிவாஜியின் திட்டத்தை மொகாலாய மன்னன் அவுரங்கசீப் கேள்விப்பட்டான். போரில் வெல்ல முடியாமல் தந்திரத்தால் வெல்ல இதுவே சரியான வாய்ப்பு என முடிவெடுத்து பண்டரிபுரத்துக்கு படையை அனுப்பினான்.

கோயிலுக்குள் துகாராம் பாடிக் கொண்டிருக்க சுற்றிலும் அமர்ந்திருந்த கூட்டத்தில் வெகு சாதாரணமாக அமர்ந்து கண்கள் பனிக்க கீதங்களை கேட்டுக் கொண்டிருந்தார் மன்னர் சிவாஜி.

அவுரங்கசீப்பின் படை கோயிலுக்குள் நுழைந்தது. சிவாஜி எங்கே என அங்கிருந்த பக்தர்களிடம் படைவீரர்கள் கேட்டுத் துளைத்தனர்.

இதையறிந்ததும் 'விட்டலா... மன்னர் சிவாஜியை நீயே காத்தருள வேண்டும்' என துகாராம் வேண்டினார். சற்று நேரத்தில் கோயிலில் இருந்து கம்பீரமாக சிவாஜி வெளியேறினார்.

இதைக் கண்ட அவுரங்கசீபின் படையினர் பின் தொடர்ந்தனர். ஆனால் அவர்களால் சிவாஜியின் வேகத்துக்கு ஈடு கொடுக்க முடியவில்லை. ஊரின் எல்லையை அடைந்ததும் சிவாஜி மாயமாக

மறைந்தார். தோல்வியடைந்த அவுரங்கசீப் படை பண்டரிபுரம் நகரை விட்டு வெளியேறினர்.

இந்தச் செய்தி பண்டரிபுரம் கோயிலுக்குள் காட்டுத்தீ போல பரவ இருவர் மிக ஆனந்தம் அடைந்தனர். ஒருவர் பக்தர் துகாராம். மற்றொருவர் சிவாஜி! 'நான் பக்தர்களோடு அமர்ந்து துகாராமின் பாடல்களை ரசித்துக் கொண்டிருக்க, நான் எப்படி வெளியே சென்றிருக்க முடியும்?' எனத் திகைத்தார் மன்னர்.

கருவறையில் புன்னகையுடன் காட்சியளித்த பாண்டு ரங்கனைக் கண்ட போது உண்மை புரிந்தது. துகாரா​ம் வேண்டுதலுக்காகவே விட்டலன் இப்படி ஒரு திருவிளையாடலை நிகழ்த்தினான். இதன் பின் மறுநாள் சிவாஜியின் உத்தரவால் அரண்மனையில் இருந்து தானிய மூட்டைகள் துகாராம் வீட்டுக்கு வந்து சேர்ந்தன. அவரது மனைவி கமலாபாயும் சந்தோஷமடைந்தாள். ஆனால் அந்த மகிழ்ச்சி சில நாளுக்கே நீடித்தது. அந்த தானியங்களை துகாராம் பாண்டுரங்க பக்தர்களுக்கு தானம் அளிக்கவே மீண்டும் வறுமை ஏற்பட்டது.

பக்தர்களில் ஒருவர் என்னும் அளவில் துகாராம் புகழ் இருந்தது. அதைத் தாண்டியும் அவருக்கு பெருமை சேர்க்க விட்டலன் முடிவு செய்தான். இந்நிலையில் விட்டலனின் மகனுக்கு திருமணம் நடத்த ஏற்பாடானது. திருமணம் நடத்துவதற்கு அவரிடம் பணம் ஏதுமில்லை. ஊர்மக்கள் நிதி திரட்டி துகாராம் வீட்டுத் திருமணத்தை நடத்தி வைக்க தீர்மானித்தனர்.

பலரும் உதவி செய்ய, ஊரில் இருந்த கருமி மட்டும் பணம் தர விரும்பவில்லை. ஆனால் கருமியின் மனைவி இதனால் வருந்தினாள். அவள் துகாராமின் ரசிகை. துகாராமின் பக்தியை சொல்லி கணவரிடம் கெஞ்சினாள்.

வேறுவழியின்றி 'வீட்டில் ஏதாவது ஓட்டை உடைசல் பாத்திரம் இருந்தால் கொடு' என்றான் கருமி. கணவன் சொல்லை மீற முடியாமல், அப்படிப்பட்ட ஒரு பாத்திரத்தையே கொடுத்தாள் அவள். அதைக் கொடுக்கும் போது அவள் மனதிற்குள் பாண்டுரங்கனை வேண்டிக் கொண்டாள்.

திரட்டிய பணம், பொருட்களை துகாராமிடம் ஊரார் ஒப்படைத்தனர். அதில் கருமி வீட்டு ஓட்டைப் பாத்திரமும் இருந்தது. அதைக் கையில் வாங்கிய துகாராமின் முகம் பிரகாசித்தது. பாத்திரத்தில் கை வைத்ததும் ஒரு அதிசயம் நடந்தது. அது தங்கமாக மாறியது. சுற்றியிருந்தவர்கள் பிரமித்துப் போக, விஷயத்தை கேள்விப்பட்ட அந்த பெண் ஓடி வந்தாள்.

துகாராமின் கால்களில் விழுந்து, 'ஐயா... இதைக் கொடுக்கும் போது குற்ற உணர்ச்சியால் தவித்தேன். இந்த அற்ப பாத்திரத்தை தங்கப் பாத்திரமாக கருதி பெரிய மனதுடன் ஏற்க வேண்டும் என வேண்டினேன். தங்களின் மகிமையால் தங்கமாகவே மாறி விட்டது' என்றாள். 'எவ்வளவு பெரிய மகானாக இருந்தால் இப்படி அதிசயம் நடக்கும்' என துகாராமை வணங்கினான் கருமி.

எல்லாப் புகழும் விட்டலனுக்கே என்ற மனநிலையில் இருந்தார் துகாராம்.

-தொடரும்

ஜி.எஸ்.எஸ்.,

98841 75874





      Our Apps Available On




      Dinamalar

      Follow us