Dinamalar-Logo
Dinamalar Logo


/ஆன்மிகம்/இந்து/கதைகள்/மனைவி அமைவதெல்லாம்...

மனைவி அமைவதெல்லாம்...

மனைவி அமைவதெல்லாம்...

மனைவி அமைவதெல்லாம்...

ADDED : மே 11, 2018 01:57 PM


Google News
Latest Tamil News
காஞ்சிப்பெரியவரிடம் தன் மனைவியைப் பற்றி புகார் சொல்ல வந்தார் ஒரு பக்தர்.

''சுவாமி... என் மனைவி அடிக்கடி தலைவலின்னு படுத்துக்கறா. வீட்டு வேலை எதும் செய்யறதில்லை. குழந்தைகளைக் கவனிக்கறதில்லை. பெரும்பாலும் ஓட்டலில் தான் நான் சாப்பிடுறேன். அவளுக்கு உடம்பு படுத்தறது. அதனால....'' என்று சற்று இழுத்தார் பக்தர்.

''அதனால... என்ன செய்யறதா உத்தேசம்?'' என்று சுவாமிகள் சலனமற்று இருந்தார்.

''நீ இதை உன் சொந்தக்காராகிட்ட சொன்னா டைவர்ஸ் பண்ணிட்டு வேற கல்யாணம் பண்ணிக்கோன்னு சொல்வா. நண்பர்களிடம் சொன்னா, பிறந்த வீட்டுக்கு அனுப்பிடுன்னு சொல்வா. என்ன பண்ணப் போற? டைவர்சா? பிறந்த வீடா? உன் முடிவு என்ன?'

மனதில் ஓடும் எண்ணங்களை சுவாமிகள் புரிந்து விட்டதை எண்ணி பக்தர் திகைத்தார்.

''மனைவியைப் பத்தி புகார் சொல்றதுன்னா இனி என்னை தரிசிக்க வர வேண்டாம்!'' என்று சொன்னார் சுவாமிகள்.

பதறிப் போனார் பக்தர்.

''சுவாமீ.... இவ்வளவு பெரிய தண்டனையைக் கொடுக்கலாமா.... உங்களை தரிசனம் பண்ணாம இருக்க முடியுமா... என் பிரச்னையை சொன்னேன். அவ்வளவு தான். என்ன பண்ணணும்னு இப்பவே சொல்லுங்கோ.... உடனே பண்றேன்!''

''நிஜமாகவே உன் மனைவிக்கு உடம்பு சரியில்லை. உனக்கு உடம்பு சரியில்லைன்னா அவள் வீட்டை விட்டுப் போயிடுவாளா? இப்பவே நீ அவளிடம் ரெண்டு மடங்கு அன்போட பணிவிடை செய்வியா...... உன் குழந்தைக்கு உடம்பு சரியில்லைன்னா என்ன பண்ணுவே? டைவர்ஸ் பண்ணுவியா? இல்லை எங்கயாவது ஆதரவு இல்லாமல் கைவிடுவியா?'

பக்தர் விக்கித்து நின்றார்.

''தலைவலிக்கு என்ன வைத்தியமோ அதைப் பண்ணு. நல்ல டாக்டரா பாத்து அழைச்சுண்டு போ. நீ ஆதரவா இருந்தாலே, வியாதி பாதி குணமாயிடும். அவளை ஜாக்கிரதையா கவனிப்பது உன் பொறுப்பு. நோய்வாய்ப்பட்ட மனைவிக்குப் பணிவிடை பண்ணு. அவள் சீக்கிரம் குணமாயிடுவா.... மனைவி, குழந்தைகளோட நீ சவுக்கியமா இருக்கணும்'' என்று ஆசியளித்து குங்குமம் கொடுத்தார் சுவாமிகள்.

மனைவி அமைவதெல்லாம்.... இறைவன் கொடுத்த வரம் என உணர்ந்த பக்தரின் கண்களில் ஆனந்தக்கண்ணீர்!





      Our Apps Available On




      Dinamalar

      Follow us