Dinamalar-Logo
Dinamalar Logo


/ஆன்மிகம்/இந்து/கதைகள்/விட்டலனின் விளையாட்டு - 22

விட்டலனின் விளையாட்டு - 22

விட்டலனின் விளையாட்டு - 22

விட்டலனின் விளையாட்டு - 22

ADDED : ஆக 04, 2023 12:02 PM


Google News
Latest Tamil News
தரித்திரம் பரவாயில்லை... தங்கம் தேவையில்லை

ஸந்த் துகாராம் எழுதிய 'நாசவந்த தேஹ' என்று தொடங்கும் 'அபங்' பாடலின் பொருள்.

உடம்பு ஒருநாள் அழிந்து விடும். இந்த உண்மை தெரிந்தும் ஹரி நாமத்தை ஏன் உச்சரிக்காமல் இருக்கிறீர்கள்? சம்சாரம் என்னும் கடலில் இருந்து கரையேற்றி வைகுண்டத்தை அடைய இதுவே வழிகாட்டும். விட்டலனின் நாமத்தை விட உயர்ந்தது மூன்று உலகிலும் இல்லை. வேதங்களை விட உயர்ந்த நாமத்தை கோபாலன்தான் இலவசமாக நமக்கு கொடுத்திருக்கிறானே. அதை இப்போதே சொல்லி பயனடையுங்கள்.

...

'பானுதாசரின் கதையைக் கேட்கவே மகிழ்ச்சியாக உள்ளது. பண்டரிபுரத்தை விட்டுச் சென்ற விட்டலன் சிலையை மீண்டும் அங்கு அவரால் கொண்டு வர முடிந்தது என்றால் அவர் மீது விட்டலன் எவ்வளவு கருணை வைத்திருக்க வேண்டும்' என வியந்தாள் பத்மாசனி.

'பானுதாசரின் பாடல்களை மன்னர் முதல் எளிய மக்கள் வரை அனைவரும் பாராட்டினர். அவருக்கு மன்னர்கள் பலர் பெரும் தொகை கொடுத்து கவுரவித்தனர். அப்படி கிடைத்த பணத்தை சிதிலம் அடைந்த கோயில்களைப் புதுப்பிக்க தானமாக அளித்தார். இதனால்தான் விட்டலன் கோயிலில் இவருக்கு சிறப்பிடம் தரப்பட்டுள்ளது என்றார் பத்மநாபன்.

'அது என்னவோ?' எனக் கேட்டாள் பத்மாசினி.

'பாண்டுரங்கன் கோயிலுக்கு அருகில் இவரது சமாதி உள்ளது' என்ற பத்மநாபன் கண்களை மூடி பானுதாசரை மனதில் தியானித்தார். பின்னர் விட்டல பக்தரான வேறொரு மகானின் வரலாறைக் கூறத் தொடங்கினார்.

...

பண்டரிபுரத்தில் பாகவதர் ஒருவர் இருந்தார். சொற்பொழிவு ஆற்றும் அவர், விட்டலன் மகிமையை உணர்ச்சி பொங்க சொல்லி கேட்பவர்களை பக்தியில் ஈடுபடுத்துவார். அந்த பாகவதரின் மனைவி கமலாபாய். இருவரும் பாண்டுரங்கன், ருக்மிணி தேவியை தரிசிக்காத நாளே இல்லை. இவர்களின் பக்தியைக் கண்டு மகிழ்ந்த ருக்மிணி தேவி ஒருநாள் பாகவதருக்கு காட்சியளித்து, 'பக்தனே...உனக்கு என்ன வேண்டும்?' எனக் கேட்டாள்.

'என் மனைவியும் நானும் வறுமையால் வாடுகிறோம். ஊராரின் மதிப்பை சம்பாதித்தோமே தவிர பணத்தை சம்பாதிக்கவில்லை. எங்கள் தரித்திரம் தீர வழிகாட்டுங்கள் தாயே' என அழுதார் பாகவதர்.

ஒரு ரசவாதக் கல்லைக் கொடுத்து, ' இதை எந்த உலோகத்தின் மீது தேய்த்தாலும் அது தங்கமாகி விடும். ஆனாலும் நீ பேராசையுடன் செயல்படக் கூடாது' என்று சொல்லி மறைந்தாள் ருக்மிணி தேவி.

