Dinamalar-Logo
Dinamalar Logo


/ஆன்மிகம்/இந்து/கதைகள்/வர்ணிக்க வார்த்தையில்லை

வர்ணிக்க வார்த்தையில்லை

வர்ணிக்க வார்த்தையில்லை

வர்ணிக்க வார்த்தையில்லை

ADDED : மே 27, 2018 04:03 PM


Google News
Latest Tamil News
பழநியில் ஒரு முருக பக்தர் வாழ்ந்தார். அவரது மூன்று வயது குழந்தை அம்மை நோயால் வாடியது. செய்வதறியாத அவர் பழநி முருகனின் சன்னதியில் குழந்தையை கிடத்தி, ''அப்பனே! பழநியாண்டவா! குழந்தையைக் காப்பாற்று'' என்று கதறினார். இரவு வந்தது.

சன்னதியிலே முருக நாமத்தை ஜபித்தபடி படுத்தார்.

காலையில் கண்விழித்த போது அதிசயம் நிகழ்ந்திருந்தது.

குழந்தையின் உடம்பில் இருந்த முத்துக்கள் அனைத்தும் மறைந்து விட்டன. ஆம்! அம்மையில் இருந்து குழந்தையை முருகன் காப்பாற்றி விட்டார். நோய் நீங்கியதால், மூன்று நாள் வேப்பிலை இட்ட நீரில் குழந்தையை நீராட்டினார்.

ஆனால், குழந்தையின் பார்வை பறி போனதை அறிந்த அவர் வருந்தினார். ஆனாலும், குழந்தை உயிர் பிழைத்ததே என்று ஆறுதல் அடைந்தார்.

பிற்காலத்தில் தமிழில் புலமை பெற்ற அக்குழந்தை, 'மாம்பழக் கவிச்சிங்க நாவலர்' என்னும் கவிஞராக புகழ் பெற்றார். பழநி முருகன் மீது அவர் பாடிய பாடல்கள் புகழ் மிக்கவை. ஒருநாள், சன்னதியில் அமர்ந்து பாடிக் கொண்டிருந்த போது பால்காவடி சுமந்தபடி பக்தர்கள் சிலர் வந்தனர். அவர்கள் எழுப்பிய, 'பழநியாண்டிக்கு அரோகரா' என்ற கோஷம் எங்கும் ஒலித்தது. அதைக் கேட்டு நாவலர் ஆனந்தக்கண்ணீர் சிந்தினார்.

அதைக் கண்ட ஒருவர், ''கண் இருப்பவருக்கே பழநியாண்டவனின் தரிசனம் கிடைப்பது சுலபம் இல்லையே! இப்படியிருக்க பார்வையில்லாத இவர் இங்கு என்ன செய்து கொண்டிருக்கிறார்?'' என்றார் ஏளனத்துடன்.

இதைக் கேட்ட நாவலர் உருக்கமுடன், ''சகல வசையும் ஒதுக்கி என்னைக் காப்பது என்ன மலை உனக்கு! அசைவில் மனத்தர் தொழும் பழநாபுரி ஆண்டவனே'' என்று பாடினார்.

பழநியாண்டவனுக்கு கருவறையில் செய்யும் பால், பன்னீர், பஞ்சாமிர்தம் அபிஷேகம் அனைத்தும் நாவலரின் மனக்கண்ணில் 'நேரலை' போலத் தெரிந்தது.

அப்படியே சன்னதியில் நடப்பதை பார்த்தது போல சொல்லத் தொடங்கினார். இதைக் கேட்டவர்கள் ஆச்சரியத்தில் மூழ்கினர். வம்பு பேசிய பக்தர் வாயடைத்து நின்றார். பழநியப்பனின் பெருமையை வர்ணிக்க வார்த்தை இன்றி தவித்தார் நாவலர். கண்ணிலே அன்பிருந்தால் கல்லிலே தெய்வம் வரும் என்பதை உணர்த்த, முருகன் நடத்திய திருவிளையாடல் இது.





      Our Apps Available On




      Dinamalar

      Follow us