Dinamalar-Logo
Dinamalar Logo


/ஆன்மிகம்/இந்து/கதைகள்/அம்பலத்தில் நிகழ்த்திய அற்புதம்

அம்பலத்தில் நிகழ்த்திய அற்புதம்

அம்பலத்தில் நிகழ்த்திய அற்புதம்

அம்பலத்தில் நிகழ்த்திய அற்புதம்

ADDED : அக் 20, 2016 11:54 AM


Google News
Latest Tamil News
காஞ்சி சங்கர மடத்தின் 58வது பீடாதிபதியான ஆத்மபோதேந்திர சரஸ்வதி சுவாமிகள், விழுப்புரத்தை அடுத்த வடவாம்பலத்தில் சமாதி அடைந்திருப்பதாக குரு பரம்பரை வரலாறு கூறுகிறது. இவர் சங்கர மடத்தில் 52 ஆண்டுகள் பீடாதிபதியாக இருந்தவர். இவரது சமாதி இருந்த இடம் இன்னதென அறிய முடியாமல் போனது.

இதை அறிய விரும்பிய காஞ்சிப்பெரியவர் அந்த கிராமத்திலுள்ள வயல்வெளி, தோப்புகளில் சுற்றி அலைந்தார். கடைசியாக ஓரிடத்தைக் குறிப்பிட்டு தோண்டிப் பார்க்க உத்தரவிட்டார்.

பெரியவருடன் வந்த கிராமத்தினர் பலமுறை அந்த குறிப்பிட்ட இடத்தில் தோண்டிப் பார்த்திருப்பதாகவும், சமாதியின் அடையாளம் ஏதும்

தென்படவில்லை என்றும், ஒரு கிணறு மட்டும் இருந்ததாகவும் தாங்கள் கண்டதைக் கூறினர்.

பெரியவர் வற்புறுத்தவே, மீண்டும் தோண்டும் பணி தொடங்கப்பட்டது. அந்த இடத்தில் ஆழமாகத் தோண்டியதும், ஒரு கபால அஸ்தி தென்பட்டது. அதைக் கண்ட சாம்பமூர்த்தி சாஸ்திரி என்பவர் 'தோண்டாதே நிறுத்து' என்று சொல்லி விட்டு மெய் மறந்து கீழே சாய்ந்தார். உடனே பணியாளர்கள் தோண்டுவதை நிறுத்தினர். மயக்கத்தில் இருந்த சாஸ்திரி வெகுநேரம் கழித்து சுயநினைவுக்கு வந்தார். தான் கண்ட அற்புதக்காட்சியை விவரித்தார்.

“காஷாய வஸ்திரம் (காவியுடை) உடுத்தி, கையில் தண்டம் ஏந்தி, நெற்றியில் திருநீறு அணிந்து, கழுத்தில் ருத்ராட்ச மாலையுடன் வானளாவிய நிலையில் பிரம்மாண்டமாக துறவியின் உருவம் என் கண் முன்னே காட்சி அளித்தது. அப்போது ஆயிரக்கணக்கான அந்தணர்கள் உபநிஷதத்தைப்

பாராயணம் செய்வதைக் கண்டேன். அந்த துறவி திடீரென்று,'தோண்டாதே நிறுத்து' என்று மெல்லிய குரலில் சொல்வதை நான் கேட்டேன். நானும் வேகமாக 'தோண்டாதே நிறுத்து' என்று கூறினேன். அதன் பின் யாரோ ஒருவர், “சாம்பசிவம் சாம்பசிவம்” என்று சொல்வது என் காதில் ஒலித்தது” என்றார்.

சாம்பமூர்த்தி சாஸ்திரியின் அனுபவத்தைக் கேட்ட அனைவரும் ஆச்சரியத்தில் ஆழ்ந்தனர்.

பெரியவரிடம், “சுவாமி... நாங்கள் மேற்கொண்டு என்ன செய்ய வேண்டும்” என்று கட்டளையிடும் படி வேண்டினர். அந்த குறிப்பிட்ட இடம் காஞ்சிபுரம் மடத்திற்கு சாசனமாக்கப்பட்டது. ஆத்ம போதேந்திர சரஸ்வதி சுவாமிக்கு அங்கு அதிஷ்டானம் கட்டப்பட்டு, 1927 ஜனவரி 17ல் பிரதிஷ்டை செய்யப்பட்டது. வடவாம்பலத்தில் காஞ்சிப்பெரியவர் நிகழ்த்திய இந்த அற்புதத்தை எண்ணியபடி பக்தர்கள் பக்தியுடன் அதிஷ்டானத்தை வலம் வந்தனர்.

நீலக்கல் சி.என்.முத்துசுவாமி சாஸ்திரி





      Our Apps Available On




      Dinamalar

      Follow us