Dinamalar-Logo
Dinamalar Logo


/ஆன்மிகம்/இந்து/கதைகள்/கூடி வணங்கினால் கோடி நன்மை

கூடி வணங்கினால் கோடி நன்மை

கூடி வணங்கினால் கோடி நன்மை

கூடி வணங்கினால் கோடி நன்மை

ADDED : நவ 13, 2016 12:23 PM


Google News
Latest Tamil News
ஒருமுறை விஸ்வாமித்திரர் வசிஷ்டரிடம், “ முனிவரே! உலக உயிர்கள் அனைத்தும் கடவுளை அடைய வேண்டும் என்பது என் ஆசை. இதற்காக மனம் ஒருமித்து தவம் இருக்க வேண்டும். நான் அப்படிப்பட்ட தவசீலன் என்பதால் தான் இறைவனை பார்க்க முடிந்தது. எனவே தவத்தின் பெருமை குறித்து பிரசாரம் செய்யப் போகிறேன். உலக மக்கள் என்னைப் பின்பற்றி கடவுளை அடைவார்கள்,” என்றார்.

வசிஷ்டர் சிரித்தார்.

“விஸ்வாமித்திரரே! நீர் ஒரு அவசர குடுக்கை. ஏற்கனவே, ஒரு அரிச்சந்திரனை உம் சுயநலத்துக்காகப் பாடாய்படுத்தினீர். இப்போது உலகத்தையே பாடாய் படுத்தப்போகிறீரோ! கடவுளை அடைய நினைப்பவன் தவம் இருக்க வேண்டும் என்று அவசியமே இல்லை. உலக மக்களால் தவம் செய்யவும்

முடியாது. உடலை வருத்தி இருக்கும் உண்ணாவிரதத்தால் கூட கடவுளை அடைய உதவுமா என்பது சந்தேகமே! வேண்டுமானால் குடும்பஸ்தர்கள்

கூட்டுப் பிரார்த்தனை செய்யலாம். இதுவே அவர்களை கடவுளிடம் சேர்ப்பித்து விடும்,” என்றார்.

இருவரும் நீண்ட நேரமாக வாதம் செய்தனரே தவிர, பிரச்னைக்கு தீர்வு வரவில்லை. எனவே, இருவரும் பிரம்மாவிடம் சென்றார்கள்.

பிரம்மா அவர்களிடம், “நான் படைப்புத்தொழிலில் ரொம்பவும் மும்முரமாக இருக்கிறேன். நீங்கள் சிவனைப் பாருங்கள்,” என சொல்லி விட்டார்.

சிவனிடம் சென்றார்கள் இருவரும். “என் பரமபக்தன் ஒருவன் பூலோகத்தில் மிகவும் கஷ்டப்படுகிறான். என்னை வருந்தி அழைத்தான். அவனைப்

பார்க்கப் போகிறேன். பெருமாள் தான் இது போன்ற விஷயங்களுக்கு தகுதியானவர். அமைதியானவர். உங்கள் கேள்விக்கு பொறுமையாக பதில்

சொல்வார்,” என்றார்.

பெருமாளிடம் ஓடினார்கள் இருவரும்.

“முனிவர்களே! இதற்கு எனக்கு பதில் தெரியுமாயினும், என்னை விட இதோ நான் படுத்திருக்கிறேனே ஆதிசேஷன், அவனுக்கு ஆயிரம் நாக்கு. நீங்கள் கேட்ட கேள்விக்கு ஒரு நொடியில் பதில் சொல்லி விடுவான்,” என்று தப்பித்துக் கொண்டார்.

அவர்கள் ஆதிசேஷனிடம் கேட்டனர்.

“முனிவர்களே! உங்கள் கேள்விக்கு என்னிடம் பதில் இருக்கிறது. ஆனால், அதைச் சொல்ல ஒரு நிபந்தனை. நான் தான் இந்த உலகைத் தாங்குகிறேன்.

இப்போது பாரம் அதிகமாக இருக்கிறது. பேசவே முடியவில்லை. இதை நீங்கள் குறைத்து வையுங்கள். பதில் சொல்கிறேன்,” என்றது.

விஸ்வாமித்திரர் தான் செய்த தவத்தில் நூறில் ஒரு பங்கை ஆதிசேஷனுக்கு கொடுத்தார். பாரம் இறங்கவில்லை. அவ்வளவு தவத்தையும் கொடுத்தார். ஓரளவு கூட அசையவில்லை. ஆனால், வசிஷ்டர் ஆதிசேஷனுக்கு, தன் சிஷ்ய கோடிகளுடன் செய்த கூட்டுப் பிரார்த்தனையின் பலனில் லட்சத்தில் ஒரு பங்கு தான் கொடுத்தார். ஆதிசேஷனின் பாரம் நீங்கி விட்டது.

விஸ்வாமித்திரர் தலை குனிந்தார்.

தவம், தியானம், விரதம் முதலானவை கடினமானவை. கூட்டுப் பிரார்த்தனை எளிமையானது. இது வீட்டில் ஒற்றுமையை வளர்க்கும். குடும்பத்துடன் வாரம் ஒரு நாளாவது கூட்டுப் பிரார்த்தனை செய்யுங்கள். கோடி நன்மை அடைவீர்கள்.




      Our Apps Available On




      Dinamalar

      Follow us