மகிழ்ச்சியடைந்த பாகவதர் அந்தக் கல்லை வைத்தபடி பிரமை பிடித்தவராக இருந்தார். அப்போது வெளியில் சென்றிருந்த கமலாபாய் வீட்டுக்குள் நுழைந்தாள். பாகவதர் இருக்கும் நிலையையும், அவரது கையில் இருந்த கல் குறித்தும் கேட்டாள்.

நடந்ததை பாகவதர் விவரிக்க மகிழ்ச்சியில் குதித்தாள். அடுப்படியில் இருந்த இரும்பு வாணலியை எடுத்து வந்தாள். ரசவாதக் கல்லால் தேய்க்க, அது தங்கமாக மின்னியது. அவள் முகம் பிரகாசமானது.

இப்போது பாகவதருக்கு குற்ற உணர்ச்சி ஏற்பட்டது. ருக்மிணி தேவியிடம் மோட்சம் குறித்து வரம் கேட்காமல் போனோமே என வருந்தினார். அத்துடன் பேராசைப்படாதே எனச் சொன்னதும் நினைவுக்கு வந்தது. மனைவியிடம் இது குறித்து சொல்லி எச்சரித்தாள்.

நாளடைவில் கல்லின் மகிமையால் ஆடம்பர வசதிகளை ஒவ்வொன்றாக அனுபவிக்கத் தொடங்கினர். ஒருநாள் தங்கச்சங்கிலி ஒன்றை அணிந்தாள் கமலாபாய்.

பக்கத்து வீட்டில் இருந்த விட்டல பக்தர்களான நாமதேவர், ராதாபாய் தம்பதியர் வறுமையால் சிரமப்பட்டனர். கமலாபாயும், ராதாபாயும் தோழியராக பழகி வந்தனர். இருவரும் தண்ணீர் எடுக்க ஆற்றங்கரைக்கு புறப்பட்டனர். வழியில் பல விஷயங்களைப் பேசிக் கொண்டாலும், கமலாபாய் கணவரின் எச்சரிக்கை காரணமாக ரசவாதக்கல் விஷயத்தை மட்டும் பேசவில்லை.

ஆனாலும் தங்கச்சங்கிலியைக் கண்டதும், 'இதை எப்போது வாங்கினாய் கமலா?

எப்படி உனக்கு இவ்வளவு பணம் கிடைத்தது?' என ராதாபாய் கேட்டாள். பதில் சொல்லாமல் மவுனமாக இருந்தாள். 'விரும்பாவிட்டால் என்னிடம் சொல்ல வேண்டாம். தோழி என்னும் உரிமையால் கேட்டேன்' என அழுதாள்.

அழுவதைப் பார்த்ததும் கமலாபாய் எதையும் மறைக்க விரும்பவில்லை.

நடந்ததை அப்படியே கூறினாள்.

அப்போது ராதாபாய் ஒரு கோரிக்கை விடுத்தாள். 'அந்தக் கல்லை எனக்கு ஒருநாள் கடனாகக் கொடு. நானும் என் கணவரும் வயிறு நிறைய சாப்பிட்டு பல நாளாகி விட்டது' என்றாள்.

'ராதா... அந்தக் கல்லை என் கணவருக்கு தெரியாமல் ரகசியமாக கொடுக்கிறேன். மறுநாளே என்னிடம் தந்து விடவேண்டும்' என்றாள். அதன்படியே வீட்டுக்கு வந்ததும் கல்லை தோழியிடம் ஒப்படைத்தாள்.

ராதாபாயும் அந்தக் கல்லை தன் வீட்டு இரும்புக் கரண்டியில் தேய்க்க அது தங்கமாக மாறியது. அதை விற்று தேவையான பொருட்களை வாங்கினாள். கணவருக்கு விருந்து படைக்க காத்திருந்தாள்.

வெளியே சென்ற நா​மதேவர் வீட்டுக்குள் வந்ததும், ' யாரிடமாவது கடன் வாங்கினாயா?' எனக் கேட்டார். தோழியிடம் இருந்து ரசவாதக்கல்லை வாங்கிய விபரத்தை தெரிவித்தாள் ராதாபாய்.

பணத்திற்கு அடிமையாக மாறிய மனைவியைக் கண்டதும் கோபம் கொண்டார் நாமதேவர். கல்லை எடுத்துக் கொண்டு ஓடிய அவர் சந்திரபாகா நதியில் வீசினார். கணவரின் பின்னால் ஓடி வந்த ராதாபாய் அதைக் கண்டு மனம் துடித்தாள்.

-தொடரும்

ஜி.எஸ்.எஸ்.,

aruncharanya@gmail.com





      Our Apps Available On




      Dinamalar

      Follow us